அமைச்சர்களை மிரள வைக்கும் ஒட்டப்பிடாரம்!

வீரபாண்டிய கட்டபொம்மனின் கோட்டையை 1970-களில் புனரமைத்தவர் கலைஞர். கோட்டையைத் திறந்துவைக்கும் நேரத்தில் அவருடைய ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனாலும், அதைப் பொருட்படுத்தாமல் கோட்டைக்குள் நுழைந்து, அதன் அழகை ரசித்துவிட்டுத்தான் வந்தார்.

kk

அப்போதிருந்து கட்டபொம்மன் கோட்டைக்குள் யாராவது நுழைந்து திரும்பினால் அவருக்கு பதவி பறிபோகும் என்ற சென்டிமெண்ட் உருவானது. அதனால், ஆண்டுதோறும் கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவைக்கூட மாவட்ட ஆட்சியர்களே நடத்துகிறார்கள். அமைச்சர்கள் பங்கேற்கும் விழாவென்றால் கோட்டைக்கு வெளியேதான் நடக்கும்.

Advertisment

ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக எட்டு அமைச்சர்களும், முதல்வரும், துணை முதல்வரும் வந்து போயிருக்கிறார்கள். இதில் அமைச்சர்கள் பெரும்பாலும் தொகுதியிலேயே தங்கியிருந்து பிரச்சாரம் செய்கிறார்கள். வ.உ.சி. நினைவு இல்லத்தை ஆய்வு செய்தும்கூட, கட்டபொம்மன் கோட்டையைத் தவிர்த்துவிட்டார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

மே 10, 11 தேதிகளில் கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்கதேவி ஆலய விழா பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற்றது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமைதியாக நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட அதிகாரிகள் மட்டுமே கலந்துகொண்டனர். பதவி பறிபோய்விடுமோ என்கிற பயத்தில் அமைச்சர்கள் யாரும் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.

ஒருவேளை இந்த சென்டிமெண்ட் மட்டும் இல்லையென்றால், இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்புக்காக திருவிழாவையே அமைச்சர்கள் அதகளப்படுத்தியிருப்பார்கள். "கட்டபொம்மன் விழாவைத் தவிர்த்தாலும், பதவி பறிபோகும் என்று சொல்லப்படுகிறதே...…அப்போது யாரை காரணம் சொல்வார்கள்?' என்று கட்டபொம்மன் வாரிசுகள் கேள்வியெழுப்புகின்றனர்.

Advertisment

-பரமசிவன்

படங்கள்: ப.இராம்குமார்

கொங்குமண்டல அ.தி.மு.க.வில் புதிய புயல்!

ஜெ. காலத்தில் அமைச்சர் செங்கோட்டையனின் பவர் பிடுங்கப்பட்டு, பெருந்துறை எம்.எல்.ஏ.வான தோப்பு வெங்கடாஜலத்திற்கு கொடுக்கப்பட்டது. தோப்பு, கட்சியின் புறநகர் மா.செ., அமைச்சர் என இரண்டு பதவிகளை வகித்தார்.

ss

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பவானி தொகுதியில் வெற்றிபெற்ற கே.சி.கருப்பணன், எடப்பாடி சிபாரிசில் சசிகலா சகோதரர் திவாகரன் மூலம் தோப்புவுக்கு கிடைக்கவேண்டிய அமைச்சர் பதவியைத் தட்டிப்பறித்தார். அப்படியே சசிகலா ஆதரவில் புறநகர் மா.செ. பதவியையும் பிடித்து தோப்புவை டம்மியாக்கினார். இதில் இருவருக்கும் அரசியல் யுத்தம் தொடங்க, ஒருவரையொருவர் கட்சித் தலைமையிடம் புகார் வாசித்துவந்த நிலையில், தற்போது நிலைமை முற்றிவிட்டது என்கின்றனர் ஈரோட்டு ர.ர.க்கள்.

இதுபற்றி எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாஜலத்திடம் பேசியபோது, “""மா.செ.வா இருக்கிற அமைச்சர் கருப்பணன், தேர்தல் நேரத்துல எதிர்க்கட்சிகளோடு கள்ள உறவு வச்சிக்கிட்டு அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப்போட விடாம தன் ஆதரவாளர்கள் மூலமா மக்களை திசை திருப்பியிருக்காரு. அதற்கான ஆதாரங்கள் என்கிட்ட இருக்கு. அவர் அமைச்சரானதால் மக்களுக்கோ, கட்சிக்கோ எந்த நன்மையும் இல்ல. கோடி கோடியா சம்பாதிக்கிறாரு... இப்போ கட்சிக்கு துரோகம் செய்யுறாரு. அதுக்கான துரோகப் பட்டியலை கட்சித் தலைமைக்கு அனுப்பியிருக்கோம். நடவடிக்கை எடுக்கலைன்னா, ஈரோட்டிலிருந்து புதிய மாற்றத்தைத் தொடங்குவோம்''’என்றார் அவர்.

""அமைச்சர் பதவியைப் பறிக்கவே கருப்பணன் மீது தோப்பு புகார் சுமத்துகிறார். முதல்வர் எடப்பாடிக்கு கருப்பணன் மாமன்-மச்சான் உறவு. தோப்பு தலைகீழாக நின்னாலும் கருப்பணனை ஒண்ணும் பண்ணமுடியாது''’என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

கொங்குமண்டல அ.தி.மு.க.வில் ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, அ.தி.மு.க. கரைவேட்டி கட்டுவதை நிறுத்திக்கொண்டார். தற்போது தோப்புவும் தலைமைக்கெதிராக கலகத்திற்கு தயாராகிவிட்டார். ஈரோட்டில் மூன்று பகுதிச் செயலாளர்கள் அ.தி.மு.க.வுக்கு கும்பிடு போடத் தயாராகிவிட்டார்கள். தேர்தல் ரிசல்ட் வந்ததும் கொங்குமண்டல அ.தி.மு.க. நிர்வாகிகள் எத்தனைபேர் எதிர் முகாமிற்கு நடையைக் கட்டுவார்கள் என்பது தெரிந்துவிடும்.

-ஜீவாதங்கவேல்

ரசிகர்கள் நம்பும் ரஜினியின் திருச்சி விசிட்!

ss

நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் ஸ்டாலின் புஷ்பராஜ் என்பவர் திருச்சியை அடுத்த குமாரமங்கலம் பைபாஸ் ரோடு அருகே, தனக்குச் சொந்தமான 1,850 சதுரஅடி இடத்தில் ரஜினியின் பெற்றோர் ராமோஜிராவ்-ராம்பாய் ஆகியோருக்கு ரூ.35 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டியிருக்கிறார்.

மணிமண்டபத்தில் ரஜினி பெற்றோரின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது. இங்கு மே 11-ல் நடைபெற்ற மண்டலாபிஷேக பூஜையில் கலந்து கொள்ள ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ் நேரடியாக வந்திருந்தார்.

அப்போது, ரஜினியின் அரசியல் பிரவேசம் தாமதமாவது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ""வருகிற மே 23-ந் தேதிக்குப் பிறகு ரஜினி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார். அவர் தாமதம் செய்வது நல்லதுதான். இந்த மணிமண்டபத்தைப் பார்க்க ரஜினி திருச்சி வருவார்''’என்று பதிலளித்தார் சத்தியநாராயண ராவ்.

""ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று பலரும் சொல்லிவந்த நேரத்தில், தமிழருவி மணியன் தலைமையில் ரஜினி ரசிகர்களின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அதன்பிறகு "சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம்' என்று ரஜினியே அறிவித்தார்''’எனக்கூறும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ரஜினியின் திருச்சி விசிட்டை உற்று நோக்கியுள்ளனர்.

"எம்.பி. தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகு வரும் முக்கிய அறிவிப்பு அரசியல் அறிவிப்பாக இருக்கும் என்றும், தனது பெற்றோரின் மணிமண்டபத்தைப் பார்க்க வரும்போது, திருச்சியில் அரசியல் பிரவேசத்துக்கான பிரம்மாண்ட மாநாட்டை ரஜினி நடத்துவார்' என்றும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.

-ஜெ.டி.ஆர்.