தட்டிக்கேட்டார்... தற்கொலை செய்தார்!
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிபட்டி காவல்நிலையத்தில் காவலராக இருந்தவர் சுபாஷினி. இவர், மாற்றுப்பணியாக திருவையாறு டி.எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு, மணல்கடத்தல் வேன் ஒன்றை மடக்கிப்பிடித்து டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
கொஞ்சநேரத்தில் சுபாஷினியின் லைனில் வந்த மணல்கடத்தல் கும்பல், ""தப்பான இடத்துல கை வைச்சிட்ட. ஐந்து நிமிஷத்துல நாங்க வெளியே வந்தமாதிரி, அடுத்த ஐந்து மணிநேரத்துல உனக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர் வரும் பாரு'' என்று தோரணையாகப் பேசிவிட்டு கட் செய்தது. பதறிப்போய் உயரதிகாரிகளிடம் முறையிட்டபோது... அலட்சியம் செய்திருக் கிறார்கள்.
சொன்னது போலவே, கும்ப கோணம் கிழக்கு காவல்நிலையத்திற்கு தூக்கியடிக்கப்பட்டார் சுபாஷினி. "வேலையைச் செய்த தற்குக் கிடைத்தா பரிசா இது?' என்று புலம்பியபடியே இருந்திருக்கிறார். கடந்த 30-ந் தேதி கும்பகோணம் ஸ்டேஷன் சென்றவரை, சுந்தரபெருமாள் கோவில் ஸ்டேஷனுக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், உமையாள்புரம் பகுதியிலுள்ள விநாயகர் கோவிலில் சாதாரண உடையில் மயங்கிக் கிடந்திருக்கிறார் சுபாஷினி.
அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோதுதான், விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தது தெரியவந்தது. அவர் வைத்திருந்த கடிதத்தில், “""எனது இந்த நிலைக்கு வருவாய்த் துறை, போலீஸ், உளவுத்துறை அதிகாரிகள் தான் காரணம்'' என்று எழுதியிருக்கிறார். சட்டப்பேரவை கூடியுள்ள நேரத்தில் மணல்கொள்ளை மேட்டர் வெளியே வரக்கூடாது என்பதற்காக, சுபாஷினியை ரகசியமாக தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்துவருகிறது காவல்துறை.
திருவையாறு காக்கி ஒருவர் நம்மிடம், “"திருவையாறு, காவிரி கொள்ளிடம் பகுதிகளில் மணல்கொள்ளை ஜோராக நடக்கிறது. அமைச்சர் துரைக்கண்ணுவே நாள்தோறும் லட்சங்களில் வருமானம் பார்க்கிறார். எல்லாத்துறை அதிகாரிகளுக்கும் லிங்க் இருக்கும் தொழிலில், சுபாஷினி போன்ற சிறுதுண்டுகள் சீண்டினால் மிச்சம் வைப்பார்களா?' என்கிறார்.
-க.செல்வகுமார்
மன்மத பேராசிரியர் ரிலீஸ்! பின்னணியில் டி.எஸ்.பி!
கரூர் கலைக் கல்லூரியில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் காமக் களியாட்டம் நடத்தியவர் பேராசிரியர் இளங்கோவன். அவருக்கு ஜாமீன் கிடைப்பதற்காக 90 நாட்கள்வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலேயே இழுத்தடித்தார் டி.எஸ்.பி. கும்பராஜா.
இதே கோரிக்கையோடு ஜாமீன்கோரினார் இளங்கோவன். இதில் டி.எஸ்.பி.யின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, “""எனக்கும் பொம்பளைப் புள்ளைங்க இருக்கு'' என்று சொல்லிக்கொண்டே… 90 நாட்களுக்கான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கடுப்பாக உத்தரவிட்டார் கரூர் மாவட்டத் தலைமை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர்.
அதன்படி, மறுவிசாரணை ஜூலை 01-ல் நடந்தபோது அறிக்கையைக் கேட்டார் நீதிபதி கிறிஸ்டோபர். அதற்கு, குற்றப்பத்திரிகை தொடர்பாக கருத்துக்கேட்க அரசு வழக்கறிஞர் இ.ரவிச்சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்கு ஆவணங்கள், அவருடைய அலுவலகத்திலேயே வைக்கப்பட்டது, திருப்பித் தரவில்லை என்று அபிடவிட் தாக்கல் செய்தார். இதைப் பார்த்ததும் ""டி.எஸ்.பி. கும்பராஜா பொய்யான தகவலைச் சொல்கிறார். நான் வழக்கு ஆவணங்களை நான்கு நாளில் திருப்பிக் கொடுத்துவிட்டேன்'' என்று வழக்கறிஞர் ரவிச்சந்திரன் குறுக்கிட்டதும், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
""இரண்டுபேரும் வேலை செய்யாமல் ஜாமீனுக்கு வழி செய்கிறீர்கள்'' என்று ஆத்திரமடைந்த நீதிபதி, மாலை 6:00 மணிக்கு பேராசிரியர் இளங் கோவனுக்கு, "மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை சிதம்பரத்தில் தங்கி கையெழுத் திட வேண்டும்' என்ற நிபந்தனையோடு ஜாமீன் வழங்கினார். கையோடு, இந்த வழக்கில் ஒருதலைபட்சமாக செயல்பட்டதற்காக டி.எஸ்.பி. கும்பராஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்கு பரிந்துரையும் செய்தார்.
-ஜெ.டி.ஆர்.
நுகர்வோர் ஏமாளிகள் அல்ல!
1986-லேயே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் வந்திருந்தாலும், அதுபற்றிய விழிப் புணர்வு என்பது எத் தனை பேருக்குத்தான் இருக்கிறது. அந்த சட்டத்தை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் விருதுநகரைச் சேர்ந்த சரவணன்.
விருதுநகரில் உள்ள “டாப் பேக் சித்தார்த் அசோசியேட்ஸ் என்ற கடையில், தன் இரண்டு குழந்தைகளுக்கு 30/05/2016-ல் ரூ.1,200 விலையில் இரண்டு ஸ்கூல் பேக்குகளை வாங்கியிருக்கிறார் சரவணன். இரண்டே வாரங்களில் அவை தரமற்றவையாக ஆனதால், கடைக்காரரிடம் முறையிட்டிருக்கிறார். அவரோ, இந்த பேக்குகள் மதுரை “டாப் பேக் பிரைவேட் லிமிடெட்டின் தயாரிப்பு என்று கைகாட்டினார்.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சரவணன், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு லீகல் நோட்டீஸ் அனுப்பினார். பதில்நோட்டீஸ் அனுப்பிய அந்நிறுவனத்தினர், ஒருகட்டத்தில் வேறு பேக்குகள் தருவதாக சமரசத்துக்கு வந்தனர். "அப்படியானால், வக்கீல் பீஸை கொடுத்துவிடுங்கள்' என்று கேட்ட போது, மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக, சரவணனுக்காக வழக்கறிஞர் மாரிகுமார் மூன்றாண்டுகளாக நடத்திய வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறது.
அதில், சோபா வாங்கிய சிறிது காலத்தில் பழுதடைந்த நிலையில், அதற்கு உண்டான பணத்தை நுகர்வோருக்கு வழங்கவேண்டும் என ராஜஸ்தானில் வழங்கப்பட்ட தீர்ப்பை மையமாக வைத்து, “இந்த வழக்கின் சந்தர்ப்ப சூழ்நிலையை கவனமாக ஆய்வு செய்கிறபோது, விற்பனையான பேக்குகள் இரண்டு வாரத்திற்குள் பழுதடைந்ததால் அவை தரமற்றவை என்றும், ராஜஸ்தான் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலும் பிரச்சனையை முடித்து வைப்பதாக விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றம் குறிப்பிட்டுள்ளது.
மனுதாரர் சரவணனுக்கு பேக்குகளின் விலையான ரூ.1,200 ம், அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக ரூ.10ஆயிரம் நஷ்டஈடும், வழக்குத்தொகையாக ரூ.3,000-ம் வழங்க உத்தரவிடப்பட்டது. சாதாரண பேக்தானே என்று விட்டிருந்தால் நீதி கிடைத்திருக்குமா நுகர்வோரே!
-ராம்கி