சிறைத்துறை கோல்மால்! புலம்பும் சீனியர்கள்!
சிறைத்துறையில் பணியாற்றும் முதல் மற்றும் இரண்டாம் நிலைக் காவலர்களைப் பழிவாங்கும் நோக்கில், பணியிட மாறுதல் கோரி போலியான விண்ணப்பங்கள் சென்றிருப்பது சமீபத்திய விசாரணையில் அம்பலமானது.
இதுதொடர்பாக சிறைத்துறை கூடுதல் இயக்குநர் கனகராஜ், “""ஒரே நபரின் பெயரில் பல விண்ணப்பங்கள் வருகின்றன. அவற்றில், இடமாற்றுக்காக வெவ்வேறு பகுதிகளைக் குறிப்பிட்டிருப்பதால் காலவிரயம் ஆகிறது. எனவே, இனிவரும் காலங்களில் குறைதீர்க்கும் நாளில் நேரடியாக வழங்கப்படும் பணியிட மாறுதல் விண்ணப்பங்களே பரிசீலிக்கப்படும்'' என்று சிறைத்துறை துணைத் தலைவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருந்தார்.
இதற்கிடையே, பணியிட மாறுதலில் நடக்கும் கோல்மால் குறித்து பேசும் சிறைத்துறை சீனியர்கள், “""புதுக்கோட்டை சிறையின் கீழ் இயங்கும் மன்னார்குடி, பாபநாசம், மயிலாடுதுறை கிளைச்சிறைகளில் தலா 1 வீதம் மூன்று முதல்நிலைக் காவலருக்கான பணியிடங்கள் காலியாக இருந்தன.
இதற்காக விண்ணப்பித்துவிட்டு 2002, 2005, 2006, 2008 பேட்சுகளைச் சேர்ந்த சீனியர்கள் காத்திருக்கும்போது, 2011 பேட்ச் ஜூனியர்களுக்கு ரகசிய பணியிட மாறுதல் கொடுத்துவிட்டார்கள். சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்ததும் ஆணை வரவிருக்கிறது.
கிளைச்சிறைகளில் பணியிட மாறுதல் கோராத முதல்நிலை காவலர்களின் பெயரில், போலி விண்ணப் பங்களை சமர்ப்பித்து அவர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டு, அந்த இடங்களை மூன்று லட்சம்வரை லஞ்சமாக வாங்கிக்கொண்டு ஜூனியர்களுக்கு பணியிட மாறுதல் கொடுக்கிறார்கள். சீனியர்களுக்கு முன்னுரிமை என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது'' என்று புலம்புகிறார்கள்.
-ஜெ.டி.ஆர்.
கயல்விழியின் கைவரிசை!
ரயில் சொகுசுப் பெட்டிகளில் பயணிகளிடம் டிப் டாப் உடையில் சென்று கொள் ளையடிக்கும் சாகுல் ஹமீது என்ற கொள் ளையனை மே 17-ந் தேதி கைதுசெய்தனர் சென்னை ரயில்வே போலீசார். அவனிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணத்தைக் கொண்டு, மலேசியாவில் நட்சத்திர ஹோட்டல் நடத்திவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சாகுல் ஹமீதிடம் இருந்து, நகைகளும், 15 ஏ.டி.எம். கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. சென்ட்ரல் ரயில்வே குற்றப்பிரிவு ஆய்வாளராக காத்திருப்போர் பட்டியலுக்கு மாறுதலாகி வந்த கயல்விழி இந்த வழக்கை விசாரித்து வந்தார்.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்ற ஆய்வாளர் வேலு விடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தபோது, அதில் இரண்டு ஏ.டி.எம். கார்டுகள் இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத் தியது. இதுதொடர்பாக விசாரிக்க, ரயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து, பொருட்களை பறிமுதல் செய்தபோது எடுக்கப்பட்ட குறிப்பில் இடம்பெற்றி ருந்த பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா கார்டுகள்தான் இல்லை என்பது தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட வங்கி களின் மும்பை தலைமை அதிகாரிகளிடம் விசாரித்து, அதை உறுதிசெய்ததோடு, அவற்றிலிருந்து இரண்டரை லட்சரூபாய் வரை எடுக்கப் பட்டதையும் உறுதிசெய்தனர். பணம் எடுக்கப்பட்ட ஏ.டி .எம்.களின் சி.சி.டி.வி. கேம ராக்களை சோதித்தபோது, ஆய்வாளர் கயல்விழி வசமாக மாட்டிக்கொண்டார். வேறு வழியின்றி குற்றத்தையும் ஒப்புக்கொண்டார்.
இதுதொடர்பான விரிவான விசாரணை அறிக்கை சென்னை காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டி ருக்கும் ஆய்வாளர் கயல்விழி மீது, துறைரீதியான நட வடிக்கைகள் பாயவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதுபோன்ற குற்றங்களில் அவர் ஏற்கனவே ஈடுபட்டுள்ளாரா என்பதை அறிய லஞ்ச ஒழிப்பு போலீசாரும் விசாரணையில் இறங்கவுள்ள னர்.
-அரவிந்த்
ஆளுங்கட்சி அக்கப்போர்! அதிருப்தியில் தொகுதிவாசிகள்!
தினகரன் அணியிலிருந்த விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், கடந்த 03-ந் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். அதற்கு பத்துநாளுக்கு முன்பாக, 22-ந் தேதி விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்ட புதிய சி.டி.ஸ்கேனை இயக்கிவைத்தார் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்.
அதற்கு மறுநாள் செய்தியாளர்களைச் சந்தித்த கலைச்செல்வன், ""தொகுதி எம்.எல்.ஏ.வான என்னை அழைக் காமல், ஆட்சியரைக் கைக்குள் வைத்துக்கொண்டு ஸ்கேன் மெஷினை இயக்கிவைத்தது அமைச்சரின் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம். அருகிலுள்ள சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு கரும்புப் பணத்தைத் தரவில்லை. அந்த ஆலை நிர்வாகத்திடம் கமிஷன் வாங்கிக் கொண்டுதான் அமைச்சர் கண்டுகொள்ளவில்லை. அதுதான் மக்களவைத் தேர்தல் தோல்விக்குக் காரணம்'' என்று சகட்டுமேனிக்கு விமர்சித்தார். ஆட்சியையோ, கட்சித் தலைமையையோ மறந்தும் விமர்சிக்கவில்லை.
கலைச்செல்வன் தினகரன் அணிக்கு சென்றதே அமைச்சர் சம்பத் மீதான அதிருப்திதான். தற்போது பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்திருக்கிறார். இதற்கிடையே, 05-ந் தேதி விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மடிக்கணினி கொடுக்க கலைச்செல்வன் தயாராக இருந்தபோது, "அமைச்சரை அழைக்காமல் விழா நடத்தக்கூடாது' என்று எம்.சி.சம்பத் தரப்பு மல்லுக்கு நின்றதால் நிகழ்ச்சி தடைப்பட்டது. இதில் ஏமாந்துபோனதோ அப்பாவி மாணவிகள்தான்.
"எதிரணியில் கலைச்செல்வன் இருந்தபோது தொகுதிக்கு நல்லது செய்தது அமைச்சர்தான். அவரில்லாமல் விழாவா?' என்கிறது எம்.சி.சம்பத் தரப்பு. “"தினகரன் அணியில் இருந்தபோதே எம்.எல்.ஏ. லேப்டாப் வழங்கியிருக்கிறாரே. இப்போது ஏன் தடுக்கிறார்கள்' என்கிறது கலைச்செல்வன் தரப்பு. “"இருவருக்கும் இடையிலான கோஷ்டிச் சண்டையால் தொகுதியைத் தவிக்க விடுகிறார்களே' என்று புலம்புகிறது விருத்தாச்சலம் மக்கள் தரப்பு.
-சுந்தரபாண்டியன்