தினகரன் கட்சியில் திருடனுக்கு பதவி!
விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில், அடிக்கடி இரவு நேரங்களில் வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடப்பதாக போலீசில் புகார் குவிந்தது. கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்தார் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார். தீவிர தேடுதல் வேட்டையில், சங்கராபுரம் அருகேயுள்ள உலகளப்பாடியைச் சேர்ந்த கொர ராஜா என்கிற ராஜியை மோப்பம் பிடித்து நெருங்கியது தனிப்படை.
போலீசைக் கண்டதும், "நான் யார் தெரியுமா? பெரிய வி.ஐ.பி., ரூ.2 கோடியில் வீடு கட்டியுள்ளேன். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன் தினகரன்தான் திறப்புவிழா நடத்த இருக்கிறார்' என்று உதார் விட்டிருக்கிறார் ராஜி. அவரைப் பக்குவமாகப் பேசி காவல்நிலையம் அழைத்துச்சென்று, ட்ரீட்மெண்ட் கொடுத்தது காவல்துறை.
இதில் உண்மையை ஒப்புக்கொண்டவர், வீட்டில் வைத்திருந்த 232 கிராம் உருக்கப்பட்ட தங்கத்தை ஒப்படைத்தார். கொள்ளையடித்த தங்கத்தின் அடையாளம் தெரியாமல் இருக்கவே இந்த டெக்னிக்காம். ஏற்கனவே, கொள்ளை வழக்குகளில் சிறைசென்றவர் ராஜி. அவரது கைரேகைதான் அவரைச் சிக்கவைத்திருக்கிறது.
டிடி.வி.தினகரனின் அ.ம.மு.க.வில் விழுப்புரம் தெற்கு மா.து.செ. பொறுப்பில் பந்தாவாக வலம்வந்தவர்தான் இந்த ராஜி. திருடிய பணத்தில் பங்களா, கார் என பகட்டான தோரணை போதாதென்று, கூட்டத்தையும் கூட்டிக்கொண்டு கட்சிப்பதவி வாங்கியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் சேலம்வந்த தினகரனை வரவேற்க கட்சிக்கொடி கட்டிய காரில் சென்றபோதுதான் பிடிபட்டார்.
"திருடனாகவே இருந்தாலும் கூட்டத்தைக் கூட்டினால் கட்சிப் பதவி கொடுத்துவிடுவாரா தினகரன்?' எனக் கேட்கின்றனர் பொதுமக்கள். திருடனுக்குத் தேள் கொட்டினாற்போல் பேச்சுமூச்சு காட்டாமல் கமுக்கமாக இருக்கின்றனர் அ.ம.மு.க.வினர்.
-எஸ்.பி.சேகர்
காலைப் பிடித்து கதறிய தொண்டன்!
ஜூலை 17-19 தேதியிட்ட நக்கீரன் இதழில், "வேட்டு வைக்கும் கோஷ்டி தொல்லை! நெல்லை தி.மு.க. ரணகளம்!' என்கிற தலைப்பில், நெல்லை மா.செ. சிவபத்மநாபனின் ஆதரவாளர்களால் நகரின் மூத்த நிர்வாகி பரமசிவன் மண்டை உடைக்கப்பட்டது பற்றி செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த இதழ் வெளியான சில நிமிடங்களிலேயே நெல்லை மாவட்ட தி.மு.க.வில், தாக்கம் காட்டுத்தீயாய் பரவியது. மா.செ. சிவபத்மநாபனைக் கண்டித்து கண்டனப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அறிவாலயம் சார்பில் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், வழக்கறிஞர் முத்துகுமார் கொண்ட இருநபர் விசாரணைக்குழு அனுப்பி வைக்கப்பட்டது.
விசாரணைக்குழு முன்னாள் மாவட்ட வர்த்தகஅணிச் செயலாளர் முத்துகுமார், மேற்கு மாவட்ட பொருளாளரான வடகரை ஷேக் தாவூத், துணைத்தலைவர் தென்காசி ஆயான் நடராஜ் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், சிவபத்மநாபனின் காழ்ப்புணர்ச்சி செயல்பாடுகள், அவரது ஆதரவாளர்களின் அடாவடி என அனைத்தும் வெளிப்பட்டது.
இந்த விவகாரத்தில் தன்மீது புகார் கொடுத்துள்ளதால், ஜாமீன் பெறும் வகையில் தலைமறைவாக இருக்கும் பரமசிவத்தைச் சந்தித்தது விசாரணைக்குழு. அவர்களிடம், ""விவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து தி.மு.க.வில் வேலைசெய்து, இன்றைக்கு சாதாரண தொண்டனா இருக்கேன். ‘"உங்க ஆதரவாளரான ஒ.செ. அன்பழகனும், அவரது தரப்பும் பினாமி அரசியல் பண்றாங்க. தேர்தல்லேயும் சரியா வேலை பார்க்கலை. அவரை விசாரிக்கணும்'னு, மா.செ. சிவபத்ம நாபன்கிட்ட மனு கொடுத்தேன். அதுமேல நடவடிக்கை எடுக்கலையான்னு கேட்டதுக்காக வயசாளின்னு கூடப் பார்க்காம, இந்த நிலைமைக்கு தள்ளிட்டாங்க'' என்று காலில் விழுந்து கதறியிருக்கிறார் பரமசிவம்.
எதிர்பாராத இந்தச் சம்பவம் விசாரணைக்குழுவைக் கலக்கியிருக்கிறது. நடவடிக்கை நிச்சயம் என்கிறார்கள்.
-பரமசிவன்
படங்கள் : ராம்குமார்
காங்கிரசுக்கும் பெரியார்தான் பாட்டனார்!
காரைக்குடி பாரதிதாசன் தமிழ்ப் பேரவையின் 27-ம் ஆண்டு புரட்சிக்கவிஞர் விழா சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் நினைவு மணிமண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாமேடையில் திராவிடர் கழக கவிஞர் கலி.பூங்குன்றன், தி.முக.வின் தென்னவன் உள்ளிட்டோர் பங்குபெற்றிருக்க, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
விழாவில் தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொகுத்து எழுதிய "தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்' நூல் வெளியீட்டு விழாவும், மறைந்த தி.பெரியார் சாக்ரடீசு பெயரில் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது. பாரதிதாச னின் கவிதைகளை நினைவு கூர்ந்து பேசினார்கள் மைக் பிடித்தவர்கள்.
இறுதியாக பேசிய ப.சிதம்பரம், ""கருப்புச்சட்டை இயக்கத்தினர் நடத்தும் பாரதிதாசன் விழாவில் கதர் சட்டைக்காரர் கலந்து கொள்கிறாரா? என்று கேட்டவர்களுக்கு சொல்கிறேன். இரண்டு கட்சிக்கும் தந்தை பெரியார்தான் பாட்டன். கதர் சட்டை போட்டுக்கொண்டு தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி தலைவராக இருந்த பெரியார், பின்னாளில் கருப்புச்சட்டை இயக்கத்திற்கு தலைமை ஏற்றார். அந்தவகையில் திராவிடக் கட்சிகளான தி.க.விற்கும், தி.மு.க. விற்கும் மட்டுமல்லாது காங்கிரசுக்கும் அவர்தானே பாட்டனார். அவர் வழியில் இருக் கின்ற பேரப்பிள்ளைகள் நாம்'' என்றார்.
மேலும், “""மூவாயிரம் ஆண்டுகால பெருமைமிக்க தமிழ்மொழி, அடுத்துவரும் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் நிலைத்து நிற்க நாம் ஒன்றுபட்டு பாடுபடவேண்டும். செந்தமிழ் செழுந்தமிழாக வர வேண்டும் எனில், சீனமொழி, ரஷ்ய மொழியைப் போல விஞ்ஞானம், தொழில்நுட்பம் எல்லாமே தமிழ்மொழியில் விளக்கிச் சொல்லும் நிலையும், பாடமாக நடத்தக்கூடிய நிலை யும் ஏற்பட வேண்டும்'' என தமிழையும், திராவிடத்தையும் உயர்த்திப் பேசினார் ப.சிதம்பரம்.
-நாகேந்திரன்