"நேர்மையைக் குப்பையில் போடு' -அதிகாரிக்கு மிரட்டல்!

லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடும் அரசுத்துறைகளில் நேர்மை தவறாமல் பணியாற்ற வேண்டும் என்கிற கொள்கை உறுதிகொண்டவர்கள் படும்பாடு இருக்கிறதே...

signalநெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சிவகிரி பிரிவு (நெல்லை மாவட்டம்) அலுவலகத்தில் இளநிலைப் பொறியாளராக இருக்கிறார் மு.மாரிமுத்து. சம்பளம் வாங்கினாலும் அரசுப்பணி என்பது மக்களுக்கு ஆற்றிடும் சேவை என்பதை மனதில் நிறுத்தியே, தனது வேலைகளைச் செவ்வனே செய்துவருகிறார்.

நெடுஞ்சாலைத்துறையில் சுமார் ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலங்கள் மற்றும் சாலைப்பணிகள் நடைபெறவுள்ளன. இப்பணிகளை 60 சதவீதம் மட்டுமே தரமானதாகச் செய்வார்கள். ஆனால், 100 சதவீத தரத்தோடு வேலை நடந்ததாக, இளநிலைப் பொறியாளர் மாரிமுத்து எழுதித்தந்தாக வேண்டும். கொள்கையை விட்டுவிடாத பொறியாளர் ஆயிற்றே! அசுரபலம் வாய்ந்த இத்துறையினரை, தனிஒருவனாக எதிர்கொள்வதற்கு இது ஒன்றும் சினிமா அல்லவே! 126 நாட்கள் விடுப்பில் செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

Advertisment

விடுப்பு முடிந்து வந்தவரிடம், "உன் நேர்மையைக் கொண்டுபோய் குப்பையில போடு... உனக்குரிய பங்கை வாங்கிக்கிட்டு சொல்லுற இடத்துல கையெழுத்துப் போடறதுன்னா வேலையைப் பாரு. இல்லைன்னா... திரும்பவும் லீவு எடுத்துட்டு ஓடிப்போயிரு' என்று நெருக்கடி தந்திருக்கின்றனர். செய்வதறியாது மீண்டும் விடுப்பு எடுத்துச் சென்றுவிட்டார்.

இளநிலைப் பொறியாளர் மாரிமுத்துவைத் தொடர்புகொண் டோம். ""இதுகுறித்து நான் எதுவும் சொல்வதற்கில்லை'' என்று தயங்கினார் ஜீவனற்ற குரலில்.

இத்தனைக்கும் இவர், நெடுஞ்சாலை ஆய்வாளர் சங்கத்தின் கவுரவ பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். அவருக்கே இந்த நிலை!

Advertisment

-ராம்கி

கொத்தடிமைகளான அரசுப் பணியாளர்கள்!

தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 400-க்கும் மேற்பட்ட விடுதிகள் (ஹாஸ்டல்கள்) இயங்கிவருகிறது. சென்னையில் மட்டும் 22 விடுதிகள் உள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் வார்டன், சமையல்காரர்கள், உதவியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவலர்கள் என சுமார் 10 பேர் பணிபுரிகின்றனர்.

அவர்களைப் பணிசெய்ய விடாமல் அரசு அதிகாரிகளின் சொந்த வேலைகளுக்கு, கொத்தடிமை போல பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் அத்துறையில் எழுந்துள்ளன. இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆதிதிராவிடர் நலத்துறை பணியாளர்கள், “""சென்னையில் விடுதிப் பணியாளர்களை, அரசு உயரதிகாரிகளின் சொந்த வேலைக்காக அனுப்பி வைத்துவிடுகிறார் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் எங்கள் துறையின் ஆர் 2 கிளர்க் நந்தகோபால். விடுதிப் பணியாளர்களின் சர்வீஸ் ரெக்கார்டுகள் நந்தகோபாலின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பணியாளர்கள் பலருக்கும் அவரைக் கண்டாலே அச்சம். இதை அவர் வாய்ப்பாக்கிக் கொள்கிறார்.

ஆதிதிராவிடர் நலத்துறையின் முன்னாள் இயக்குநரான ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசண்முகராஜா, சென்னை அண்ணாநகரில் கட்டிவரும் புதிய வீட்டின் கட்டுமானப் பணிகளுக்கு விடுதிப் பணியாளர்கள் 9 பேரை (அருள்பிரசாத், பிரவீந்தன், ரமேஷ், சுரேஷ்பாபு, சரவணன், அமுதா, நாகராணி, சுகுணா, பாலகிருஷ்ணன்) அனுப்பி வைத்துள்ளார் நந்தகோபால்.

ஆள் பற்றாக்குறையால் விடுதிப் பணிகளும் பாதிக்கப்பட்டு, கட்டுமான பணிகளை செய்யமுடியாமல் அவர்களும் நொந்துபோகிறார்கள்.

இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தமிழகம் முழுவதும் நடந்துவரும் இந்தக் கொடுமையைத் தடுத்து, இதற்கு கடிவாளம் போடவேண்டிய மாவட்ட கலெக்டர்களோ கண்டுகொள்ள மறுக்கிறார்கள்'' என்று குமுறுகின்றனர்.

-இளையர்

கழிவறைத் திட்டத்தில் ரூ.1 கோடி ஊழல்!

ss

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி ஒன்றிய பகுதிக்குட்பட்ட கிராமங்களில், ஏழை மக்களுக்கு தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் தனி கழிவறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை, மத்திய அரசு நிதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு.

கழிவறை ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள் ளது. இந்தக் கழிவறை கட்டு வதற்கு மொத்தமாக ஒப்பந் தம் எடுத்த காண்ட்ராக் டர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு, பலநூறு குடும்பங்களுக்கு கழிவறை கட்டித்தந்ததாக பொய்க்கணக்கு காட்டியுள்ளனர். பல இடங்களில் வெறும் சுவர்கள் மட்டுமே எழுப்பப்பட்டுள்ளன. இதையறிந்த பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

காட்டுமன்னார்குடி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டத்தை முன்னெடுத்த விவசாய தொழிலாளர் சங்கத்தின் கடலூர் மா.செ. பிரகாஷ், ""கழிவறை கட் டித் தருவதாகக் கூறி ஏழைமக்களை ஏமாற்றியுள்ளனர். காண்ட்ராக்டருக்கும், வட்டார வளர்ச்சி அதிகாரிக்கும் இடையே கொள்ளையடித்த பணத்தைப் பங்கிடுவதில் ஏற்பட்ட மோதலால்தான் விஷயம் வெளிவந்திருக்கிறது. அனைத்து மக்களுக்கும் கழிவறை கட்டித்தர வேண்டும். முறைகேட்டில் தொடர்புடைய அனைவரின் மீது நடவடிக்கை பாயவேண்டும். அதுவரை ஓயமாட்டோம்'' என்றார் உறுதியுடன்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவ ரிடம் பேசியபோது, ""கழிவறைத் திட்டத்தில் முறைகேடு நடந்தது உண்மைதான். ஆனால், ரூ.1 கோடி அளவுக்கு இல்லை. மாவட்ட ஆட்சியர் கொடுத்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டர் மீது வழக்குப் பதியப் பட்டுள்ளது. உடந்தையாக இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் முறைகேடாக சேர்த்த பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, துறைரீதியிலான விசாரணையும் நடந்துவருகிறது'' என்றார்.

ஊழல் அதிகாரிகள் களையப்பட வேண்டியவர்கள்!

-காளிதாஸ்