பசுவுக்கு சீமந்தம் நடத்திய சகோதரர்கள்!

ss

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த வண்டாரந்தாங்கலைச் சேர்ந்த சகோதரர்கள் விநோத், ஹிட்லர், குமார். இவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து விற்பனை செய்து வருகின்றனர். அப்படித்தான் ஐந்தாண்டுகளுக்கு முன்பு நாட்டுப்பசு ஈன்ற பெண் கன்றுக்குட்டியை வாங்கினர்.

‘ஒன் மேன் ஆர்மி’ என்று அதற்கு பெயர்சூட்டி, அந்தப் பசுவை மஞ்சுவிரட்டுக்கெல்லாம் அனுப்பினர். ஆம், காளைகள் மட்டுமே கலந்துகொள்ளும் மஞ்சுவிரட்டில் ஒன் மேன் ஆர்மி கலந்துகொண்டு பரிசுகளை அள்ளியிருக்கிறது. அந்தப்பசு இப்போது கர்ப்பமாக இருப்பதால், ஊரையே கூட்டி வளைகாப்பு நடத்தி அசத்தி ஆச்சர்யப்பட வைத்துள்ளார்கள் சகோதரர்கள்.

கடந்த மே.19-ம் தேதி வீட்டிலேயே வளைகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போஸ்டர், பேனர் அடித்து ஊருக்கே தெரியப்படுத்தி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இனிப்பு, பூ, பழங்கள் என 50 விதமான தட்டு வரிசைகளோடு ஊர்வலமாக வந்தனர். வீட்டின்முன் போடப்பட்டிருந்த பந்தலில் பசுவை நிறுத்தி பெண்கள் சந்தனம் தடவி, பொட்டு வைத்து இறுதியாக ஆரத்தி எடுத்து அசத்தினர். வந்தவர்களுக்கு பிரியாணி விருந்து வைக்கப்பட்டது.

இதுபற்றி சகோதரர்களில் ஒருவரான ஹிட்லரிடம் பேசியபோது, ""எங்களுக்கு உடன்பிறந்த சகோதரி கிடையாது. அதனால், ஒன் மேன் ஆர்மியை சகோதரியாக வளர்த்தோம். பருவத்துக்கு வந்ததும், காளையோடு சேர்ந்து அது கர்ப்பமானது. ஒரு மாதத்தில் பிரசவம் நடக்கவுள்ளது. எங்கள் சகோதரிக்கு எப்படி வளைகாப்பு நடத்தியிருப்போமோ, அப்படியே செய்தோம். மக்கள் திரளாக வந்து கலந்துகொண்டது மகிழ்ச்சியாக இருந்தது''’என்றார்.

-து.ராஜா

இந்தியன் பட பாணியில் லஞ்சம் கேட்கும் தாசில்தார்!

ssதாம்பரம் தாசில்தார் ஆபீசில் ஒரு பட்டாவுக்கு 10 ஆயிரம் என இரண்டு பட்டாவுக்கு 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால் கொடுக்கமுடியாது என சொல்லிவிட்டு வந்திருக்கிறார் அந்த முதியவர். கீழ்மட்ட ஊழியர்கள் வேலையை முடித்தும், இழுத்தடிப்பது தாசில்தார் பாக்கியலட்சுமிதான் என்பது பிறகுதான் தெரியவந்திருக்கிறது. காஞ்சிபுரம் கலெக்டரிடம் புகார்மனு கொடுத்து போராடப் போவதாக குமுறிவெடிக்கிறார் அவர்.

இதுபற்றி தாம்பரம் தாசில்தார் பாக்கியலட்சுமியைத் தொடர்புகொண்டு பாதிக்கப்பட்டவரின் உறவினரைப்போல நாம் பேசியபோது, ""எல்லாத்துக்கும் பேப்பர்ஸ் எடுத்துக்கிட்டு சர்வேயர்கள் என்னைப் பார்க்க வர்றாங்கல்ல. அதேமாதிரி, இந்த ஃபைலுக்கும் பேப்பர்ஸ் எடுத்துட்டு வந்து பார்க்கச் சொல்லுங்க. ஓ.கே. ஆகிடும்''’என்று வார்த்தைக்கு வார்த்தை "பேப்பர்ஸ்'’என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.

ஷங்கர் இயக்கிய இந்தியன் படத்தில், அரசு அதிகாரியான செந்தில் லஞ்சத்துக்கு பதிலாக முக்கியமான பேப்பர் வரலை என்று கேட்பாரே, அதேபோலத்தான் பாக்கியலட்சுமியின் கோர்டுவேர்டு பேப்பர்ஸ். ஏற்கனவே பூந்தமல்லி தாசில்தாராக இருந்தபோது, அவர் பெயரே பேப்பர்ஸ் பாக்கியலட்சுமிதான் என்று கிண்டலடிக்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். மேலும், சோழிங்கநல்லூரில் தாசில்தாராக இருந்தபோது ஒரு பட்டாவுக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்டதாக புகார் கொடுக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்குப் பிறகு டிரான்ஸ்ஃபர் ஆனவர்.

இதுகுறித்து மீண்டும் பேப்பர்ஸ் தாசில்தார் என்று குற்றம்சாட்டப்படும் தாசில்தார் பாக்கியலட்சுமியைத் தொடர்புகொண்டு கேட்டபோது, விளக்கமளிக்க மறுத்துவிட்டார். காஞ்சிபுரம் டி.ஆர்.ஓ. சுந்தரமூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுசென்றபோது, "விசாரித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கிறோம்' என்றனர்.

-மனோசௌந்தர்

பாலியல் தொழிலாளியிடம் பணபேரம் நடத்திய ஏட்டு!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் புறக்காவல்நிலைய பாதுகாப்பு அலுவலை மேற்கொண்டு வருபவர் தலைமைக் காவலர் மாரிமுத்து. உயரதிகாரிகளே அறிவுறுத்தினாலும் பணிநேரத்தில் சீருடை அணியாதவர்.

சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் சன்னதி தெருவில் பட்டர் ஒருவருக்குச் சொந்தமான விடுதியில் பாலியல் தொழில் நடந்துவருவது, ஏட்டு மாரிமுத்துவுக்கு தெரியவந்தது. இதைவைத்து பணம்பார்க்க திட்டம் போட்டவர் ஆய்வாளர் ஒருவரோடு சோதனை என்றபெயரில் சென்றார். அங்கே பாலியல் தொழிலில் ஈடுபட்ட இளம்பெண் சிக்கிவிட, அவரை இன்னொரு லாட்ஜுக்கு இழுத்துச்சென்று ரூ.1 லட்சம் தந்தால் விடுகிறேன் என்று பேரம் பேசியிருக்கிறார்கள் இருவரும். இறுதியில் ரூ.50 ஆயிரம் என்று பேசிமுடிக்கப்பட்டது.

இதை பாலியல் தரகர் ஒருவரின் மூலம் தெரிந்துகொண்ட விருதுநகர் மாவட்ட காவல்துறை உயரதிகாரி, ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை அதிகாரியை விசாரிக்கச் சொன்னார். விசாரணையின்போது, பணம்கேட்டு மிரட்டினார் என்று மாரிமுத்துவைக் கைகாட்டிவிட்டார் அந்தப்பெண்.

இதையறிந்து, மாரிமுத்துவை சஸ்பெண்ட் செய்ய முடிவுசெய்த விருதுநகர் மாவட்ட காவல்துறை உயரதிகாரி, பின்னர் சிவகாசி ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்தார். மாரிமுத்துவோ, "என்மீது புகார் கொடுத்தவரின் வீட்டில் தூக்குமாட்டி உயிரை விடப்போகிறேன்' என திரும்பத் திரும்ப கெஞ்சியிருக்கிறார். இதனால், மனமிறங்கிய உயரதிகாரி, மாரிமுத்துவை ஏற்கனவே பார்த்த கோவில் பாதுகாப்பு வேலையைத் தொடர உத்தரவிட்டிருக்கிறார். உடன்சென்ற ஆய்வாளர் நடவடிக்கை என்ற பெயரில், 10 நாட்கள் ஒட்டப்பிடாரம் தேர்தல் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. ராஜாவை தொடர்புகொண்டபோது, ""எனக்கு எதுவும் தெரியாது''’என்று லைனைத் துண்டித்தார். இதுகுறித்து நாம் விசாரித்து வருவதை அறிந்த ஏட்டு மாரிமுத்துவின் நண்பர் ஒருவர், “""மாரிமுத்து ரொம்ப நல்லவர்''’என்றார் நம்மிடம். ‘"என்ன நடந்ததென்று அந்த நல்லவர் விளக்கம் தரட்டும்'’என்றோம். மாரிமுத்துவிடம் பேசிவிட்டு நம்மிடம் ""மாரிமுத்து விளக்கம் அளிக்க விரும்பவில்லை, செய்தி போடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்''’என்றார்.

-ராம்கி