Skip to main content

சிக்னல்!

40 கி.மீ. தூரம்!

vijayadarani

குமரி மாவட்டம் திருவட்டாறு, கோதையாறு, பேச்சிப்பாறை, குற்றியாறு, சிற்றாறு, குலசேகரம், பொன்மலை பகுதிகளில் உள்ள ஆசிரியர்களின் பல ஆண்டு போராட்டங்களின் விளைவாக கல்வி மாவட்டமானது திருவட்டாறு. அதற்கான அலுவலகமும் அங்கே திறக்கப்பட்டது. பத்து நாட்கள் மட்டுமே செயல்பட்ட அந்த அலுவலகத்தை இரவோடு இரவாக மாற்றிவிட்டார்கள். ஏன்?

""எல்லாம் விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணியோட வேலைதான். திருவட்டாறு கல்வி மாவட்டத்துக்கு தான்தான் முயன்றதாகவும், அதனால் இந்த அலுவலகம் தன்னோட தொகுதியில்தான் இருக்கணும்னும் மாவட்ட ஆட்சியரிடம் சண்டை போட்டு மார்த்தாண்டத்துக்கு கொண்டுபோய்விட்டார் விஜயதாரணி'' என்கிறார்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள்.

""ஏற்கெனவே மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்துக்கான அலுவலகம் குழித்துறையில் இருக்கிறது. அது 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது என்பதால்தான் திருவட்டாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டத்தை போராடி வாங்கினோம். எந்தப் பெயரில் கல்வி மாவட்டம் இருக்கிறதோ அந்த ஊரில்தான் அலுவலகம் இருக்க வேண்டும். எதற்காக திருவட்டாறில் இருந்து மார்த்தாண்டத்துக்கு மாற்றினீர்கள்?'' என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலாவை முற்றுகையிட்டார்கள் ஆசிரியர்கள். அவரோ, "எனக்கேதும் தெரியாது, ஆட்சியரைக் கேளுங்கள்' என்று ஒதுங்கிக்கொண்டார்.

திருவட்டாறுக்கு இந்த அலுவலகத்தை கொண்டு வரவேண்டிய பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. மனோதங்கராஜோ, திருவட்டாறு பகுதி ஆசிரியர்களிடமே, ""போகட்டும்... விடுங்க'' என்று சமாதானம் பேசுகிறாராம். இரண்டு எம்.எல்.ஏ.க்களுக்கும் எதிராக, போராடத் தயாராகிக்கொண்டிருக்கிறது ஆசிரியர் சங்கம்.

-மணிகண்டன்

இருநூறு கோடி சொத்து!

saicitycenter

பாலாற்றங்கரை யில் உள்ளது வேலூரின் புதிய பேருந்து நிலையம். இதையொட்டியுள்ள ஏழு ஏக்கர் நிலத்தை தி.மு.க. பிரமுகர் ஒரு வரும் காங்கிரஸ் பிர முகர் ஒருவரும் சேர்ந்து வாங்கிப் போட்டி ருந்தனர்.

2011-ல் தேர்தல் பரப்புரைக்காக இங்கே வந்த ஜெ., "பேருந்து நிலைய விரிவாக்கத் திற்காக இதையொட்டி யுள்ள இடங்கள் கையகப்படுத்தப்படும்' என்று கூறிவிட்டுப் போனார். இதனால் பயந்த தி.மு.க.-காங்கிரஸ் பிரமுகர்கள், தங்களுடைய 7 ஏக்கர் நிலத்தையும் அ.தி. மு.க.வின் மிக முக்கிய பிரமுகர் ஒருவரிடம் விற்றனர். பினாமி பெயரில் அதை வாங்கிய இலை பிரமுகர், நில புரோக்கர் ராமமூர்த்தி யின் மேற்பார்வையில் ஒப்படைத்திருந்தார். இவர் "சாய் சிட்டி சென்டர்' என்கிற பெயரில் ஷெட் போட்டு வாகன பார்க்கிங் அமைத்து, மாதத்திற்கு சராசரியாக 10 லட்சம் வருமானம் பார்த்துக்கொண்டிருந்தார்.

இடையில் நில உரிமையாளருக்கும் புரோக்கர் ராமமூர்த்திக்கும் ஏதோ பிரச்சினை. 8-6-18 அன்று அமைச்சர் வீரமணி நிழலாய் வலம்வரும் புகழேந்தி தலைமையில் ஒரு படை வந்தது. சாய் சென்டர் போர்டை பிடுங்கி எறிந்தது. நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர்.

""இன்றைய மார்க் கெட் மதிப்பில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தை அமைச்சர் வாங்கிவிட்டார்'' என்கிறது ஒரு தரப்பு. ""இல்லை யில்லை... அந்த இடத்தை மீட்டுக் கொடுத்துவிட்டு, அதற்கான தொகையை அமைச்சர் தரப்பு பெற்றுக் கொண்டது'' என்கிறது மற்றொரு தரப்பு.

-து.ராஜா

பத்து லட்சம், இருபது லட்சம் பாக்கி...!

communitycenter

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. தி.மு.க. ஆண்டி அம்பலம் என்றாலும், இதற்கு முன் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அமைச்சர் நத்தம் விசுவநாதன்.

கடந்த முறை அமைச்சராக இருந்தபோது நத்தம், சாணார்பட்டி ஒன்றியங்களின் உலுப்பக்குடி, மேட்டுக்கடை, வாழைக் கால்பட்டி, வத்திப்பட்டி, சிலுவத்தூர் உட்பட 32 ஊர்களில் தலா 50 லட்சம் செலவில் சமுதாயக் கூடங் களைக் கட்டினார். நத்தத்தில் நீதிமன்றம், ஆர்.டி.ஓ. அலு வலகம், சாணார்பட்டியில் வேளாண்மை விற்பனை நிலையக் கட்டடம் ஆகிய வையும் கட்டப்பட்டன. கட்டி முடித்த நேரத்தில் தேர்தல் வந்தது. இவருக்கு வேறு தொகுதியான ஆத்தூரை ஒதுக்கினார் ஜெ. அங்கே ஐ.பெரியசாமியிடம் தோற் றுப்போனார் நத்தம் விசுவநாதன்.

நத்தம் விசுவநாதன் பீரியடில் கட்டப்பட்ட அத்தனை கட்டடங்களும் ஒண்ணரை ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் இருக்கின்றன.

""எல்லாம் பாழடைஞ்சுப் போச்சுங்க. சமுதாயக் கூட மெல்லாம் டாஸ்மாக் பார் போல குடிகாரர்களின் கோட்டையாகிவிட்டன. கல்யாணமெல்லாம் ஏழைபாழைகள் கூட பத்தாயிரம், இருபதாயிரம் கொடுத்து நகரங்களில் நடத்து கிறார்கள்'' என்கிறார் உலுப்பக்குடி சோலை.

ஏன் திறக்கவில்லை? காண்ட்ராக்ட்டர்களிடம் கேட்டோம். ""ஃபைனல் பில் செட்டில் ஆகுமுன் தேர்தல் வந்துவிட்டது. ஜெயித்தது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. ஒவ்வொரு காண்ட்ராக்ட்டருக்கும் 10 லட்சம், 20 லட்சம்னு பாக்கி இருக்கு. கேட்டால் அது எதிர்க்கட்சித் தொகுதி... பில் செட்டில்செய்ய என்ன அவசரம்னு சொல்றாங்க. அதனாலதான் பூட்டுப் போட்டிருக்கிறோம்'' என்கிறார்கள்.

மக்கள் பயன்பாட்டிற்கு ஆளும்கட்சியே முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருக்கிறது.

-சக்தி

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்