தடையை உடைத்து ‘மே’தினம்!
உலகமெங்கும் வாழும் உழைக்கும் மக்களின் பெருமையைப் போற்றும் மே தினம் நூறாண்டு புகழ்பெற்றது. இந்நாளில் தியாகிகளைப் போற்றி தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து விண்ணதிர முழக்கமிட்டு, மே.01-ந்தேதி செங்கொடி ஏந்தி ஊர்வலம் செல்வது வழக்கம்.
சமய சடங்குகளுக்கு அப்பாற்பட்ட இந்த நாளில், ஊர்வலம் செல்ல தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம்காட்டி அந்தந்த ஊர் அதிகாரிகளும், போலீசாரும் அனுமதிதர மறுத்தனர். இதுதொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தலைவரும், பெருந்துறை முன்னாள் எம்.எல்.ஏ.வு மான தோழர் நா.பெரியசாமி, ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநில தலைவர் திருப்பூர் சுப்பராயன் மற்றும் மாநிலச் செயலாளர் மூர்த்தி ஆகியோர் இந்திய மற்றும் தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில், "இதற்குமுன் தேர்தல் காலங்களில் மே தின நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுத் துள்ளனர். நடத்தை விதிகளைக் காரணம்காட்டாமல், இந்தநாளின் வரலாற்றுப் பின்னணியைப் புரிந்துகொண்டு அனுமதியளிக்க வேண்டும்'’என்று வலியுறுத்தி இருந்தனர்.
இதையடுத்து, ஏப்ரல் 30-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்/தேர்தல் அதிகாரிகளுக்கு ஒரு அரசாணை அனுப்பினார். அதில், “"மே தின நிகழ்ச்சிகள், கொடியேற்றுவது, ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கவேண்டும்'’என தெரிவித்திருந்தார்.
""மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போட்டதுபோல தேர்தல்நடத்தை விதியைக் காரணம்காட்டி, தடைபோட்டார்கள். எல்லாவற்றையும் போல எங்கள் உரிமையை போராடி வென்றிருக்கிறோம். எதேச்சதிகாரப் போக்கை உடைத்து கம்பீரமாக மே தின நிகழ்ச்சிகளை நடத்திவிட்டோம்'' என்றார் தோழர் நா.பெரியசாமி உற்சாகத்துடன்.
சுதந்திரதினம், குடியரசுதினத்தைப் போலவே மே தினம் எந்த விதிகளுக்கும் பொருந்தாத விடுதலைத் திருநாள் என்ற வரலாற்றை அதிகாரத்தில் இருப்பவர்கள் படித்தாவது தெரிந்துகொள்ள வேண்டும்.
- ஜீவாதங்கவேல்
பள்ளிக் கல்வியில் திணறும் வேலூர்!
ஏப்ரல் 19, 29 தேதிகளில் முறையே பன்னிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளி யாகின. இந்த இரண்டிலுமே தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங் களில் வேலூருக்குக் கிடைத்தது கடைசி இடம். ஒவ்வொரு ஆண்டும் இதேநிலை தொடர்வதால் கல்வியாளர்கள் கொந்தளிக்கின்றனர்.
இதுபற்றி ஆசிரியர் சங்கப்பொறுப்பில் இருக்கும் முக்கிய ஆசிரியர் ஒருவரிடம் பேசியபோது, ""அடிப்படையில் இது மிகப்பெரிய மாவட்டம். மூன்று மாவட்டங்களுக்கு இணை யானது. இங்கு விவசாயம் பொய்த்துப் போனதால் பொதுமக்கள் பிற மாநிலங்களுக்கு வேலைதேடி சென்றுவிட்டனர். அவர்களின் பிள்ளைகள் பெற்றோரின் பராமரிப்பின்றி வளர்வதே கல்வியில் பின் தங்கியிருக்க முக்கியக் காரணம். பல மாணவர்கள் தவறான பழக்கங்கள், சாதிப்பெருமை யென்று இப்போதே கிளம்பு கின்றனர். இத்தனைக்கும் மேல், 89% தேர்ச்சி கிடைத்ததற்கே பல ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுதான் காரணம்''’என்றார்.
""இன்றைய மாணவர்களுக்கு அறிவுரைகளுக்கு பதில் ஆலோசனைகள் வழங்கவேண்டும். அரசு -ஆசிரியர்கள் -பெற்றோர்களின் கூட்டுமுயற்சியின் மூலமே அது நடக்கும்''’என்கிறார் ஓய்வுபெற்ற கல்வித்துறை அதிகாரி ரத்னா நடராஜன்.
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் மார்ஸிடம் கேட்ட போது, "பொதுத்தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை ஒவ் வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருப்பதுதான் காரணம். தேர்ச்சி பெறாதவர் களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பதால் பின்தங்கியிருக்கிறோம்''’என்று விளக்கம் தருகிறார். பள்ளிக் கல்வியில் வேலூருக்கு கடைசி இடம்தான் நிரந்தரம் என்ற நிலையை மாற்ற இனியேனும் முயற்சிகள் நடக்குமா?
-து.ராஜா
மதுரை ரயில்வே மல்லுக்கட்டு!
"வாகன காப்பகம் தற்காலிகமாக இயங்கவில்லை. இங்கு நிறுத்தும் வாகனங்களுக்கு இரயில்வே நிர்வாகம் பொறுப் பேற்காது'’ என மதுரை ரயில்வே மேற்கு நுழைவுவாயில் வாகன காப்பகச் சுவரில் அறிவிப்பு வெளி யிட்டுள்ளனர். அதே ரயில்வே வளாகத்தில், ‘"இருசக்கர வாகன திருடர்கள் ஜாக்கிரதை'’ என அறி விப்பு பலகை ஒன்றைத் தொங்க விட்டுள்ளது காவல்துறை. ஆனா லும், வேறுவழியின்றி ஆயிரக் கணக்கான இருசக்கர வாகனங் களை அங்கே நிறுத்திவிட்டுச் செல்கிறார்கள், மதுரையிலிருந்து தினமும் வெளியூருக்குச் சென்று திரும்பும் ரயில் பயணிகள்.
அந்த வாகன காப்பகத்தில் நிறுத்தியிருந்த தனது டூவீலரை, வெகு சிரமப்பட்டு வெளியில் எடுத்துக் கிளம்பிய சங்கர்குமார் நம்மிடம், ""கட்டணம் பெற்றுக்கொண்டு பாதுகாப்பு தரு வதற்காகத் தானே வாகனக் காப்பகம் கட்டிவிட்டிருக்கின்றனர்? மக்கள்நலனைக் கருத்தில்கொண்டு வாகனக் காப்பகம் இயங்குவதற்கான நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டிருக்க வேண்டாமா? ஒப்பந்தகாரர் இல்லையென்பதால், டோக்கன் வாங்காமல், வேறுவழியின்றி இங்கே வாகனத்தை நிறுத்திவிட்டுப் போகிறோம். வெளியூருக்கு வேலைக்குச் செல்லுமிடத்தில் நிம்மதியாக வேலைசெய்ய முடியுமா?''’என்றார் ஆதங்கத்துடன்.
இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட வர்த்தக மேலாளர் செல்வராஜை தொடர்புகொண்டபோது, ""பழைய டென்டர் காலம் முடிந்துவிட்டது. புதிய டென்டர் ரெடியாக இருந்தாலும் தேர்தல் நடத்தை விதிகளின் காரணமாக அவார்ட் பண்ணாமல் நிறுத்தி வைத்திருக்கிறோம். மக்கள்நலனைக் கருதி விதிகளை மீறினால் எங்களுக்கு சம்மன்வரும். தேர்தல் முடிவுகள் வெளி யானதும் வாகன காப்பகம் இயங்க ஆரம்பித்துவிடும்''’என்றார்.
""லஞ்சம் வாங்குவது சட்டப்படி குற்றமென்றாலும் சுயநலத்திற்காக சட்டத்தை மீறுகின்றனர். மக்கள்நலன் என்று வந்துவிட்டால் அதே சட்டத்தைக் காட்டி தப்பித்துக் கொள்வார்கள். மக்களைக் காக்கத்தானே சட்ட மெல்லாம்''’என்று சினந்தார் சங்கர் குமார்.
-ராம்கி