பா.ஜ.க. இணையதளம்! முடங்கிய பின்னணி!
பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கம் மார்ச் 5-ந்தேதி முடக்கப்பட்டது. 20 நாட்களுக்கு மேலாகியும் அதனை பா.ஜ.க.வால் மீட்க முடியவில்லை. தற்காலிகமாக இணையதளத்தின் முகப்புப் பக்கத்தை மட்டும் தயார்செய்தாலும், தங்களது மென்பொருளை சவுகிதாரின் கட்சி திருடிவிட்டதாக ஆந்திர நிறுவனம் ஒன்று குற்றம்சாட்டுகிறது.
தேர்தல் நெருங்கிவரும் வேளையில் இப்படி தங்களது இணையதளப்பக்கம் முடங்கியிருப்பதால் நெருக்கடியில் இருக்கிறது பா.ஜ.க. இதைச் செய்தவர்கள் யாரென்றே தெரியாத நிலையில், பல புதுப்புது தகவல்கள் இதுதொடர்பாக வெளியாகின்றன. நந்தன் ராமகிருஷ்ணன் என்பவர் தனது முகநூல் கணக்கில்…“2014 தேர்தலுக்கும் தற்போதைய சூழலுக்கும் ஒரு வித்தியாசத்தை சமூக ஊடகங்களில் இயங்குபவர்கள் உணர்ந்திருக்க முடியும். பா.ஜ.க. பரப்பும் எந்தப் பொய்ச் செய்தியையும் ஆதாரத்தோடு துவம்சம் செய்கின்றனர் பலர். தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ம.க. ஐ.டி. விங்குகள் களமிறங்கி பா.ஜ.க.வை காப்பாற்ற வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. இதற்கெல்லாம் காரணமாக மூன்றெழுத்தைத்தான் கூறுகின்றனர் பா.ஜ.க. தலைவர்கள்.
World Rationalist Forum எனப்படும் ர.த.எ.-தான் அது. உலகளவில் பகுத்தறிவின் பெயரால் இயங்கிவரும் இவர்களைப் பற்றிய தகவல்கள் ரகசியமாக உள்ளது. சாதி, மதம், கடவுள் போன்ற மூடநம்பிக்கைகளால் மனிதகுலத்தை பின்னோக்கி இழுப்பவர்களை நீக்குவதுதான் இவர்களின் கொள்கை. இந்த வருட டார்கெட்டாக பா.ஜ.க.வை கையில் எடுத்துள்ளனர். "உலகின் தலைசிறந்த ஹேக்கர்களால் பா.ஜ.க. இணையதளப் பக்கத்தை முடக்கி வைத்திருப்பதும் இவர்கள்தான். தேர்தல் முடியும்வரை அதனை மீட்க வாய்ப்பே இல்லை'’என்று பதிவிட்டுள்ளார்.
அதற்குக் கீழே, "படிக்க நல்லாதான் இருக்கு... நடந்தா சிறப்பு'’என்று ஒருவர் கமெண்ட் விட்டிருக்கிறார்.
-ஜெ.டி.ஆர்.
தொண்டர்களை கடுப்பாக்கிய மந்திரி!
நாகை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் எம்.பி. தேர்தல்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ஓ.எஸ்.மணியன், ""நீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் என்று நினைத்துக்கொண்டு, சுறுசுறுப்பாக தேர்தல் வேலை செய்யவேண்டும். அதிகாலையில் வீட்டுவாசலில் கோலம் போடவும், சாணிப்பால் தெளிக்கவும் வரும் பெண்களிடம் ஓட்டு சேகரிக்கவேண்டும். இளசுகளையும், பொடுசுகளையும் கண்டால் சலாம் வைக்கவேண்டும்’’ என்று கூறியதோடு ஒரு குட்டிக் கதையையும் சொன்னார்.
“காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர் ஐயர் ஏன் தோற்றார் தெரியுமா? அவர் போட்டியிட்ட மயிலாடுதுறை தொகுதியில் ஒரு டாக்டர் வீட்டில் தங்கியிருந்தார். அவருக்கு சாப்பாடு வாங்கித்தர ஒரு சிறுவனை நியமித்தார் அந்த டாக்டர். ஒருநாள் அந்த சிறுவனிடம் "நான் ஜெயிச்சிடுவேனா தம்பி?'’என்று மணிசங்கர் கேட்க, "நீங்க ஜெயிக்கிறது கஷ்டம் ஐயா'’என்று யோசிக்காமல் சொன்னான் அந்தச் சிறுவன். பதறிப்போய் எதற்கு என்று கேட்க... "நீங்கதான் என்கிட்ட ஓட்டு கேட்கலையே ஐயா'’என்றானாம். எனவே, தேர்தல் நேரத்தில் யாரையும் விட்டுவைக்காமல் சலாம் வைக்கணும் என்று மணிசங்கர் ஐயர் தன்னிடம் கூறினார்''’என்று கதையை முடித்தார் ஓ.எஸ்.மணியன்.
கூட்டத்தில் இருந்த அ.தி.மு.க. தொண்டர்களோ, ""இவர்தான்“கஜா புயல் சமயத்துல பெருசா பாதிப்பில்லைன்னு சொல்லி மக்களோட எதிர்ப்பைச் சந்திச்சாரு. வேதாரண்யம் பக்கம் இவரைப் போகச்சொன்னா மக்கள் சாணிப்பால் வீசாம இருக்காங்களான்னு பார்ப்போம்''’என்று கடிந்து கொண்டனர்.
-க.செல்வகுமார்
வேட்பாளர்களால் முனகும் முக்கியப் பிரமுகர்கள்!
விருதுநகர் தொகுதியில் முக்கிய பிரமுகர் ஒருவருடைய வீட்டுக்கு சாத்தூர் தி.மு.க. வேட்பாளர் சீனிவாசனை அழைத்துச்சென்ற தி.மு.க. மா.செ. கே.கே.எஸ்.எஸ்.ஆர். "அடுத்து நம்ம ஆட்சிதான். ஊருக்கோ, பிசினஸுக்கோ என்ன பிரச்சனைன்னாலும் நாங்க பார்த்துக்குவோம்'’எனக்கூறி ஆதரவு கேட்க... டீ, பிஸ்கட் தந்து உபசரித்து அனுப்பினார் அவர்.
மறுநாள் அதே முக்கியப் பிரமுகரை சாத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் மற்றும் விருதுநகர் எம்.பி. வேட்பாளர் தே.மு.தி.க. அழகர்சாமியைக் கூட்டிச்சென்ற அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, "கவர்மெண்ட் நம்மகிட்ட இருக்கு. நாங்க உங்கக்கிட்ட இருக்கோம்'’எனக்கூறி ஆதரவு கேட்க, அவர்களுக்கும் டீ, பிஸ்கட் கொடுத்து உபசரித்து அனுப்பினார்.
அந்த சமயத்தில் அறைக்குள் அலுவலகப் பணியில் இருந்த, அந்த நிறுவனத்தில் 45 ஆண்டுகளாக பணிபுரியும் ஒருவரிடம், "வாக்களிக்கும் விஷயத்தில் உங்க முதலாளியின் எண்ண ஓட்டம் எப்படியிருக்கு?'’என்று கேட்டோம். அதற்கு அவர், "எங்க முதலாளியோட அப்பாவும் முக்கியப் பிரமுகர்தான். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம். இப்ப இந்தக் குடும்பத்துல யாருக்கும் அரசியல் ஈடுபாடு இல்லை. ஆரம்பத்துல இருந்தே, தேர்தல் நேரத்துல கே.கே.எஸ்.எஸ்.ஆர். எங்க முதலாளியைப் பார்த்துட்டுப் போறது வழக்கமா நடக்கிறதுதான்'’என்றார்.
""தேர்தலின்போது தொகுதியின் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுவதென்பது சம்பிரதாயமாகிவிட்டது. நிச்சயம் தொழிலதிபர்களாக இருக்கும் இந்த முக்கியப் பிரமுகர்களை அரசியல்வாதிகள் சந்திப்பதால், எப்படியும் ஒரு மணிநேரமாவது வீணாகிறது. இந்த அரசியல்வாதிங்க தொல்லை தாங்க முடியலப்பா''’என்று சொல்லிச் சிரித்தார் தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளின் செயல்பாடுகளைக் கவனித்துவரும் அந்த‘பெரியமுதலாளி.
-சி.என்.இராமகிருஷ்ணன்