அமித்ஷாவுக்குக் கிடைத்த எலெக்ஷன் ரிசல்ட்!
பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து வாக்கு சேகரித்துவிட்டு, ஹெச்.ராஜாவுக்காக சிவகங்கை வந்தார். தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் லேனாவிலக்கில் இருக்கும் தனியார் கல்லூரியில் ஹெலிபேட் அமைக்கப்பட்டு, அங்கேயே பொதுக்கூட்ட மேடையும் போடப்பட்டிருந்தது.
மாவட்டம் முழுவதும் இருந்து மக்களை லாரிகளில் அழைத்து வந்திருந்தனர். மதியம் வரை காத்திருந்தவர்களில் பாதிபேர் தொடக்கத்திலேயே கிளம்பிவிட்டனர். ஒன்றரைமணி நேரம் தாமதமாகவே வந்தார் அமித்ஷா. அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிக் கொண்டிருந்தபோதே மீதமிருந்த கூட்டம் வெளியேறத் தொடங்கியது. இதைக் கவனித்த அமித்ஷா ஹெச்.ராஜாவைப் பார்த்து முறைத்தவர், விஜயபாஸ்கர் பேச்சை நிறுத்தச் சொல்லிவிட்டு மைக் பிடித்தார். அவர் பேசத்தொடங்கிய எட்டாவது நிமிடத்தில் மொத்தக் கூட்டமும் காணாமல் போயிருந்தது. அமைச்சரையும், மொழிபெயர்த்துக்கொண்டிருந்த ஹெச்.ராஜாவையும் அமித்ஷா திரும்பத் திரும்ப வெறுப்போடு பார்த்தார்.
"ஒரேயொரு எம்.பி. இருந்தாலும் தமிழகத்திற்காக ஏராளமான திட்டங்களைச் செய்திருக்கிறது மோடி அரசு. மீனவர்களுக்காக சாகர்மாலா திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஹெச்.ராஜாவை வெற்றிபெறச் செய்யவேண்டும்'’என்று கடுப்போடு பேசி முடித்தார். இதைக் கவனித்துக்கொண்டிருந்த வாக்காளர்கள் சிலர், "எலெக்ஷன் ரிசல்ட் என்னான்னு நல்லாவே தெரிஞ்சிக்கிட்டாரு அமித்ஷா'’என்று கமெண்ட் அடித்து சிரித்துக் கொண்டனர்.
-செம்பருத்தி
தொழிலதிபர்களை மிரட்டும் தேர்தல் ஆணையம்?
சீமாந்திரா மாநிலத்தில் மக்களவை, சட்டசபை இரண்டுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கும் பணத்தை வாரி இறைக்கின்றன அரசியல் கட்சிகள். இதை மோப்பம் பிடித்துவிட்ட மோடி வகையறா, தெலுங்குதேசம் கட்சிப் பிரமுகர்கள், ஆதரவு தொழிலதிபர்களைக் கண்கொத்திப் பாம்பாக கண்காணித்து வந்தது. இருந்தும் பணம் விளையாடுவதைத் தடுக்க முடியவில்லை. திருப்பதி கோவிலில் இருந்துதான் பணம் சப்ளையாகிறது என்று தகவல்கள் கொடுக்கப்பட்டன.
இதையடுத்து, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவரும், தெலுங்குதேசம் கட்சிப் பிரமுகருமான கடப்பாவைச் சேர்ந்த சுதாகர் யாதவின் வீடு மற்றும் நிறுவனங்களில் ஏப்.03-ல் ரெய்டு நடத்தியது வருமான வரித்துறை. “இந்த சுதாகர் யாதவுக்கும், துரைமுருகனுக்கும் சம்பந்தம் இருக்கிறது. அதனால்தான் அங்கு ரெய்டு நடக்கிறது’’ என்று கிளப்பிவிட்டது அ.தி.மு.க. தரப்பு. இதனால், உஷாராக தேர்தல் பணிகளை செய்துவருகிறார் துரைமுருகன்.
வேலூர் தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் ஆம்பூர், வாணியம்பாடியில் உள்ள தொழிலதிபர்கள், தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளைச் சந்தித்து, "உங்கள் நிறுவனங்களில் வேலைசெய்யும் ஊழியர்களை எனக்கு வாக்களிக்கச் சொல்லுங்கள்'’என வேண்டுகோள் விடுத்தார். ஏப்.02-ல் துரைமுருகன் ஆம்பூர், வாணியம்பாடியில் உள்ள தொழிலதிபர்களைச் சந்தித்து தனது மகன் கதிர்ஆனந்துக்காக அதே கோரிக்கையை வைத்தார். ஆனால், துரைமுருகன் சந்தித்த தொழிலதிபர்களை மட்டும் குறிவைத்துச் சென்ற அதிகாரிகள், "தேர்தல் நிதி எதுவும் கொடுத்தீங்களா?'’எனக் குடைந்திருக்கிறார்கள்.
அ.தி.மு.க. வேட்பாளர்களான வேலூர் ஏ.சி.சண்முகம், ஆம்பூர் ஜோதிராமலிங்கராஜா, குடியாத்தம் கஸ்பா.மூர்த்தி வந்தபோது கண்டுகொள்ளாத அதிகாரிகள், துரைமுருகன் வந்துபோனதும் வருகிறார்கள் என்றால் நம்மை மறைமுகமாக மிரட்டுகிறார்களோ’’ என்று தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள் தொழிலதிபர்கள். இதைக் கேள்விப்பட்டு மிரட்சியில் இருக்கிறது துரைமுருகன் தரப்பு.
-து.ராஜா
சிக்கியது வி.சி.க. பணமா? தொழிலதிபர் விளக்கம்!
பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரளி சுங்கச்சாவடி அருகே, காரில் ரூ.2 கோடி பணத்தை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும்படை.
இதுதொடர்பாக, திருச்சி வி.சி.க. மக்களவை தொகுதி செயலாளர் தங்கதுரை, திருச்சியைச் சேர்ந்த பிரபாகரன், திண்டுக்கல்லைச் சேர்ந்த தங்கம் மற்றும் சென்னையைச் சேர்ந்த மாரஸ் கிளைவ் ஆகியோர் மீது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் கடத்துதல், குற்றம்செய்ய முயற்சி, தேர்தல் நடத்தை விதிமீறல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தார் இன்ஸ்பெக்டர் விஜயகுமார்.
இதையடுத்து, திருச்சி மன்னார்புரத்தில் வி.சி.க. வர்த்தகப்பிரிவு மாநிலத் துணைச் செயலாளர் ராஜா மற்றும் அச்சு ஊடகப்பிரிவு மாநில துணைச்செயலாளர் ரமேஷ்குமார் ஆகிய சகோதரர்கள் நடத்திவரும் எல்பின் நிறுவனத்தில் ஏப்.03-ல் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ரியல் எஸ்டேட், முதலீட்டு திட்டங்கள், ஆன்லைன் மூலம் மளிகைப் பொருட்கள் விற்பனை போன்றவைதான் இந்த நிறுவனத்தின் முக்கிய தொழில்கள்.
இதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ்குமார், ""ஏற்கனவே, என் சகோதரரை ரவுடிகும்பல் கடத்தி மிரட்டி பணம் பறித்த சம்பவத்தில் சிலரை கைதுசெய்தது காவல்துறை. அதிலிருந்தே ரவுடிகளிடம் இருந்து மிரட்டல் வருகிறது. அதனால்தான் பணத்தைக் கணக்கில் காட்டாமல் வைத்திருந்தேன். இது தெரியாமல் கட்சித் தோழர்கள் காரை எடுத்துச் சென்றுவிட்டனர். அது என்னுடைய பணம்தான். அதற்குள் திருமாவளவன் தேர்தலுக்கு கொண்டுசென்ற பணம் என்று சிலர் திட்டமிட்டு பரப்பிவிட்டு விட்டார்கள். இதில் கைதான நால்வருக்கும் நீதிபதி ஜாமீன் வழங்கிவிட்டார். சட்டப்படி விசாரணைக்கு ஒத்துழைப்பேன்''’என்றார் அவர்.
-ஜெ.டி.ஆர்.