குழந்தைகளை பாடாய்ப்படுத்தும் சட்டவிரோத பட்டாசு!

s

உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனையால், விருதுநகர் மாவட்டத்தில், குறிப்பாக சிவகாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு ஆலைகளை மூடி போராட்டமெல்லாம் நடந்தது. இதனைத் தொடர்ந்து, பேரியம் மற்றும் பொட்டாசியம் இல்லாத பசுமை பட்டாசு உற்பத்தி செய்வதற்கான புதிய பார்முலா வரையறுக்கப்பட்டுள்ளது.

பட்டாசு உற்பத்தியில் விதிகளைக் கடைப்பிடித்தே ஆகவேண்டிய கட்டாயமெல்லாம் உரிமம்பெற்ற பட்டாசு ஆலைகளுக்குத்தான். இதே மாவட்டத்தில் மீனாட்சிபுரம், விஜயகரிசல்குளம், தாயில்பட்டி போன்ற பகுதிகளில், வீடுகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள், இந்த விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல. அதனால், இந்தப் பகுதிகளில் விபத்து நடப்பது வாடிக்கையாகிவிட்டது.

Advertisment

சாத்தூர்-தாயில்பட்டியை அடுத்துள்ள கலைஞர் காலனியில் முனியசாமி என்பவரின் வீட்டில் அனுமதியின்றி, சட்டவிரோதமாக, வழக்கம்போல் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர். மே.08-ந்தேதி மாலை, தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீப்பற்றி அந்த வீட்டில் வெடிவிபத்து ஏற்பட்டு அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவியது.

தகவலறிந்து சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்புப் படையினர் இரண்டு மணிநேர போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர். இதில், மூன்று வீடுகள் மற்றும் தகர செட்டுகள் முழுவதுமாக எரிந்துபோயின. தர்ஷினி, கார்த்திகைலட்சுமி, விஜயவர்ஷினி, குருவுத்தாய், குருவம்மாள் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களுக்கு எந்த ஊரில் எந்த தனியார் மருத்துவமனை சிகிச்சை அளிக்கிறது என்பதைக்கூட ரகசியமாக வைத்திருக்கின்றனர்.

""வீடுகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பது அத்தனை அதிகாரிகளுக்கும் தெரியும். இந்த மக்களை வெறும் வாக்காளர்களாக மட்டுமே பார்க்கின்ற அரசியல்வாதிகள், சட்டரீதியில் நடவடிக்கை எடுத்து தடுக்க அதிகாரிகளை அனுமதிப்பதில்லை''’என்கிறார்கள் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள்.

Advertisment

இந்த விபத்தில் காயமடைந்த ஐந்துபேரில் இருவர் குழந்தைகள் என்பதுதான் மிகப்பெரிய கொடுமையே!

-ராம்கி

ஏழைக் குழந்தைகளின் எதிர்காலம் காக்க…!

s

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ளது ம.குன்னத்தூர். இந்த ஊரில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் அதிகமான குழந்தைகள் படிக்கின்றனர். இந்தப் பள்ளிக்கு புதிய வகுப்பறைகளைக் கட்டித்தர அரசு தயாராக இருந்தாலும், போதிய இடவசதி இல்லாமல் தள்ளிப்போனதால், குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இதனையறிந்த பள்ளிக்கு அருகில் இடம் வைத்திருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தி.மு.க. கிளைச் செயலாளர் ஏழுமலை மற்றும் சடையன், தங்களுக்குச் சொந்தமான 30 சென்ட் நிலத்தை பள்ளிக்கு எழுதிக்கொடுக்க முன்வந்துள்ளனர். இந்த நிலத்தை விற்றால் மகளின் திருமணத்தை முடித்துவைக்கலாம் என ஏழுமலையின் உறவினர்கள் தடுத்திருக்கின்றனர். அதேபோல், மும்பையில் வசித்துவரும் சடையனின் குடும்பத்தினரும் நிலத்தை இலவசமாக எழுதிக் கொடுப்பதை விரும்பவில்லை. முற்றாக மறுத்துள்ளனர்.

இருப்பினும், ஏழைப் பிள்ளைகளின் படிப்பிற்கு உதவியாக இருக்கும் என்பதால் ஏழுமலையும், சடையனும் தங்களது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அதன்படி, மே.06-ந்தேதி நிலத்தை எழுதிக்கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே தனது சம்பந்தி மூலமாக ஏற்பாடுகளை செய்து வைத்திருந்த சடையன், மும்பையில் இருந்து புறப்பட்டு வந்து, ஏழுமலையுடன் இணைந்து பத்திரப்பதிவில் கையெழுத்திட்டார்.

ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு தடையாக இருந்த நிலப் பிரச்சனையை, குடும்பத்தினரின் தடைகளையும் மீறி முன்வந்து தீர்த்துவைத்த ஏழுமலை மற்றும் சடையனுக்கு ஊர்மக்கள் மாலை, சால்வை அணிந்து பாராட்டினர்.

-எஸ்.பி.சேகர்

அதிகாரத்தால் அல்லல்பட்ட திருமணம்!

s

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி ஆணையராக இருப்பவர் செல்வபாலாஜி (32). இதே நகராட்சியில் கொசு ஒழிக்கும் திட்டத்தின் கணக்கெடுப்புப் பணியில் தற்காலிக பணியாளராக சேர்ந்தார் செதுக்கரை கிராமத்தைச் சேர்ந்த ரோஜா (20). இவர்கள் இருவருக்கும் இடையே ஓராண்டுக்கு முன்னர் காதல் மலர்ந்தது.

தலைமைச் செயலகத்தில் பெரிய பொறுப்பில் இருக்கும் செல்வபாலாஜியின் அம்மா இந்தக் காதலை ஏற்கவில்லை. இதனால், செல்வபாலாஜியும் ரோஜாவைத் திருமணம் செய்ய தயங்கியிருக்கிறார். இதுபற்றி, தான் டிரைவராக பணிபுரியும் குடியாத்தம் நகர அ.தி.மு.க. முக்கியப் பிரமுகரிடம் முறையிட்டிருக்கிறார் ரோஜாவின் அப்பா.

அவர் போட்டுக்கொடுத்த திட்டத்தின்படி, மே. 03-ந் தேதி காலை ஆணையர் அலுவலகம் சென்ற ரோஜா, தனது இடதுகை மணிக்கட்டை அறுத்திருக்கிறார். இதைப்பார்த்து அதிர்ச்சியான செல்வபாலாஜியை பள்ளிக்கொண்டா ரங்கநாதர் கோவிலுக்கு அழைத்துச்சென்று தாலி கட்ட வைத்துள்ளார்.

பின்னர் இருவரும் நகராட்சி அலுவலகத்திற்கு கூட்டிச் செல்லப்பட்டனர். இதையறிந்து அங்குவந்த செல்வபாலாஜியின் குடும்பத்தினர், அவரை தங்களோடு கூட்டிச் சென்றுள்ளனர். இதைத்தடுக்க முயன்ற ரோஜாவை குடியாத்தம் மகளிர் காக்கிகள் காவல்நிலையத்துக்கு இழுத்துச் சென்றனர். அங்கு தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதாக புகைப்படங்களை ரோஜா காட்ட, செல்வபாலாஜி காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். தலைமைச் செயலகத்தில் இருந்து போலீசாருக்கு பிரஷர் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து இரு குடும்பத்தாரையும் தனது அறையில் வைத்து தனியே பேசினார் இன்ஸ்பெக்டர் இருதயராஜ். 2 மணி நேரத்துக்குப் பிறகு வெளியே வந்த இருவரும் அவரவர் குடும்பத்தாருடன் சென்றுவிட்டனர். செல்வபாலாஜி 20 நாட்கள் மெடிக்கல் லீவில் போய்விட்டார். ரோஜா செய்வதறியாமல் திகைத்துப்போய் நிற்கிறார்.

-து.ராஜா