குற்றவாளிகளுக்கு சல்யூட்! காக்கிகளை மாமூல் படுத்தும்பாடு!
"குற்றமிழைத்தவர்கள் மீது, குற்றவழக்கு பதிவுசெய்யாத போலீஸ் அதிகாரி மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை? கடந்த ஐந்தாண்டுகளில் மாமூல் வசூலித்த எத்தனை போலீஸ்காரர்கள் மீது குற்றவழக்கு பதியப்பட்டது?'
தமிழ்நாடு மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன், தாமாக முன்வந்து விசாரித்த வழக்கு ஒன்று, இப்படி சரமாரி கேள்விகளைக் கேட்டதோடு, காவல்துறை டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருக்கிறார்.
விருதுநகர் மாவட்ட காவலர் ஒருவர், நீதிபதியின் உத்தரவைச் சுட்டிக்காட்டி, நேர்மையான காவலரான தன்னை உறுத்திக்கொண்டிருக்கும் விவகாரம் குறித்து நம்மிடம் பேசினார்.
சார்பு ஆய்வாளர், தலைமைக் காவலர் உள்ளிட்ட நால்வர் கொண்ட தனிப்படையினர், விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சிவந்திபட்டி கிராமத்திற்கு அருகில், அதிகாலை 2 மணிக்கு மணல் அள்ளிக்கொண்டிருந்த ஜே.சி.பி.யை வளைத்தனர். இதில் ஈடுபட்ட ஐந்துபேரை கைதுசெய்து 3 மணிக் கெல்லாம் அப்பையநாயக்கன் பட்டி காவல்நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.
காலை 8 மணிக்கு அங்குவந்த சாத்தூர் உட் கோட்ட காவல் துணை கண் காணிப்பாளர் ராமகிருஷ் ணன், "உனக்குதான் ட்ரான் ஸ்ஃபர் போட்டாச்சுல்ல...… ஸ்டேஷன் வேலையை மட்டும் பாரு' என்று கூறி சார்பு ஆய்வாளரை அங்கி ருந்து வெளியேற்றினார். நேர்மைக்குப் பெயர்போன தலைமைக் காவலரையும் தரக்குறைவாக பேசினார். அதோடு மணல் திருடிய வாகனம், ஐந்துபேர் எந்தவித வழக்குப்பதிவும் இல்லாமல் விடுவிக்கப்பட்டனர்.
இதுபற்றி சாத்தூர் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணனைத் தொடர்புகொண்டால், "நான் யார்கிட்டயும் போனில் பேசமாட்டேன்' என்றார். ""குற்றச்சாட்டே உங்க மீது தானே?'' என்றதற்கு "போனை வைங்க மொதல்ல' என்றார் எரிச்சலுடன். சம்பந்தப்பட்ட அப்பையநாயக்கன்பட்டி காவல்நிலையமோ, "அப்ப டியா நடந்துச்சு?' என்று போலியான ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியது.
-ராம்கி
முற்றுபெறாத முரண்பாடு! கண்டுகொள்ளாத அரசு!
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி. அக்ரி பட்டம் முடித்தவர்கள், எம்.எஸ்.சி. அக்ரி படிப்புக்காக விண்ணப்பித்தால் நிராகரிக்கிறது கோவை வேளாண் பல்கலைக்கழகம். கேட்டால், "மத்திய அரசின் இந்திய வேளாண்மை ஆய்வுமையத்தில் பதிவுசெய்து அண்ணாமலை பல்கலைக்கழகம் தகுதிச்சான்று வாங்கவில்லை' என்று காரணம் சொல்கிறார்கள்.
அதேசமயம், கோவை பல்கலையில் இளங்கலை படித்த மாணவர்கள், அண்ணா மலை பல்கலையில் சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள். இரண்டுமே அரசுக்குச் சொந்தமான கல்லூரிகள் என்றாலும், இந்த முரண்பாடு எல்லா கல்வியாண்டும் தொடர்வது வாடிக்கையாகிவிட்டது. சென்ற ஆண்டு இதேபோல் மறுத்தபோது, மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அரசும், அதிகாரிகளும் தலையிட்ட பிறகே மாணவர் சேர்க்கை நடந்தது.
தற்போது மீண்டும் பழைய நிலையே திரும்பி யிருக்கிறது. இரண்டு கல்லூரிகளுமே நுழைவுத்தேர்வு அடிப்படையிலேயே மாணவர்களை சேர்க்கின்றன. வருகிற ஜூலை 15-ந் தேதி கோவை பல்கலையில் நுழைவுத்தேர்வு நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கொண்டு அனுமதிக்காக காத்திருக்கிறார்கள் மாணவர்கள். உடையார்பாளையத்தைச் சேர்ந்த அஜீம்பாய், “""என் மகன் அண்ணா மலையில் பி.எஸ்.சி. அக்ரி முடித்தார். எம்.எஸ்.சி.க்காக கோவை பல்கலையில் விண்ணப்பித்தால் நுழைவுத்தேர்வுக்கே தகுதியில்லை என்கி றார்கள். அரசு கட்டுப் பாட்டில் கல்லூரிகளுக் கிடையே இருக்கும் முரண்பாட்டினைக் களைய துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்'' என்று வலியுறுத்துகிறார்.
-எஸ்.பி.சேகர்
லஞ்சம் கொடுத்துட்டு எங்கயும் போங்க!
அரசு எழுது பொருள் மற்றும் அச்சுத் துறையின்கீழ் தமிழ் நாட்டில் சென்னை உள்ளிட்ட ஆறு இடங் களில் அரசு அச்சகங்கள் இயங்குகின்றன. ஆறா யிரத்துக்கும் அதிக மானோர் இதில் பணி யாற்றுகின்றனர்.
2016-ல் ஜெ. மீண்டும் ஆட்சியைப் பிடித்தபோது, சென்னை யிலிருந்து பலர் அதிரடியாக ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டனர். அவர்களில் குடும்பச்சூழல் காரணமாக வேறு இடங்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் கேட்ட ஏழு பேர் திருச்சிக்கு அனுப்பப்பட்டனர். வேறு வழியின்றி, அங்கேயே பணிபுரிந்துகொண்டு பணியிடமாற்ற விண்ணப்பங்களைக் கொடுத்து காத்திருக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் இயக்குநர் தண்டபாணி ஐ.ஏ.எஸ். விசிட்டிற்காக வந்தபோது, வழக்கம்போல் மனு கொடுத்திருக்கின்றனர். அப்போது, மதுரைக்கு இடமாற்றம்கோரி விநாயகம் என்பவர் தனியாகப் போய் முறையிட்டபோது, "ப்ராடு! அடிக்கடி இப்படி கேட்டுக்கிட்டே இருக்க' என்று எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில், மிஷினுக்குக் கீழேஇருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றிருக்கிறார் விநாயகம். அவரைத் தடுத்து மீட்ட சகஊழியர்கள், துவாக்குடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
சமீபத்தில் சென்னையிலிருந்து திருச்சி வந்த சுகுமார் என்பவர் மீண்டும் சென்னைக்கே ட்ரான்ஸ்ஃபர் வாங்கிச் சென்றிருக்கிறார். பிறகெதற்காக 2016-ல் வந்தவர்களை மட்டும் ஒதுக்குகிறார்கள் என்று விசாரித்தபோது, “""அப்போது இருந்த ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ். என்பவர் ஆளுங்கட்சி பெருந்தலைகளின் சிபாரிசுப் பட்டியலைக் கண்டுகொள்ளாமல், மெரிட் அடிப்படையில் வேலை வாய்ப்பு கொடுத்தார். அதனால், "பணம் கொடுக்காமல் வேலைக்கு வந்தவர்கள்தானே... பணம் கொடுத்து ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக் கொள்ளட்டும்' என்று நேரடியாக சொல்லாமல், இப்படி வஞ்சிக்கிறார்கள்'' என்று காரணத்தை விளக்குகிறார்கள்.
""தமிழகம் முழுவதும் 90 சதவீதம் பேர் சொந்த ஊருக்குப் பக்கத்திலேயே வேலை பார்க்கிறார்கள். மதுரையில் ஆட்கள் அதிகம், திருச்சியில் பற்றாக்குறை என்று காரணம் சொல் கிறார்கள். மதுரை ஆட்களை மாற்றிப் போடலாமே என்றால் கண்டுகொள்வதில்லை. 30 முறைக்குமேல் மனு கொடுத்ததுதான் மிச்சம்'' என்று ஆதங்கப்படுகிறார் தற்கொலைக்கு முயன்ற விநாயகம்.
-ஜெ.டி.ஆர்.