ஆடி மாதத்தில் லஞ்சமாக ஆடி கார்!

குமரி மாவட்ட காவல்துறை வட்டத்தில் இதுதான் ஹாட் டாபிக். ஓய்வுபெற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் மற்றும் குட்கா புகழ் அமைச்சரின் பெயரைக் கொண்ட மாவட்ட காவல்துறை உச்ச அதி காரிகள் இருவர்தான், இதன்மூலம் பலனடைந்தவர்கள்.

ss

இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ""கேரள மாஃபியாக்களும், உள்ளூர் மாஃபியாக்களும் குமரி மாவட்ட கல்குவாரிகளில் இயற்கைவளத்தை அழித்து கனிமவளங்களை கேரளாவுக்கு கடத்துகின்றனர். இதைத் தடுக்கும் விதமாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளால், கல்குவாரிகள் மூடப்பட்டன. கனிம வளங்கள் திருடப் படுவதும் தடைப்பட்டது.

Advertisment

இந்நிலையில், சிதறால் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான, தமிழ்க்கடவுளின் பெயரில் ஓடும் டாரஸ் வண்டிகள், நெல்லையில் இருந்து கனிமவளங்களை குமரி வழியே கேரளாவிற்கு கொண்டு சென்றன. தினந்தோறும் மாவட்ட போலீசார் இந்த வண்டிகளை மடக்கிப்பிடிப்பது வாடிக்கை யானது. அதற்கு தீர்வுகாணவே "ராஜ்ஜியம்' படத்தில் விஜயகாந்தின் பெயரைக் கொண்ட டி.எஸ்.பி. மூலம் ஆடி (ஆமஉஒ) கார் டீலிங் நடந்திருக்கிறது. ரூ.82 மற்றும் ரூ.60 லட்சம் மதிப்புள்ள இரண்டு வெள்ளைக்கலர் ஆடி கார்கள் மதுரையிலிருந்து இறக்கப் பட்டன.

அதன்பிறகு, கனிமவளங்களோடு பறக்கும் டாரஸ் வண்டிகளைப் பிடிக்கும் போலீசாருக்கு டோஸ் விட்டு, அவர்களை வைத்தே சல்யூட் அடிக்க வைத்துவிட்டனர்'' என்று ஆதங்கப்படுகிறார்கள்.

வழக்கறிஞர் ஹோமர் லால் கூறுகையில், ""பல்வேறு குற்றச் சம்பவங்களின் புகலிடமாக குமரி மாவட்டம் மாறிவருகிறது. அதைத் தடுக்கவேண்டிய காவல் துறையின் உயரதிகாரிகள், லஞ்சப் பேய்களாக இருப்பது காவல்துறைக்கே அசிங்கம். இதில் உடனடியாக நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்று வலியுறுத்து கிறார். இதுகுறித்து சம்பந்தப் பட்ட காவல்துறை அதிகாரி களிடம் பேசினோம். நம் மிடம் கோபப்பட்டார்களே தவிர, எந்த விளக்கமும் தரவில்லை.

Advertisment

-மணிகண்டன்

அ.ம.மு.க.வில் இணைந்தால் சொம்பு!

ssa

""முக்கிய நிர்வாகிகள் பலரும் கழன்றுவிட்டதால்,மக்களுக்கு நம்மீதான நம்பிக்கை குறைந்துவருகிறது. ஆகையால், போனவர்கள் மட்டுமே அ.ம.மு.க. இல்லை என்பதை நிரூபித்தே தீரவேண்டும்'' என்று உருக்கமாகவே பேசியிருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்.

விட்டுச்சென்ற நிர்வாகிகளின் இடத்தில் தன்னை நிரப்பிக்கொள்ள நினைத்த திருவள்ளூர் மத்திய மா.செ. லக்கிமுருகன், முதல்கட்டமாக சென்னையின் பிரம்மாண்டமான ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் இணைப்புவிழாவை டி.டி.வி. தலைமையில் நடத்தி னார். அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய ஜனநாயகக் கட்சி, ரஜினி மக்கள் மன் றம் என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற் பட்டோர் அ.ம.மு.க.வில் இணைய வந்திருந்தனர்.

‘அந்தந்த கட்சிகளைச் சேர்ந்த ‘இணைப்புப்’ பொறுப்பாளர்களுக்கு நிபந்தனையற்ற நிதியுதவி தரப்படும். ஆனால், குறைந்தது நூறுபேரை யாவது கூட்டிவர வேண் டும்’ என்ற ஒப்பந்தம் முன் கூட்டியே போடப்பட்டிருந்தது. அதன்படியே கூட்டமும் கூடியது. வந்த வர்களில் பலர் இளைஞர் களாக இருந்ததால், நமக்கே ஆச்சர்யமாக இருந்தது.

ஜோதி என்ற இளைஞரிடம் பேச்சுக் கொடுத்தபோது, “""நான் பாடி பா.ம.க.வைச் சேர்ந்தவன். இன்னைக்கி காலேஜ் லீவு. அதனால, 60 பேர் வந்திருக் கோம். சும்மா டைம்பாஸ்ணா''’ என்றார்.

இன்னொரு குரூப்பிடம் கேட்கையில், “""எங்களுக்குக் கட்சிப் பின்புலமெல்லாம் கிடையாது. சும்மா ஜாலியா இருக்குமேன்னு வந்தோம்'' என்றனர். பெண்கள் ஏரியாவில் ராமாபுரத்தைச் சேர்ந்த மயிலு, ""கட்டிக்க சேலையும், வெண்கல சொம்பும் தர்றதாக சொல்லிக் கூட்டியாந்தாங்க'' என்றார் வெள்ளந்தியாக.

ஜாலியாக கட்சியில் இணைந்தவர்களால் உற்சாகம் பிறக்குமா என்ன?

-அ.அருண்பாண்டியன்

உதயநிதி எண்ட்ரி! அமைச்சர்கள் ஆப்செண்ட்!

ssa

சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு, சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டவர் தீரன் சின்னமலை. கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயத்தினர் தங்களின் அடையாளமாக இவரை எண்ணி பெருமைகொள்கின்றனர்.

தீரன் சின்னமலை பிறந்தது ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகேயுள்ள ஓடாநிலையில். ஒவ்வொரு ஆண்டும் அவரின் நினைவுதினமான ஆடி 18-ல் சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் தீரன் சின்னமலைக்கு அஞ்சலிசெலுத்தும் விதமாக, இங்குவந்து அவரது சிலைக்கு மலர்மரியாதை செலுத்துவது வழக்கம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சராக இருந்த காலத்தில் ஆண்டுதோறும் ஓடாநிலை வந்து, சின்னமலைக்கு மரியாதை செலுத்திவந்தார். ஆனால், அவர் முதல்வராக பதவியேற்ற கடைசி இரண்டு ஆண்டுகளாக ஓடாநிலையை எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு நினைவுதின நிகழ்வில் அ.தி.மு.க. அமைச்சர்கள் பத்துபேர் கலந்துகொண்டு சிறப்பு செய்வார்கள் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அமைச்சர் செங்கோட்டையன் மட்டுமே கலந்துகொண்டு, சில நிமிடங்களில் பறந்துவிட்டார். அமைச்சர்கள் பலரும் வேலூர் தேர்தலில் பிஸியாக இருந்துகொண்டு, தீரன் சின்னமலையை மறந்துவிட்டார்கள் என்று அச்சமுதாயத்தினர் கொந்தளித்தனர்.

இன்னொருபுறம், தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் கலந்துகொண்டு, மரியாதை செலுத்தியது கவனம் பெற்றது. கொங்குமண்டலத்தில் தி.மு.க. வீக்காக இருப்பதாக பேசப்படும் நிலையில், உதயநிதியின் இந்த விசிட் கொங்கு மண்டல தி.மு.க.வினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

""டி.டி.வி.தினகரனே நேரில்வந்து விசுவாசத்தைக் காட்டும்போது, சொந்த சமுதாய அமைச்சர்கள் இப்படி அவமானப்படுத்தி விட்டார்களே'' என்று கொங்கு சமுதாய அ.தி.மு.க. ர.ர.க்கள் புலம்புகிறார்கள்.

-ஜீவாதங்கவேல்