தனித்து அசத்தும் மன்சூர் அலிகான்!
திண்டுக்கல் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார் நடிகர் மன்சூர் அலிகான். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பிருந்தே தொகுதிக்கு சென்று தனக்கே உரிய பாணியில் அதிரடியாக வாக்கு சேகரிக்கிறார்.
தனது மகனைக் கூட்டிக்கொண்டு திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் டீ குடிப்ப துடன், வடை, பஜ்ஜி போட்டு வாக்காளர்களைக் கவர் செய்கிறார். இதே போல் கறிக்கடை, பால் வியாபாரி, ஜவுளிக்கடை, மளிகைக் கடை, காய் கறிக்கடை என எதையும் விட்டுவைக் காமல் சென்று வேலை செய்த வாறே பிட் நோட்டீஸைக் கொடுத்து வாக்குகளை சேகரித்து விடுகிறார். அதிகாலையில் துப்புரவுத் தொழிலாளர்களுடன் சேர்ந்து துப்புரவுப் பணி யிலும் ஈடுபட்டு மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார்.
இப்படி பிஸியாக இருந்தவரை இடைமறித்து பேசியபோது, ""நான் 1999-ல் பெரியகுளம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகள் வரை பெற்றேன். பிறகு 2009-ல் திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு சினிமாவில் சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்தேன். தற்போது மீண்டுமொரு பத்தாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு திண்டுக்கல்லில் நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிடுகிறேன். நான் இந்த மண்ணின் மைந்தன். என் தாயார் ஊரான இடைய கோட்டை பள்ளப்பட்டியில்தான் 10-ஆம் வகுப்பு வரை படித்தேன். தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நிச்சயம் வெற்றிபெறுவேன்''’என்றார் மன்சூர்அலிகான்.
-சக்தி
உதயநிதி கேள்விக்கு மக்கள் பதில்!
தி.மு.க. ஸ்டார் பேச்சாளராக களமிறங்கி இருக்கும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் மார்ச் 27-ந்தேதி ஈரோட்டில் ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்திக்காக வாக்குசேகரிக்க வந்திருந்தார்.
அப்போது பேசியவர், ""எங்க தாத்தா கலைஞருக்கு ஈரோடுதான் குருகுலம். பகுத்தறிவு ஆசான் தந்தை பெரியார் பிறந்த புண்ணியபூமியான இங்குதானே கலைஞர் சுயமரியாதைப் பாடம் படித் தார். மனிதரில் ஏற்றத்தாழ்வு பேதத்தை ஒழித்த மண் இது. ஆனால், மீண்டும் அந்த பேதம் பா.ஜ.க. வடிவில் சூழ்கிறது. இந்த குருகுலத்தில் இருந்து கேட்கிறேன். அவர்களை உள்ளே விடக்கூடாது! செய்வீர்களா?'' என்று கேட்டதும், கூட்டத்திலிருந்த மக்கள் "செய்வோம்'’ என்று கோர ஸாக பதில்கூறினர்.
""இந்தத் தேர்தலில் கதாநாயகன் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை, அப்படினா வில்லன் யாரு'' என உதயநிதி கேட்க, அடுத்த நொடியே "மோடிதான்'’ என்றது மக்கள் கூட்டம். "போன தேர்தல்ல மோடி அலை அடிக்குதுன்னு பி.ஜே.பி.காரங்க விளம்பரம் செஞ்சாங்க. இப்போ மக்கள் நீங்களே சொல்லுங்க யாரோட அலை அடிக்குது' என்று கேட்க... “""தளபதி அலை... தி.மு.க. அலை, பா.ஜ.க.-அ.தி.மு.க. எதிர்ப்பு அலை''’என்றனர் சத்தமாக. அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர், ""நம்ம தேர்தல் அறிக்கை கதாநாயகன். கதாநாயகி நயன்கிட்டே இருந்து நன்றி அறிக்கையும் வந்திருக்கு. அப்புறமென்ன?''’எனக் கேட்க உற்சாகமாகி கையசைத்தார் உதயநிதி. ""நயன்தாரா அறிக்கை வேற பிரச்சனைக்குதான் என்றாலும், தி.மு.க.வுக்கு நன்றி தெரிவிச்சது மக்களிடம் என்னமா ஸ்பீடா போயிருக்கு''’என தி.மு.க. மூத்த உ.பி.க்கள் இருவர் பேசிக்கொண்டனர்.
-ஜீவாதங்கவேல்
சகஜமாகப் பழகும் கார்த்தி சிதம்பரம்!
தனக்கும், தன்னை நம்பி வந்தவர்களுக்குமான கடைசி வாய்ப்பு என்பதால், தன்னையே மாற்றிக்கொண்டு தேர்தல் களத்திற்கு வந்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.
வேட்பு மனுத்தாக்கல் செய்துவிட்டு காரைக்குடி கட்சி அலுவலகத்தில் கட்சி ஊழியர்களைச் சந்தித்த அவர் எடுத்த எடுப்பிலேயே, ""ஏங்க,…நான் நல்லா சாப்பிடுவேன். சிக்கன், மட்டனெல்லாம் வெளுத்து வாங்குவேன். ஒரு பிடி பிடிக்கணும். யாராச்சும் கூப்பிட்டிருக்கீங்களா?''’என்று கேட்டார். ""கார்த்தி யாரோடயும் பேசமாட்டான்னு சொல்றதை நம்பாதீங்க. எப்ப வேணும்னாலும் என்னைப் பார்க்க வரலாம். இல்லைனா நீங்க கூப்பிட்டா நான் வர்றேன்''’’ என்று சகஜமாக அவர் பேசுவதைப் பார்த்து பலரும் அசந்துபோனார்கள்.
""கார்த்தியை பிடிக்கவே முடியாதுன்னு சொன்னாங்க. என்னமோ ஏதோன்னு நெனைச்சா பச்சைப் புள்ளையா, பக்கத்து வீட்டுத் தம்பி மாதிரிலாம் நடந்துக்கிறாரு. அக்கா... அக்கான்னு கூப்பிடுறவர, ஜமீந்தாரு வீட்டுப்புள்ளையை மாதிரி கூப்பிட்டு கெடுத்து வைச்சிருக்காய்ங்க. அவரு கார்த்தி சார் இல்லை...…அண்ணன்''’என்று நெகிழ்ந்தார் அமராவதி புதூரைச் சேர்ந்த வசந்தா. ""அக்கா... அக்கான்னு வாஞ்சையாக் கூப்பிட்டு, என்ன குறைன்னு கேட்குற புள்ளைக்குத்தானே ஓட்டுப் போடணும்?''’என்கிறார் கிருஷ்ணாநகர் ராஜம்மாள்.
செல்லும் இடமெல்லாம் இப்படி மக்களோடு நெருங்கிப் பழகும் கார்த்தி சிதம்பரம், கூட்டணிக் கட்சித் தொண்டர் களையும் அன்பால் வலியுறுத்தத் தவறவில்லை. சொந்தக் கட்சிக்குள்ளேயே வாள்சுழற்றிய சுதர்சன நாச்சியப்பனையும் இணைத்து “நாங்கள் வெவ்வேறல்ல’’ என்பதுபோல் நடந்துகொள்கிறார் கார்த்தி. "உங்களோட சப்போர்ட் மதவாத, சாதியவாதக் கூட்டணிக்கா, இல்லை எனக்கா?' என்று வாக்கு சேகரிப்பு யுக்தியிலும் தன்னை முன்னிலைப்படுத்துகிறார் கார்த்தி.
-நாகேந்திரன்