புதுச்சேரி சபாநாயகர் ரேஸ்!
சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, புதுச்சேரி மக்களவை எம்.பி.யாகிவிட்டார் வைத்திலிங்கம். அவரின் எம்.எல்.ஏ. பதவியும் காலியாவதால் சட்டசபையில் காங்கிரஸின் எண்ணிக்கை 15-லிருந்து 14-ஆக குறைகிறது. அதேசமயம், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வெற்றியின்மூலம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்திருக்கிறது. இனி புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிதொடர தி.மு.க. ஆதரவு அவசியமாகும் சூழலில், சபாநாயகர் பதவிக்கு அடிபோடுகிறது தி.மு.க. தரப்பு.
இதனை தி.மு.க. நிர்வாகிகள் சிலர் முதல்வர் நாராயணசாமியிடம் தூபம் போட்டுள்ளனர். புதுச்சேரியில் கட்சியை வளர்க்க இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என தி.மு.க. தலைமையிடமும் புதுச்சேரி நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், ‘தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியிலிருந்தால் காங்கிரஸுக்கு ஆட்சிக்குள் எப்படி பங்கில்லையோ, அதுபோலத்தான் புதுச்சேரியிலும்’ என உறுதியாக சொல்கின்றனர் காங்கிரஸார்.
இது ஒருபுறமிருக்க, காங்கிரஸுக்குள்ளும் சபாநாயகர் பதவிக்கு போட்டி நிலவுகிறது. துணைசபாநாயகர் சிவக்கொழுந்து, சீனியர் எம்.எல்.ஏ. லஷ்மிநாராயணன், கொறடா அனந்தராமன் என பலரும் தங்களுக்குத்தான் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால், பெரும்பாலானோரின் விருப்பம் உழவர்கரை எம்.எல்.ஏ. என்.ஆர்.பாலன்தான்.
கடந்த மூன்றாண்டுகளாக சுழற்சிமுறையில் அமைச்சரவையை மாற்றியமைக்கக் கோரி போர்க்கொடி பிடிக்கும் எம்.எல்.ஏ.க்கள் தனவேல், தீப்பாய்ந்தான், விஜயவேணி மற்றும் ஜெயமூர்த்தி ஆகியோர் ஆதரவளிக்கும் என்.ஆர்.பாலனை சபாநாயகராக்கினால் அமைதியாகிவிடுவார்கள் என்று நாராயணசாமியும் கிரீன் சிக்னல் கொடுக்கிறாராம்.
கட்சிமேலிடம் வரை இதற்கான பாசிட்டிவ் ரியாக்ஷன் காட்டிவிட்ட நிலையில், என்.ஆர்.பாலனுக்கு சான்ஸ் அதிகம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
-சுந்தரபாண்டியன்
அரசாணை வெளியிட்டு குழப்பும் அரசு!
நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எஸ்.ஐ. பணிக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்தாண்டு 969 எஸ்.ஐ. காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை மார்ச்.08-ல் வெளியிட்டது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம். அதில் விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
ஆனால், பிப்ரவரி.02-ல் அரசுப் பணியாளர்கள் தொடர்பான அரசாணை ஒன்றில் விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு 3 சதவீதம்தான் இடஒதுக்கீடு என்று குறிப்பிட்டு குழப்பிவிட்டது தமிழக அரசு. இந்தக் குழப்பத்தைக் கையிலெடுத்து, தமிழக அரசின் அரசாணையையே கடைப்பிடிக்கவேண்டும் என்று கொடி பிடிக்கிறார்கள் மற்ற தேர்வர்கள்.
காரணம், வெறும் 969 எஸ்.ஐ. காலிப்பணியிடங்களே உள்ள நிலையில், விளையாட்டுத்துறைக்கு 10 சதவீதம் என்றால் 90 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதே 3 சதவீதமாக இருந்தால் 30 பேரோடு முடிந்துவிடும். மற்றவை பொதுப்பிரிவினருக்குக் கிடைக்கும் என்கிறார்கள்.
இதுபற்றி, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்.பி. பாண்டியன் கூறுகையில், ""எங்களுடைய தேர்வாணையத்திற்கான தனி ஜி.ஓ.-வின் அடிப்படையிலேயே வெளியிட்டோம். அதனடிப்படையிலான இடஒதுக்கீடு, போலீஸ் மற்றும் வனத்துறையினருக்கு மட்டுமே பொருந்தும். காடுகளை விளையாட்டுத்துறையினரால் எளிதில் கையாளமுடியும் என்ற கண்ணோட்டத்திலேயே இடஒதுக்கீட்டு அளவு மூன்றிலிருந்து பத்தாக உயர்த்தப்பட்டுள்ளது'' என்றார்.
சீருடைப் பணியாளர்களுக்கு மட்டும் தனி ஜி.ஓ. என்று சொல்கிற தமிழக அரசு, தேர்வுக்கு முன்பே இடஒதுக்கீட்டில் குளறுபடி செய்திருப்பதன் மூலம், 2015-ல் எஸ்.ஐ. பணிநியமனத்தில் நடைபெற்றதைப்போல ஊழலுக்கு அடிபோடுகிறதோ என்கிற சந்தேகம் வலுக்கிறது.
-அ.அருண்பாண்டியன்
ஜக்கி பாணியில் மதுரையில் நித்தி சிலை?
எவ்வளவோ அடம்பிடித்தும் மதுரை ஆதீனம் மடத்தின் கதவுகள் நித்தியானந்தாவுக்காக திறக்கப்படவில்லை. போதாக்குறைக்கு சென்னை உயர்நீதிமன்றமும் தடைஉத்தரவு பிறப்பித்துவிட்டது. இதனால், மதுரை, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை ஆகிய கோவில் நகரங்களில் நித்தியானந்தா ஆசிரமம் தொடங்குவதற்கான வேலைகள் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் ஒத்துழைப்போடு நடந்து வந்ததாம்.
கெட்டி ட்ராவல்ஸ் நிறுவனத்தின் செயலதிகாரியாக இருந்து, ராஜினாமா செய்துவிட்டு வெளிவந்து, நித்தியானந்தாவிற்கு அடுத்தபடியாக ஆசிரமத்தை ஆட்டிப்படைக்கும் வித்தியஸ்வரா ஆனந்தா உடனான நெருக்கம்தான் அமைச்சரின் ஒத்துழைப்புக்கான காரணமாம். இவரது கண்ணசைவில்தான் ஆசிரமத்தில் எல்லாமே நடக்கிறது என்கிறார்கள் நித்தி பக்தர்கள்.
மதுரை ஆதீனமடத்திற்கு அருகிலுள்ள மிலன்-மார்ட் கட்டிடத்தை விலைபேசி முடித்து, அங்கு ஆசிரமம் நிறுவவும், 500 ஏக்கர் நிலப்பரப்பில் ஈஷா யோகா மையத்தில் இருப்பதுபோலவே நித்தியின் உருவத்தை ஒத்த சிவன் சிலையை திருப்பரங்குன்றத்தில் நிறுவவும் நித்தி ஆசிரமம் முடிவு செய்திருக்கிறது. அந்தப் பணிகளை மேற்பார்வையிட சில தினங்களுக்கு முன்பு வித்தியஸ்வரா மதுரை வந்திருக்கிறார். இந்த செய்தி தீயாகப் பரவி மதுரை மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
இதுபற்றி வித்தியஸ்வரா ஆனந்தாவை அழைத்து கேட்டபோது, ""எனக்கும் நித்தியானந்தாவுக்கும் சம்பந்தமா? நீங்க யாரோன்னு நினைச்சிட்டு பேசுறீங்க'' என்று சமாளித்தார். ""நீங்கள் மதுரையில் ஆசிரமத்திற்கு இடம்பார்த்த புகைப்படம் கிடைத்திருக்கிறது. நீங்களும் நித்தியானந்தாவும் பேசிக் கொண்டிருக்கும் படங்கள் உங்கள் வலைத்தளத்தில் இருக்கிறதே'' என்றோம். "இல்லவே இல்லை' என்று அடம்பிடித்தார்.
""பின்ன ஏன் வாட்ஸ்அப் முகப்பில் நித்தியானந்தா உடனிருக்கும் படத்தை வைத்திருக்கிறீர்கள்?''’ என்று கேட்டபோது, ""நக்கீரனுக்கு எங்களை மோப்பம் பிடிக்கிறதே வேலையாப் போச்சு. வைங்க போனை'' என்று சட்டென போனைக் கட்செய்து விட்டார்.
-அண்ணல்