ஜெ. விசுவாசியை மாட்டிவிட்ட ஓ.பி.எஸ். மகன்!
நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்ன தாகவே, தேனி தொகுதிக்குட்பட்ட குச்சனூர் கோவில் கல்வெட்டில் ஓ.பி.எஸ்.ஸின் மகன் ரவீந்திர நாத்குமாரின் பெயருக்கு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிடப்பட்டது பரபரப்பைக் கிளப்பியது. பின்னர் அந்தக் கல்வெட்டு மூடி மறைக்கப்பட்டது.
இது எதிர்க்கட்சிகளின் சதி என்றும், சம் பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காட்டமாக பேட்டி கொடுத்தார் ரவீந்திர நாத்குமார். அவரது மாமாவான வக்கீல் சந்திரசேக ரும், ர.ர.க்கள் சிலரும் எஸ்.பி. பாஸ்கரனைச் சந்தித்து புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக கல்வெட்டு வைக்கப்பட்ட குச்சனூர் காசி அன்னபூரணி கோவில் நிர்வாகி வேல்முருகன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் ஓய்வு பெற்ற போலீஸ்காரர். தீவிர அ.தி.மு.க. விசுவாசியான வேல் முருகன், ஜெ. அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது யூனிஃபார்முடன் மொட்டை போட்டுக்கொண்டதால் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
ஜெ. மரணத்தில் மர்மம் இருப்பதாகக்கூறி லோயர் கேம்பில் உண்ணாவிரதம் இருந்தார். சசி முதல்வராக வரக்கூடாது என தீக் குளிக்கவும் முயற்சி செய்தார். இப்படி அரசுப்பணியில் இருக்கும்போதே தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டதாக வேல் முருகனுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது. வேல்முருகனும் காக்கியை தூக்கியெறிந்துவிட்டு விவசாயம் செய்துவந்தார்.
ஓ.பி.எஸ். ஆதரவாளரான இவர், காசி அன்னபூரணி கோவி லில் ராஜகோபுரம் எழுப்புவதற்காக, ஓ.பி.எஸ்.ஸிடம் கணிசமான தொகையை நன்கொடையாக வாங்கியிருக்கிறார். அதற்காகவே ரவீந்திரநாத்குமார் தேர்தலில் வெற்றிபெற்றுவிடுவார் என்ற அடிப்படையில் கல்வெட்டு வைத்துவிட்டார் வேல்முருகன். இது ஓ.பி.எஸ். தரப்புக்கும் தெரியும். இருப்பினும், கல்வெட்டு விவகாரம் மீடியாக்களிலும், சமூகவலைத்தளங்கிலும் கடுமையாக விவாதிக்கப் பட்ட பிறகே, தங்கள் சுயநலத்துக்காக ஜெ. விசுவாசியான வேல் முருகனை கம்பி எண்ண அனுப்பிவிட்டது ஓ.பி.எஸ். தரப்பு என்கிறார்கள் ர.ர.க்கள்.
-சக்தி
குடும்பத் தினரைக் கொன்றுவிட்டு நாடகமாடிய மகன்!
கடந்த மே 15-ல் காவேரிப்பாக்கம் சுப்புராயன் தெருவில் ஏ.சி. வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்றுபேர் உயிரிழந்த செய்தி, திண்டிவனம் நகரத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கோடைகாலத்தின் தாக்கத்தால் ஏ.சி. விற்பனை சூடு பிடித்திருக்கும் நேரத்தில், இந்தச் செய்தி தமிழகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
முதலில் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் ஏராளமான போலிசார் சம்பவம் நடந்த வீட்டில் ஆய்வு செய்தனர். ஒரே அறையில் உறங்கிக்கொண்டிருந்த ராஜி, அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் இளையமகன் கௌதமன் ஆகியோர் உடல் கருகிய நிலையில் பிணமாகக் கிடந்தனர். அறையில் ரத்தக்கறைகள் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தவே, டி.எஸ்.பி. கனகேஸ்வரி, ஆய்வாளர் சீனிபாபு தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கினர்.
அதேவீட்டில் பக்கத்து அறையில் உறங்கிக்கொண்டிருந்த ராஜியின் மூத்தமகன் கோவர்த்தனன், அவரது மனைவி தீபாபிரியா ஆகியோரிடம் விசாரணை நடந்தது. இருவரும் முரண்பாடான பதில்களைச் சொல்லியுள்ளனர். இதனால், விசாரணையைத் தீவிரப்படுத்த கோவர்த்தனன், தானே கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அ.தி.மு.க. நகர மாணவரணி தலைவரான கோவர்த்தனன், சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். எட்டு மாதங்களுக்கு முன்புதான் தீபாபிரியாவுடன் திருமணமானது.
ராஜி, கலைச்செல்வி இருவருமே கௌதமன் மீதே பாசமாக இருந்திருக்கின்றனர். சொத்தையும் அவருக்கே எழுதிவைக்க முடிவுசெய்துள்ளனர். இதனால், மூவரையும் கொன்றுவிட்டால் சொத்துகளைக் கைப்பற்றிவிடலாம் என்று திட்டமிட்டவர், மே 14-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் மூவரும் உறங்கிக்கொண்டிருந்த அறையில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்திருக்கிறார்.
வெளியில் கதவைத் தாழிட்டிருந்ததால், யாராலும் தப்பிக்க முடியவில்லை. ஆனால், பின்வாசல் வழியே ராஜி அலறியடித்துக்கொண்டு ஓடிவரவே கழுத்தை வெட்டி தீயில் தள்ளியிருக்கிறார். இந்தத் திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்த தீபாபிரியாவையும் மிரட்டியிருக்கிறார் கோவர்த்தனன்.
தீ விபத்தாக மறைந்துவிடும் என்று எண்ணிய நிலையில்தான், ராஜியின் ரத்தக்கறையும், வெட்டுக்காயமும் கோவர்த்தனனை மாட்டிவிட்டிருக்கிறது. ஒருபுறம் குற்றவாளிகள் கைது செய்யப்பட, இன்னொருபுறம் ஏ.சி. பயன்படுத்துவோர் நிம்மதி அடைந்துள்ளனர்.
-எஸ்.பி.சேகர்
ஊழலில் மிதக்கும் தாம்பரம் கூட்டுறவு வங்கி!
சென்னை தாம்பரத்தைத் தலைமை யிடமாகக் கொண்டு மடிப்பாக்கம், கூடு வாஞ்சேரி ஆகிய இரண்டு கிளைகளுடன் ஐம்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது தாம்பரம் கூட்டுறவு நகர வங்கி. இதில் ஆறு நிரந்தர ஊழியர்களும், தினக்கூலி அடிப் படையில் ஆறு ஊழியர்களும் பணிபுரி கின்றனர். நல்ல லாபகரமாக செயல்பட்டு வரும் இந்த வங்கியில், கடந்த 2011-ல் இருந்து பதினோரு அ.தி.மு.க. பிரமுகர்களே நிர்வாக உறுப்பினர்களாக பதவிவகித்து வருகின்றனர். இவர் களில் தலைவரான சந்திரமௌலியும், அரசு மேலாண்மை இயக்குநரான ரவிக் குமாரும் சேர்ந்து கொண்டு, வங்கி நிகர லாபத்தில் இருந்து ஐந்தாண்டுக்கு ஒரு முறை வங்கி ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் செட்டில்மெண்ட் தொகையை வழங்குவதில் அடாவடி செய்கின்றனர்.
இதுபற்றி பாதிக்கப்பட்ட ஊழியர் ஒருவர் நம்மிடம், “""இந்த இருவருக்கும் செட்டில்மெண்ட் தொகையில் 10 சதவீதத்தைக் கொடுத்தாகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஊழியர்களை மிரட்டி இந்தப் பணத்தைப் பறிமுதல் செய்து கொடுப்பதே பொதுமேலாளர் சங்கரும், மேலாளர் முரளியும்தான்''’என்றார். இது தொடர்பாக பொதுமேலாளர் சங்கரிடம் பேசுவதற்காக அழைத்தபோது, "அப்படி இல்லை' என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
-அரவிந்த்