மாணவருக்கு பளார்! மிரண்டுபோன எஸ்.பி.!
பொள்ளாச்சி பயங்கரத்தில் தொடர்புடைய காமுகன்களின் மீது முறையான நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் வெடித் துள்ளது.
புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி நுழைவுவாயிலில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் இதே காரணத்திற்காக வகுப்புகளைப் புறக்கணித்து பதாகைகளுடன் முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர் மாணவிகள். அப்போது அங்குவந்த அரசு வழக்கறிஞர் ராமநாதன், "போராட்டமெல்லாம் நடத்தக்கூடாது... உள்ளே போங்க' என்று மிரட்டினார். “"பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட வங்கமேல நடவடிக்கை எடுக்குறவரை போராட்டம் ஓயாது, நீங்க யாரு எங்களை மிரட்டுறதுக்கு'’என்று மாணவிகள் கேட்டனர்.
டி.எஸ்.பி. ஆறுமுகம், "எல்லாரும் உள்ளே போங்க.. இல்லைனா ஆயிரம் போலீஸை கொண்டு வருவேன்'’என அதிகாரத் தொனியில் மிரட்டியும் மாணவிகள் விடுவதாக இல்லை. இந்நிலையில், மாணவி களுக்கு ஆதரவாக மாணவர்களும் இணைந்துகொள்ள, அனைவரையும் வழிநடத்திக் கொண்டிருந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் அரவிந்தசாமியை பளார் என்று அறைந்தார் மாவட்ட எஸ்.பி. செல்வராஜ். இதையடுத்து மாணவிகளுக்கு துணையாக நின்ற மாணவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று வேனில் ஏற்ற முயன்றனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மாணவிகள் முன்னும் பின்னும் அமர்ந்து போலீசாருக்கு எதிராக முழக்கமிட்டனர்.
அப்போது பெண் போலீசார் இல்லாமல் ஆண் போலீசாரே மாணவிகளைத் தள்ளினர். இதை சாக்காக வைத்து சீருடை அணியா மல் வந்திருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் மாணவிகளிடம் சில்மிஷத்திலும் ஈடுபட்டார்.
எஸ்.பி.யால் தாக்கப்பட்ட மாணவர் அரவிந்தசாமியை சக தோழர்கள் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதையறிந்த மாமன்னர் கல்லூரி மாணவர்களும் போராட் டத்தில் குதித்தனர். மறுநாள் எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாகச் சென்ற மாணவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், எஸ்.பி.யிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தவறைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று எஸ்.பி. கேட்டுக் கொண்டதால், போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
-இரா.பகத்சிங்
தெம்பில் அ.தி.மு.க.! கத்திமேல் தி.மு.க.!
2016 சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் தனியாகவே ஐம்பதாயிரம் வாக்குகளைக் குவித்தது பா.ம.க. அந்தளவுக்கு வன்னியர்களின் வாக்குவங்கி அந்தத் தொகுதியில் இருக்கிறது.
அதனால், வரவிருக்கும் இடைத்தேர்தலில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த எளிமையான ஒருவரை வேட்பாளராக்கலாம் என காவேரிப் பாக்கம் அடுத்த வெங்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சம்பத் என்பவரைத் தேர்ந்தெடுத் திருக்கிறது அ.தி.மு.க. தலைமை. நேர்காணலின் போது “"தேர்தலுக்கு எவ்வளவு செய்வீங்க?'’என்று கேட்டதற்கு, “"என்கிட்ட இருக்கறது 4 வேட்டியும், 4 சட்டையும்தான்'’என்றுள்ளார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவராக இருந்த சம்பத்தின் முழு செலவையும் கட்சியே பார்க்கவுள்ளதாக கூறுகின்றனர் சோளிங்கர் அ.தி.மு.க.வினர்.
தி.மு.க. வேட்பாளராக கல்வி நிறுவன அதிபர் அசோகன் களமிறங்கு கிறார். சோளிங்கரில் பெரும் பான்மை வகிக்கும் முதலியார் சமுதாய வாக்குகளை அசோகன் மூலம் கவர்ந்துவிடலாம் என நம்புகிறது தி.மு.க. இவருக்கான செலவை அரக்கோணம் தொகுதி எம்.பி. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் கவனிப்பாராம்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் சோளிங்கரில் வெற்றிபெற்று தகுதி நீக்கப் பட்ட பார்த்திபனின் பெயர் இடம்பெறவில்லை. இரட்டை இலை சின்னம் இல்லாததால் ஜெயித்த தொகுதியிலேயே தோற்க விரும்பாமல் பார்த்திபன் பின்வாங்கியதுதான் இதற்கான காரணமாம்.
சோளிங்கரில் இன்னொரு முதலியார் வேட்பாளர் வரக்கூடாது என்று கத்தி மேல் நிற்கிறது தி.மு.க. பா.ம.க.-தே.மு.தி.க. கூட்டணி பலம், கடந்த தேர்தல் வெற்றிக்கணக்கு என தெம்பாக இருக்கிறது அ.தி.மு.க.
-து.ராஜா
ஓசையில்லாமல் வேலை செய்யும் அண்ணாச்சி!
கலைஞர் மறைவுக்குப் பிறகு தி.மு.க.வில் இணைக்கப்பட்டவர் கானா என்ற கருப்பசாமி பாண்டியன். கருப்பசாமி பாண்டியனுக்கு தேனி மக்களவைத் தொகுதியின் தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மூன்று மக்களவைத் தொகுதிகளுக்குள் வெற்றியைத் தீர்மானிக்கிற அளவுக்கான தேவர் சமுதாயத்தினரின் வாக்குகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருக்கின்றன. இவர்களில் தனது சொல்லுக்குக் கட்டுப்படும் வாக்குகளை தி.மு.க. பக்கம் ஓசைப்படாமல் திருப்பும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் கருப்பசாமி பாண்டியன்.
சாதி வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர் என்பதால்தான், கடந்த ஆண்டு மருதூரில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை சமாளிக்க முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறியபோது, கானாவின் உதவியை நாடினார்கள். ரத்தக்களறி ஆகவிருந்த அந்தப் பிரச்சனை, கானாவின் தலையீட்டால் சுமுகமான முடிவுக்கு வந்தது.
சமீபத்தில் காஷ்மீரில் பலியான சி.ஆர்.பி.எஃப். வீரர் சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க சவலாப்பேரிக்கு வந்தார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். அப்போது கூடிய கூட்டம் கருப்பசாமி பாண்டியனின் பலத்திற்கு ஒரு சாம்பிளாக பார்க்கப்பட்டது.
தேர்தல் பணி குறித்து அவரிடம் கேட்டபோது, “""தலைவர் எனக்குக் கொடுத்த பணியை வெற்றிகரமாக முடித்து, வெற்றிக்கனியை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம்''’என்றார்
-பரமசிவன்