Skip to main content

சிக்னல்!

நான் -நீ -இந்த உலகம்!

signalதெலுங்கில் புகழ்பெற்ற கவிதை வடிவமான "நானிலு'’தமிழில் "தன்முனைக் கவிதை' என்ற பெயரில் உருவாகியிருக்கிறது. "நானிலு' எனப்படும் இந்தத் தன்முனைக் கவிதை வடிவத்தில், 31 கவிஞர்கள் எழுதிய 465 கவிதைகளின் தொகுப்பான "நான் நீ இந்த உலகம்'’ என்ற நூலை கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம் தொகுக்க, அதை ஓவியா பதிப்பகம் சார்பில் வதிலை பிரபா பதிப்பித்திருக்கிறார். இதன் வெளியீட்டு விழா 1-ந் தேதி மாலை சென்னை -எழும்பூரில் உள்ள இக்சா அரங்கில் அரங்கேறியது.

விழாவிற்குத் தலைமை ஏற்று, நூலை வெளியிட்டுப் பேசிய கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் ‘""நவீன கவிஞர்கள் என்கிற பெயரில் இருக்கும் சிலர், தமிழ்க் கவிதைகளைக் காப்பாற்றுவதாகச் சொல்லிக்கொண்டு அவற்றின் கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கிறார்கள். கவிதைகள் மனிதத்துக்கு அரண் செய்வதாகவும், மானுட ஈரத்தைக் காப்பதாகவும் இருக்க வேண்டும். மனிதர்களிடையே, அன்பை வளர்த்து மனிதத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன''’என்றார். பண்ணைத் தமிழ்ச்சங்கத் தலைவர் கவிக்கோ துரை.வசந்தராசனோ கொள்கையற்ற இலக்கியங்களைச் சாடினார். கவிஞர் வெற்றிப்பேரொளி, ""நீடாமங்கலத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர் மறையரசன்தான், பிள்ளைத்தமிழ்’ போல் ’முதுமைத்தமிழ்’ என்ற சிற்றிலக்கிய நூலைத் தமிழில் முதன்முதலில் படைத்தார். அதுபோல் இது தமிழுக்குப் புதுநூல்'' என்றார்.

தமிழின் முதல் தன்முனைக் கவிதைத் தொகுப்பு நூலின் வெளியீட்டு விழா இலக்கிய ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது.

-சூர்யா

தூக்கமாத்திரை விழுங்கிய லேடி இன்ஸ்பெக்டர்!

signalதமிழகக் காவல்துறையில் மதுவிலக்குப் பிரிவு என்பது பொன்முட்டையிடும் பிராய்லர் கோழி. அதிலும் ஆந்திரா, புதுச்சேரி, காரைக்காலை ஒட்டிய பகுதிகளில் மதுவிலக்குப் பிரிவுகளில் போஸ்டிங் கிடைத்தால் பெட்ரோல் கிணறே கிடைத்ததுமாதிரிதான்.

அப்படியொரு ஏரியாதான் நாகை மாவட்டம். அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் தயவில் நாகை மாவட்ட மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி.யாக சுவாமிநாதன் வந்தார். நாகை மாவட்டத்திற்குட்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு இன்ஸ்பெக்டராக சுகுணா வந்தார்.

இருவர் மீதும் பக்கம் பக்கமாய் பட்டியல் போடும் அளவுக்கு புகார்கள் உண்டு. டி.எஸ்.பி. சுவாமிநாதனுக்கும் இன்ஸ்பெக்டர் சுகுணாவுக்கும் இடையில் கலெக்ஷன் யுத்தம் ஆரம்பமானது.

காரைக்காலில் இருந்து சரக்கோடு வந்த காரை மடக்கியிருக்கிறார் இன்ஸ் சுகுணா. ஒரு "எல்'லை தூக்கியெறிந்துவிட்டுப் பறந்தது கார். விஷயம் டி.எஸ்.பி.யின் காதுக்குச் சென்றது.

""வண்டி எங்கே? யாருடையது? சரக்கு எங்கே? கேஸ் போட்டாச்சா?'' என்று இன்ஸ் சுகுணாவைத் துளைத்தெடுத்தார் டி.எஸ்.பி. "நான் எந்த வண்டியையும் மடக்கவில்லை. யாரிடமும் எதுவும் வாங்கவில்லை' என்று சாதித்தார் இன்ஸ்.

இன்ஸ். சுகுணாவைப் பற்றிய ஊழல் பட்டியலைத் தயாரித்து எஸ்.பி.சேகர் தேஷ்முக்கிற்கு அனுப்பியதாம் டி.எஸ்.பி. தரப்பு. விளைவு? இன்ஸ்.சுகுணாவை நாகை ஆயுதப்படைக்கு மாற்றினார் எஸ்.பி. மனஉளைச்சலுக்கு ஆளான சுகுணா, தூக்கமாத்திரைகளை விழுங்கி, எல்லோரையும் பதட்டப்படுத்திவிட்டார். இதையறிந்த எஸ்.பி., "என்னையே மிரட்டுகிறாயா?' என நினைத்து இன்ஸை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்துவிட்டார்.

இப்போது டி.எஸ்.பி. சுவாமிநாதன் மீது, பட்டியல் தயாரித்து அனுப்பியிருக்கிறதாம் காத்திருப்பு இன்ஸ்.சுகுணா தரப்பு.

-செல்வகுமார்

தமிழில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

signal

உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 13-ஆவது மாநாடு, இந்தியாவில் முதன்முறையாக பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் நடந்தது.

அமெரிக்கா, பிரான்ஸ், இலங்கை, தென்ஆப்ரிக்கா உட்பட 9 நாடுகளைச் சேர்ந்த 47 பேரும், தமிழகம் -கர்நாடகத்தை சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

தமிழ்மொழி, கலாச்சாரம் சார்ந்த ஆய்வரங்கம், கவியரங்கம், பட்டிமண்டபம், கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம் என பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடந்தன.

மாநாட்டில், உச்சநீதிமன்றத் தமிழ் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் ராம்சங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

""உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் வழங்க வேண்டும் என்று தலைமை நீதியரசரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தோம். அவ்வாறு செய்வதன் வாயிலாக, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை தமிழக மக்களும் படித்துத் தெரிந்துகொள்ள முடியும். எங்கள் இடைவிடாக் கோரிக்கையை ஏற்று தீர்ப்புகளைத் தமிழிலும் வெளியிட விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்'' என பலத்த கரகோஷத்திற்கிடையே கூறினார் ராம்சங்கர்.

-கீரன்

விவசாயியை சாகடித்த வங்கி ஊழியர்கள்!

signalவிவசாயி தமிழரசனின் தற்கொலை, கடலூர் மாவட்ட விவசாயிகளைக் கொந்தளிக்க வைத்துவிட்டது.

காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள கருநாகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன். போன புதனன்று காலையில் வயலுக்குப் போனார். மதியம் திரும்பும் வழியில் ஊர்க்காரர்கள் சிலர் ""பேங்க்காரங்க வந்து உன் டிராக்டரை ஜப்தி பண்ணிட்டுப் போயிட்டாங்க'' என்று விஷயத்தைச் சொன்னார்கள். மன உளைச்சலோடு வீட்டுக்குள் நுழைந்த தமிழரசனிடம், மனைவி வளர்மதி கண்ணீரோடு நடந்ததைச் சொன்னார். ஒருமணி நேரம், வயலுக்குச் சென்றார்... வயலிலேயே விஷத்தைக் குடித்துவிட்டார்.

சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினர். வெள்ளியன்று இறந்துவிட்டார் தமிழரசன்.

உறவினர்களும் விவசாய சங்கத்தினரும் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய சங்கங்களுடன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கோட்டாட்சியர் தலைமையிலான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். காலை 10:00 மணிக்குத் தொடங்கிய கூட்டம் இரவு 11 மணிவரை நீண்டது. கடைசியில் வங்கி நிர்வாகம் தமிழரசன் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணமும், ஈமச் சடங்குச் செலவுக்காக 50 ஆயிரம் தருவதோடு டிராக்டர் கடன் பாக்கியைத் தள்ளுபடி செய்வதாகவும், பறிமுதல் செய்த டிராக்டரை திருப்பி ஒப்படைப்பதாகவும் ஒப்புக்கொண்டது.

இதன்பிறகே ஞாயிறன்று, விவசாயி தமிழரசனின் இறுதிச் சடங்குகள் நடந்தன.

கோட்டக் மஹிந்திரா வங்கியின் தாதாகிரித்தனம் பற்றி நம்மிடம் பேசிய காவிரி டெல்டா பாசன விவசாய சங்கத் தலைவர் இளங்கீரன் ""பழைய டிராக்டரை கொடுத்துவிட்டுத்தான் 5 லட்சத்து 13 ஆயிரத்திற்கு புதிய டிராக்டரை கடனுக்கு வாங்கியிருக்கிறார் தமிழரசன். இரண்டு தவணைகள் தலா 88 ஆயிரம் கட்டிவிட்டார். இந்த ஆண்டு 50 ஆயிரத்தை கட்டிவிட்டு ஒரு மாசத்துல 38 ஆயிரம் கட்டுவதாய் கூறியிருக்கிறார். இன்னும் இரண்டு வருடத் தவணை இருக்கிறது. ஆனாலும், வங்கி குண்டர்கள் வந்து அடாவடியாக டிராக்டரை ஜப்தி செய்து அநியாயமாக ஒரு விவசாயியை சாகடித்துவிட்டனர்'' வேதனையோடு சொன்னார்.

-காளிதாஸ்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்