யாரை தப்ப வைக்க வங்கி ஊழியர் பலி?

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் - வளநாடு தைல மரக்காட்டுக்குள் ஒரு கார் எரிந்த நிலையில் ஏப்.30-ந்தேதி கண்டு பிடிக்கப்பட்டது.

s

விசாரணையில் அது பஞ்சாப் நேஷனல் வங்கி அலு வலக உதவியாளர் திருக்கட்டளை மாரிமுத்துவின் கார் என்பது தெரியவந்தது.

Advertisment

அவரது மனைவி ராணி ஏப்.28-லிருந்தே கணவர் வீட்டிற்கு வரவில்லை என புகார் கொடுத்திருந்தார்.

சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு சென்று போலீசார் விசாரித்தனர்.

"முதல்நாள் ஆய்வில் ரூ.5 கோடி மதிப்பிலான நகைகளைக் காணவில்லை' என்றவர்கள், "வீடியோ ஃபுட் டேஜுகளுக்கான ஹார்ட் டிஸ்க் குகளைக் காண வில்லை' எனக் கூறியுள்ளனர். ஆனாலும், புகார் கொடுக்கவில்லை.

Advertisment

இந்நிலையில், காணாமல்போன மாரிமுத்துவைப் பிடிக்க மூன்று தனிப் படைகள் அமைக்கப்பட்டன.

மே.03-ந்தேதி மணமேல்குடி கோடிக்கரை கடற்கரையில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கரைஒதுங்கியது.

இது மாரிமுத்துவாக இருக்க லாம் என்று சந்தேகித்த போலீசார், அவரது மனைவி ராணியை அழைத்து சடலத்தின் சட்டையை மட்டும் காட்டினர். அது தன் கணவருடைய சட்டைதான் என்பதை உறுதிசெய்த ராணி, ""கடைசியாக பேசும்போது மனமுடைஞ்சி பேசினாரு. பக்கத்துல இருந்து யாரோ சொல்லிக் கொடுத்தாங்க. அவரோட மரணத்துக்குப் பின்னாடி ஒரு கும்பலே இருக்கலாம்''’என்றார்.

அதற்கு மறுநாளான மே.04-ந் தேதி 530 வாடிக்கையாளர்களின் 13.75 கிலோ தங்க நகைகளைக் காணவில்லை. அதன் மதிப்பு ரூ.4.84 கோடி என வங்கி மேலாளர் மாரீஸ் கண்ணன் புகார் கொடுத்திருக்கிறார்.

"சாதாரண அலுவலக உதவி யாளரான மாரிமுத்துவிடம் லாக்கர் சாவி இருக்க வாய்ப்பே இல்லை. யாரோ சிலரின் ஆதாயத்துக்காக மாரிமுத்துவை பலிகொடுத்து திசைதிருப்பப் பார்த்துள்ளனர். அதனால்தான், வீடியோ ஃபுட்டேஜு களுக்கான ஹார்ட் டிஸ்க்குகளை காரோடு வைத்து எரித்திருக்கின் றனர்'’என மாரிமுத்துவின் உற வினர்கள் சந்தேகம் எழுப்பு கின்றனர்.

-இரா.பகத்சிங்

மார்பிங் போட்டோ பதிவேற்றிய பள்ளி ஆசிரியை!

s

சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆபாசப் படங்களை அப்லோட் செய்வது பெரும்பாலும் ஆண்கள்தான். விருதுநகரிலோ, பெண் ஒருவர் இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார். அதுவும் ஒரு பள்ளி ஆசிரியை.

விருதுநகர் - சிவகாசி சாலையில் ஸ்ரீவித்யா மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் முதல்வராக இருக்கும் சசிகுமாரும், துணை முதல்வரான உமா மகேஸ்வரியும் முத்த மிட்டுக் கொள்வதுபோன்ற படத்தை முக நூலில் யாரோ பதிவிட்டிருந்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான உமா மகேஸ்வரி, பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டார். நிர்வாகம் காவல்துறையிடம் புகார்கொடுக்கச் சொன்னது.

சைபர் கிரைம் போலீசார் இந்தப் புகா ரை விசாரித்தபோது, ஏற்கனவே பள்ளியில் வேலைசெய்து பணிநீக்கம் செய்யப்பட்ட வைஷ்ணவிதான் செய்தார் என்பதைக் கண்டுபிடித்தனர். தனக்குக் கிடைக்காத துணை முதல்வர் பதவி உமா மகேஸ்வரிக்குக் கிடைத்த ஆத்திரத்தில் வைஷ்ணவி செய்த காரியம்தான் இதுவென்று அறிந்த போலீசார், தொடர்ந்து வைஷ்ணவியை விசாரித்து வருகின்றனர்.

மார்பிங் செய்து படத்தை வெளியிட வைஷ் ணவிக்கு நிச்சயம் இன்னொருவர் உதவியிருப்பார் என்று பள்ளி நிர்வாகிகளுக்கு சந்தேகம் ஏற்பட் டுள்ளது. முதல்வர் சசிகுமாரும்தானே அவதூறுக்கு ஆளாகியிருக்கிறார். அவர் ஏன் புகார் கொடுக்க முன்வர வில்லை என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். நாம் பள்ளி முதல்வர் சசிகுமாரின் எண்ணைத் தொடர்புகொண்டபோது அது ஸ்விட்ச்-ஆப் மோடிலேயே இருந்தது.

ஒழுக்கத்தைக் கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களே இப்படி நடந்து கொள்ளலாமா?

-ராம்கி

ஆடியோவால் அம்பலமான மா.செ.!

s

தேனி மாவட்ட தே.மு.தி.க.வின் ஆண்டிப்பட்டி ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திக். திருப்பூரில் அரசு வேலை பார்க்கும் இவர், சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்காக விடுமுறை எடுத்து தேர்தல் வேலைபார்க்க தேனி சென்றிருக்கிறார்.

அங்கு மா.செ. கிருஷ்ணமூர்த்தியின் செயல்பாடு களால் அதிருப்தியானவர், மகளிரணி மா.செ. சந்திராவிடம் புலம்பியிருக்கிறார். இவர்கள் இருவரின் உரையாடல் அடங்கிய ஆடியோவில் பேசும் சந்திரா, “""இங்க பீல்டுஒர்க் பண்றவங்களுக்கு மரியாதை கெடையாது. தேனியில மட்டும்தான் இப்படி. எதிர்த்து கிராஸ் கேள்வி கேட்டுட்டாலே ஓரங்கட்டிருவாங்க. இத்தனை வருஷமா உழைச்சுமே சந்திரா எந்த வேலையும் பார்க்கலைன்னு சொல்லி என்னையே மாத்தப்பாத்தாரு மா.செ. உங்களை யாரு வேலை பார்க்கக் கூப்பிட்டாங்கன்னு என்கிட்டயே கேட்டாரு''’என்கிறார்.

தொடர்ந்து பேசும் கார்த்திக், ""இந்த மாவட்டம் (மா.செ.) இருக்கிறவரைக்கும் தேனியில கட்சி டெவலப் ஆகாது அக்கா. கட்சியை சாதிக்கட்சி ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டாங்க. காசு அடிக்கிறதுதான் அவங்க குறிக்கோள்''’என்றதும், ""காசை மிச்சம் பண்றதுக்காகவே விஜயபிரபா வந்தப்போ வண்டிக்கு நாலு பேருக்கு மேல கூட்டி வரக் கூடாதுன்னு சொன்னாரு. நகரம், ஒன்றியம் மூலமா புகார் போயிருக்கு. விடிவுகாலம் பிறக்கும் தம்பி''’என்கிறார் சந்திரா.

“நான் யாரையும் வேலை பார்க்க வேண்டாம்னு சொல்லலை. "இது பொய்யான தகவல்'’’ என்று தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறார் மா.செ. கிருஷ்ணமூர்த்தி.

கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிவிட்டு தேனி ரிசல்ட் பீதியில் ஓ.பி.எஸ். தரப்பு இருக்கும் வேளையில், இந்த ஆடியோ விவகாரம் பூகம்பமாய் வெடித்திருக்கிறது.

-சக்தி