எம்.எல்.ஏ.வை படியவைத்த மாணவர்கள்!
விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டத்திலும் கோட்டைவிட்டிருக்கிறது எடப்பாடி அரசு. 2017-18 கல்வியாண்டில் படித்த மாணவர்களை வீதியில் போராட விட்டுவிட்டு, 2018-19 கல்வியாண்டில் ப்ளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்வை அரசு விழாவாக நடத்தி, வெறுப்பேற்றுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை கொலைவெறித் தாக்குதல் நடத்திய பிறகும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் லேப்டாப் மறுக்கப்பட்ட மாணவர்கள். சிவகங்கை மாவட்டம் கீழடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருப்புவனம் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இதைக் கண்டித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதையெல்லாம் கருத்தில் கொள்ளாத மானாமதுரை எம்.எல்.ஏ. நெட்டூர் நாகராஜன், திருப்புவனம் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2018-19 கல்வியாண்டில் படித்த மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க அதிகாரிகள் புடைசூழ வந்தார். அப்போது தங்களுக்கும் வழங்குமாறு மாணவர்கள் கேட்க, "கண்டிப்பா தருவேன்பா'
எம்.எல்.ஏ.வை படியவைத்த மாணவர்கள்!
விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டத்திலும் கோட்டைவிட்டிருக்கிறது எடப்பாடி அரசு. 2017-18 கல்வியாண்டில் படித்த மாணவர்களை வீதியில் போராட விட்டுவிட்டு, 2018-19 கல்வியாண்டில் ப்ளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்வை அரசு விழாவாக நடத்தி, வெறுப்பேற்றுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை கொலைவெறித் தாக்குதல் நடத்திய பிறகும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் லேப்டாப் மறுக்கப்பட்ட மாணவர்கள். சிவகங்கை மாவட்டம் கீழடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருப்புவனம் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இதைக் கண்டித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதையெல்லாம் கருத்தில் கொள்ளாத மானாமதுரை எம்.எல்.ஏ. நெட்டூர் நாகராஜன், திருப்புவனம் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2018-19 கல்வியாண்டில் படித்த மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க அதிகாரிகள் புடைசூழ வந்தார். அப்போது தங்களுக்கும் வழங்குமாறு மாணவர்கள் கேட்க, "கண்டிப்பா தருவேன்பா' எனக்கூறி தப்பினார்.
அதையே சொல்லி கொம்புகாரனேந்தல் பள்ளி மாணவர்களிடமிருந்து தப்பியவரால், காரைகட்டிக்குளம் மாணவர்களிடம் முடியவில்லை. “""எல்லா ஊரிலேயும் சாக்குப்போக்கு சொல்றது மாதிரி எங்ககிட்ட இருந்து எஸ்கேப் ஆகமுடியாது'' என்று எம்.எல்.ஏ.வின் காரை முற்றுகையிட்டனர். இதையடுத்து வேறுவழியின்றி, "மானாமதுரை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜ் ஆகிய நான் 2017-18 மற்றும் 2018-19 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காமல், புதிய மாணவர்களுக்கு வழங்கமாட்டேன்'' என பச்சை மையில் உறுதிக்கடிதம் எழுதிக்கொடுத்த பிறகே விடுவிக்கப்பட்டார். அந்தக் கடிதம்தான் இப்போது வாட்ஸ்ஆப்பில் வைரலாகிறது.
-நாகேந்திரன்
கிராமத்துக் கிழவிகளின் விநோத வழிபாடு!
கழுவக்கூட தண்ணீர் கிடைக்காமல் கடுப்பிலிருக்கிறது தமிழகம். மூன்று ஆண்டுகளாக தொடரும் இந்தப் பிரச்சனைக்கு முறையான தீர்வுகாணாத தமிழக ஆட்சியாளர்கள், கட்சி நிர்வாகிகளை மழைவேண்டி யாகம் நடத்தச் சொல்கிறார்கள்.
தென்மேற்குப் பருவமழையால் ஓரளவு நிலம் நனைந்ததற்கும் யாகம்தான் காரணமென்று ஆட்சியாளர்கள் ஒருபுறமும், ஹாலிவுட் நடிகர் டிக்காப்ரியோவின் டிவீட்தான் காரணமென்று நெட்டிசன்கள் இன்னொருபுறமும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையேதான் விழுப்புரம் மாவட்டம் கிளியூரில் மழைநீர் வேண்டி விநோத வழிபாட்டை நடத்தி இருக்கிறார்கள் கிராம மக்கள். ஊர் எல்லையில் ஒரு கல் இருக்கிறது. அதுவெறும் கல் அல்ல… ஊரைக் காக்கும் எல்லைச்சாமி. அந்தச் சாமிக்கு ஜூலை 01-ம் தேதி காலை அந்தக்கால குமரிகள் ஒன்றுகூடி, பூ, பொட்டு வைத்து அலங்காரம் செய்து, பிடித்த உணவான கூழ்காய்ச்சி படையல் வைத்து அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கல்லைச் சுற்றி அமர்ந்த ஊர்க்கிழவிகள், ஒப்பாரி வைத்து நீண்டநேரமாக அழுது வழிபாடு செய்தனர்.
""கடும் வறட்சிக் காலங்களில் வயதான பெண்கள் இப்படி ஒப்பாரி வைத்து வழிபட்டால், எல்லைச்சாமி மழை கொடுக்கும் என்பது ஐதீகம். பலமுறை எங்கள் வேண்டுதல் பலித்திருக்கிறது. எங்கள் முன்னோர் வழக்கத்தை காலம்காலமாக செய்கிறோம்'' என்கின்றனர் கிளியூர் மக்கள். அந்தக்காலக் குமரிகளின் நம்பிக்கை வீண்போகாமல் மழை கொட்டட்டும்.
-எஸ்.பி.சேகர்
சாதி ஆணவத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை!
மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் இருக்கிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் சார்புகோவில்.
இங்கு திருவெள்ளறை நேதாஜி நகர் பன்னீர்செல்வம் என்பவர், கடந்த ஜூன். 15-ம் தேதி பணியில் இருந்தபோது, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன் கோவிலுக்கு காரில் வந்திறங்கினார். வடக்குவாசலில் கட்டுமானப் பணிகள் நடப்பதாக பன்னீர்செல்வம் தடுத்தும், பொருட்படுத்தாமல் அந்த வழியிலேயே கோவிலுக்குள் சென்றார்.
பின்னர் அதேவழியில் வந்த ரெங்கராஜனை மறித்த பன்னீர்செல்வம், "உள்ளே நுழையக்கூடாது' என்ற அறிவிப்புப் பலகையைக் காட்டியிருக்கிறார். அப்போது, "உன் வர்ணம் என்ன? சாதி என்ன?' என்று பன்னீர்செல்வத்திடம் மிரட்டலாக கேட்டிருக்கிறார். "அறங்கெட்ட துறையை விரட்டவந்த ராமதூதன் நான்' என்றும் பகட்டாக பேசியிருக்கிறார்.
ஒருவழியாக பன்னீர்செல்வத்தின் சாதிப்பெயரை அவர் வாயாலேயே கேட்டுத் தெரிந்துகொண்ட ரெங்கராஜன், நக்கலாக…""தரங்கெட்ட சாதியாச்சே நீ! நீயும் உன் முதலாளியும், இந்த ஜே.சி.யும் சேர்ந்துக்கிட்டு உங்க இஷ்டத்துக்கு கோவிலைக் கட்டிக்கிட்டு இருக்கீங்க. ஒழுங்கா ராஜினாமா பண்ணிட்டு ஓடிடுங்க. இல்லைனா, நீதிமன்றத்துல வழக்குப்போட்டு உங்களையெல்லாம் ஓடவைப்பேன். கோவில் நிர்வாகத்துல பைபிள் விற்பனை செய்தா உருப்படுமா'' என ஏகவசனத்தில் பேசிவிட்டு, "இரு, நான் யாருன்னு காட்டுறேன்' என்றுகூறி அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
ரெங்கராஜன் நரசிம்மனின் இந்த அணுகுமுறையால் மனமொடிந்து போன பன்னீர்செல்வம், மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. மன உளைச்சலில் இருக்கும் பன்னீர்செல்வம் பேசும் மனநிலையில் இல்லை என்கிறார்கள்.
ரெங்கராஜன் நரசிம்மன் தமிழக கோவில்களில் ஊழல் நடப்பதாக நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியவர். சமீபத்தில் திருவெள்ளறை பெருமாள் கோவிலில் முறைகேடு நடப்பதாக குற்றம்சாட்டினார். அதேநேரத்தில் கோவிலுக்குள் அத்துமீறி செல்போனில் படமெடுக்கக்கூடாது என்று நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-ஜெ.டி.ஆர்.