திருவாரூர் அமைச்சருக்கு வெண்கலச் சிலை!
திருவாரூர் அ.தி.மு.க. மா.செ.வும், அமைச்சருமான காமராஜும், தி.மு.க. மா.செ.வும், திருவாரூர் வேட்பாளருமான பூண்டி கலைவாணனும் பிறந்தது ஏப்ரல் 04-ல்.
ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த தினத்தை திருவாரூரிலேயே கொண்டாடி அமர்க்களப்படுத்துவார் பூண்டி கலைவாணன். அதேவேளை, யாருக்கும் தெரியாமல் சென்னையில் குதூகலமாக கொண்டாடுவார் காமராஜ்.
இந்தமுறை பிறந்த தினத்தன்று இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.-ஐப் பார்த்து வாழ்த்து பெற்றுக்கொண்டார் அமைச்சர் காமராஜ். அப்போது, "உங்க தொகுதியை நெனைச்சாத்தான் பயமா இருக்கு. தி.மு.க.கிட்ட தோற்றாலும் பரவாயில்ல. அ.ம.மு.க.கிட்ட தோற்று மூணாவது இடத்துக்கு போய்விடாம பாத்துக்கோங்க. இது கட்சியோட தன்மானப் பிரச்சனை'’என்று சோகமாகக் கேட்டுக் கொண்டனர் இருவரும். "என்னண்ணே சொல்றீங்க. கண்டிப்பா நாமதான் ஜெயிப்போம்'’என்று அதிர்ச்சியோடு சொன்னார் அமைச்சர் காமராஜ்.
அதற்கு, "அப்படி ஜெயிச்சிக்காட்டு... உனக்கு வெண்கலத்துல சிலை வைக்கிறேன்'’என்றார் இ.பி.எஸ். “"என்னது உயிரோடு இருக்கும் எனக்கு சிலையா?'’என ப
திருவாரூர் அமைச்சருக்கு வெண்கலச் சிலை!
திருவாரூர் அ.தி.மு.க. மா.செ.வும், அமைச்சருமான காமராஜும், தி.மு.க. மா.செ.வும், திருவாரூர் வேட்பாளருமான பூண்டி கலைவாணனும் பிறந்தது ஏப்ரல் 04-ல்.
ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த தினத்தை திருவாரூரிலேயே கொண்டாடி அமர்க்களப்படுத்துவார் பூண்டி கலைவாணன். அதேவேளை, யாருக்கும் தெரியாமல் சென்னையில் குதூகலமாக கொண்டாடுவார் காமராஜ்.
இந்தமுறை பிறந்த தினத்தன்று இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.-ஐப் பார்த்து வாழ்த்து பெற்றுக்கொண்டார் அமைச்சர் காமராஜ். அப்போது, "உங்க தொகுதியை நெனைச்சாத்தான் பயமா இருக்கு. தி.மு.க.கிட்ட தோற்றாலும் பரவாயில்ல. அ.ம.மு.க.கிட்ட தோற்று மூணாவது இடத்துக்கு போய்விடாம பாத்துக்கோங்க. இது கட்சியோட தன்மானப் பிரச்சனை'’என்று சோகமாகக் கேட்டுக் கொண்டனர் இருவரும். "என்னண்ணே சொல்றீங்க. கண்டிப்பா நாமதான் ஜெயிப்போம்'’என்று அதிர்ச்சியோடு சொன்னார் அமைச்சர் காமராஜ்.
அதற்கு, "அப்படி ஜெயிச்சிக்காட்டு... உனக்கு வெண்கலத்துல சிலை வைக்கிறேன்'’என்றார் இ.பி.எஸ். “"என்னது உயிரோடு இருக்கும் எனக்கு சிலையா?'’என பேரதிர்ச்சி அடைந்த காமராஜ், “"சிலையெல்லாம் வேணாம், நிச்சயம் ஜெயிச்சி காட்டுவோம்'’எனக் கூறிவிட்டு கிளம்பியவர், தடபுடலான வேலைகளில் இறங்கிவிட்டார்.
கலைஞர் போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெற்ற தொகுதி என்றாலும், தி.மு.க. வேட்பாளராக பூண்டி கலைவாணன் மக்கள் செல்வாக்கை அதிகமாகப் பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஸ்டாலின், அங்கேயே பிரச்சாரத்தை நிறைவுசெய்ய இருப்பதை பலமாக எண்ணுகிறார் அவர்.
""அமைச்சர் காமராஜைப் பொறுத்தவரையில் அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.காமராஜைத் தோற்கடிப்பதை மட்டுமே குறிக்கோளாக எண்ணி, அதற்கான வேலைகளை முடுக்கி விட்டுள்ளார். அவரின் வேகத்திற்கு அ.தி.மு.க. வேட்பாளர் ஜீவானந்தத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை''’என்கிறார்கள் அ.தி.மு.க.வினரே.
-க.செல்வகுமார்
ஈரோடு கணேசமூர்த்திக்கு எதிராக ஸ்டெர்லைட்!
ஈரோடு மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக காங்கேயத்தைச் சேர்ந்த வெங்கு மணிமாறன் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணியின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் ம.தி.மு.க. மாநிலப் பொருளாளர் அ.கணேசமூர்த்தி.
அ.தி.மு.க. வேட்பாளர் மணிமாறன் காங்கேயம் நகராட்சி தலைவராக இருந்தபோது வரிவசூல் உள்ளிட்ட பல விஷயங்களில் கமிஷன் போட்டு கல்லா கட்டியவர். ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் அப்ரூவலுக்காக இரண்டு மூன்று ப்ளாட்டுகள் வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தவர் என குற்றச்சாட்டு பரபரப்பாக எழுந்துள்ளது. அதுபோக, மாஜி அமைச்சரும், மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.வி.ராமலிங்கம், மாஜி துணைமேயர் கே.சி.பழனிசாமி, பெரியார் நகர் மனோகரன் என பதினெட்டு கோஷ்டிகள் ஈரோடு அ.தி.மு.க.வில் இருப்பது, மணிமாறனுக்கு எதிராக திரும்பியிருக்கிறது.
அ.ம.மு.க. வேட்பாளர் சரவணன் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பதினைந்தாயிரம் வாக்குகள் வரை பெற்றுவிடலாம் என்கிற நம்பிக்கையில் வலம்வருகிறார்.
ம.தி.மு.க. கணேசமூர்த்திக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது; எளிமையானவர் என்ற பெயரும் பெற்றிருக்கிறார். ஈரோட்டில் பிரதானமான ஜவுளித்தொழில் ஜி.எஸ்.டி.யால் பறிபோனது. மேலும், விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள், கெயில் குழாய் போன்றவை அமைத்து வாழ்வாதாரங்களைப் பறிக்க நினைக்கும் மத்திய, மாநில அரசுகள் மீது இருக்கும் மக்களின் கோபம் கணேசமூர்த்திக்கு சாதகமாக திரும்பும் வாய்ப்புள்ளது.
அதேசமயம், ம.தி.மு.க. பிரதிநிதி ஒருவர் வெற்றிபெற்று எம்.பி.யாகக் கூடாது என்ற அசைன்மெண்டில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வைட்டமின் "ப'வை இறக்கியுள்ளதாக அ.தி.மு.க. தரப்பிலிருந்தே தகவல் கசிகிறது.
-ஜீவாதங்கவேல்
திருவள்ளூர் -பூந்தமல்லி நிலவரம்!
காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் கஜானாவைத் திறக்கமாட்டேன் என்றதால், பிரச்சாரத்தில் பல பகுதிகளிலும் ஏற்பட்ட சுணக்கம், தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் உத்தரவுக்குப் பிறகு சீராகியுள்ளது.
அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீமுக்கும் இப்போதைய அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், பென்ஜமின் ஆகியோருக்கும் இடையே கோஷ்டிப்பூசல் உச்சத்தில் இருக்கிறது.
இவர்களுக்கு இடையே அ.ம.மு.க. சார்பில் களமிறங்கியுள்ளார் பொன்.ராஜா. அ.தி.மு.க. வாக்குகளை இவர் எந்த அளவுக்கு பிரிக்கிறார் என்பதில்தான் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி இருக்கிறது.
தி.மு.க. அணியினர் வேலையைத் தீவிரப்படுத்தியிருப்பதால் அ.தி.மு.க. வேட்பாளர் வேணுகோபாலும் தனது தரப்பை முடுக்கிவிட்டிருக்கிறார். ஆனால், கும்மிடிப்பூண்டி தொகுதியில் எம்.எல்.ஏ. விஜயகுமாருக்கும், எல்லாபுரம் ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரனுக்கும் ஆகவில்லை. மாதவரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்திக்கும் மாவட்டத் துணைச்செயலாளர் தட்சிணாமூர்த்திக்கும் மோதல் இருக்கிறது. இந்தச் சிக்கல்கள் யாருக்குச் சாதகமாக முடியும் என்பதே தொகுதியின் புதிராக இருக்கிறது.
திருவள்ளூர் எம்.பி. தொகுதிக்குட்பட்ட பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கிருஷ்ணசாமி வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதால் மாவட்டச் செயலாளர் ஆவடி நாசர் களப்பணியை முழுவீச்சில் முடுக்கிவிட்டிருக்கிறார். அ.தி.மு.க. சார்பில் வைத்தியநாதன், அ.ம.மு.க. சார்பில் ஏழுமலை ஆகியோர் போட்டியில் இருக்கிறார்கள். மும்முனைப் போட்டியில் அ.தி.மு.க. வாக்குகளை பெருமளவு ஏழுமலை பிரிப்பார் என்பதால் தி.மு.க. வேட்பாளர் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
-அரவிந்த்