வரிந்து கட்டும் 10 அமைச்சர்கள்!
தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜியை எப்படியும் தோற்கடித்தே ஆகவேண்டும் என்பதற்காகவே அரவக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர்களாக தங்கமணி, வீரமணி, செங்கோட்டையன், அன்பழகன் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் பணியாற்றத் திட்டமிட்டுள்ளார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக பொறுப்பாளராக உள்ள தொகுதி என்பதாலும், செந்தில்பாலாஜியும், அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் அமைச்சர்கள் உட்பட அனைத்து நிர்வாகிகளுக்கும் கூடுதல் நெருக்கடி.
செந்தில்பாலாஜியின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இதற்காக தொகுதியில் கணிசமாக இருக்கும் வேட்டுவ கவுண்டர் சமுதாய மக்கள் மற்றும் இஸ்லாமியர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறார்.
இந்நிலையில், செந்தில்பாலாஜி செயல்வீரர்கள் கூட்டம் நடத்திய அதே மண்டபத்தில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன், “""அ.தி.மு.க.விற்கு சோதனை வந்தபோது காட்டிக்கொடுத்தவர் செந்தில்பாலாஜி. இதுதான் தி.மு.க.விற்கு கடைசி தேர்தலாக இருக்கவேண்டும்'' என’’ காட்டமாகவே பேசினார்.
கடந்தமுறை செந்தில்பாலாஜி பணத்தை தண்ணீராக இறைத்ததால்தான் தேர்தல் ரத்தானது. அதேபோல் இந்தமுறையும் செய்வார். அப்போது கையும் களவுமாக பிடித்துக் கொடுத்து தேர்தலை நிறுத்த வேண்டும் என்றும் பொறுப்பாளர்களாக இருக்கும் அமைச்சர்கள் திட்டம் தீட்டுகின்றனர். ஆனால், இதையெல்லாம் பெரிதுபடுத்தாமல் ஜோதிமணி, கே.சி.பி., நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோருடன் களத்தில் கலக்கி வருகிறார் செந்தில்பாலாஜி.
-ஜெ.டி.ஆர்.
குடியாத்தம் அ.தி.மு.க.வுக்கு டூர்… ஆம்பூருக்கு டுர்ர்ர்…!
வேலூர் மக்களவைத் தொகுதியில் சீட் கிடைத்ததுமே, குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கான செலவுகளையும் ஏற்றுக் கொண்டார் ஏ.சி.சண்முகம்.
ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் முடிந்ததும் எக்ஸிட் போல் நடத்திய குடியாத்தம் அ.தி.மு.க. நிர்வாகிகள் குஷியாகிவிட்டனர். இதே குஷியோடு ந.செ. பழனி தலைமையில் வேட்பாளர் கஸ்பா.மூர்த்தி உட்பட 25 நிர்வாகிகள் ஊட்டி, வால்பாறை, கேரளா என இன்பச்சுற்றுலா கிளம்பிவிட்டனர். அங்கு இருந்தபடியே சில செல்ஃபிக்களை சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டதில் கடுப்பான கூட்டணிக் கட்சிகளான பா.ம.க. மற்றும் தே.முதி.க. நிர்வாகிகள், “""நாங்க எவ்ளோ உழைச்சோம். எங்களையும் டூருக்கு கூட்டிட்டுப் போயிருக்கணும்ல. இதுதான் கூட்டணி தர்மமா?''’என கோபத்துடன் பதிவிட்டுள்ளனர்.
குடியாத்தம் நிர்வாகிகளின் இந்த டூர் செய்தியைக் கேள்விப்பட்ட ஆம்பூர் அ.தி.மு.க.வினர், “""தேர்தல் செலவுக்காக ஏ.சி.எஸ். கொடுத்த பணத்தை அமுக்கி பர்னிச்சர்களை வாங்கிக் குவித்துவிட்டனர் ஆம்பூர் நிர்வாகிகள். நம்மையும் டூர் கூட்டிச் சென்றிருக்கலாமே''’என புலம்பித் தள்ளியிருக்கின்றனர்.
ஆனால், தேர்தல் முடிந்ததும் ஆம்பூர் ந.செ. மதியழகன், நகர து.செ. மணி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மூவருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்ததும், வேட்பாளர் ஜோதிராமலிங்க ராஜா நிர்வாகிகளோடு அனுசரணையாக இல்லாததுமே டூர் கூட்டிச் செல்லாததற்குக் காரணம் என்று விளக்கம் தந்திருக்கின்றனர் ஆம்பூர் நிர்வாகிகள்.
-து.ராஜா
புதுச்சேரியில் புதிய கட்சி!
புதுச்சேரி அரசியல் தலைவர்களில் முக்கியமானவர்களுள் ஒருவர் ப.கண்ணன். காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர், 1985 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக வெற்றிபெற்று அமைச்சரானார். 1996-ல் காங்கிரஸில் இருந்து பிரிந்து புதுச்சேரி த.மா.கா. தலைவரானது, புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் மற்றும் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தொடங்கி, பின் கலைத்தது மீண்டும் காங்கிரஸில் இணைந்தது, அ.தி.மு.க.வில் இணைந்து தோற்றுப்போனது என கண்ணனின் அரசியல் ட்ராக் ரெக்கார்டு ஏற்ற இறக்கமானது.
சமீபகாலமாக சொல்லிக்கொள்ளும்படியாக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருந்துவந்த கண்ணன், அவ்வப்போது ஆளும் காங்கிரஸ் மற்றும் என்.ஆர். காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வந்தார். புதுச்சேரி நலனுக்காக புதிய கட்சி தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியைப் பதிவுசெய்யும் வேலைகளிலும் இறங்கினார்.
"மக்கள் முன்னேற்ற காங்கிரஸ்'’என்ற பெயரில் தற்போது புதிய கட்சிக்கான விண்ணப்பம் தேர்தல் ஆணையத்தில் கண்ணன் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், தலைவராக ப.கண்ணன், பொதுச்செயலாளராக முதலியார்பேட்டை வெற்றிச்செல்வம், பொருளாளராக மாரியம்மன்கோவில் தெரு முரளி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆட்சேபனைகள் எழாதபட்சத்தில் ஒரு மாதத்திற்குப் பிறகு கட்சி முறைப்படி பதிவாகிவிடும் என்கின்றனர் கண்ணனின் ஆதரவாளர்கள்.
பல்வேறு பதவிகளில் இருந்தபோது தன்னால் பொருளாதார ரீதியில் ஆதாயம் அடைந்தவர்களின் ஆதரவு பக்கபலமாக இருக்கும் என கணக்கு போடுகிறார் கண்ணன். அதேசமயம், எங்கே கொடுத்த காசைத் திருப்பிக் கேட்டுவிடுவாரோ என்ற பதைபதைப்பில் கண்ணனின் போன் வந்தாலே தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விடுகிறார்களாம் அவரால் ஆதாயம் அடைந்தவர்கள்.
-சுந்தரபாண்டியன்