ஓ.பி.எஸ். தளபதியை இழுத்த இ.பி.எஸ்.!
திண்டுக்கல் மாவட்டத்தில், இந்நாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் போனவாரம் வரை எதிரும் புதிருமாய் தனித்தனிக் கோஷ்டிகளாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
கடந்த வாரம் கொடைக்கானலில் மலர்க் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி. இதற்கான அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.சின் பெயரை தவிர்த்து விட்டார்கள். ஆனால் ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளரும் திண்டுக்கல் சீனிவாசனின் எதிரியுமான நத்தம் விஸ்வநாதனின் பெயர் பளிச்சென இடம் பெற்றிருந்தது.
தனது பெயர் எதிரணி அழைப்பிதழில் இடம் பெற்றிருப்பதைக் கண்டு மனம் பூரித்த நத்தம், கொடைக்கானல் நகரின் பல இடங்களில் முதலமைச்சர் எடப்பாடியை வாழ்த்தி பிளெக்ஸ் பேனர்களை வைத்தார். இந்தப் பேனர்களில் திண்டுக்கல் சீனிவாசன் பெயரும் இல்லை. படமும் இல்லை.
ஆனால், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனோ தானளித்த விளம்பரங்களில் நத்தத்தின் பெயரையும் படத்தையும் போட்டிருந்தார்.
விழா மேடையில் தனக்கருகில் அமர்ந்திருந்த அமைச்சர் சீனிவாசன் பேச எழுந்ததும், மூன்றாவது இருக்கையில் இருந்த நத்தத்தை கூப்பிட்டு தனது அருகில் உட்காரச் சொன்ன எடப்பாடி, ""இனியாவது இருவரும் சேர்ந்து இணைந்து மாவட்டத்தில் வேலை செய்யுங்கள். உங்களுக்கு வேண்டிய உதவிகளை நான் செய்கிறேன்'' என்று அரைமணி நேரம் பேசி, அதற்குள் நத்தத்தை தனது ஆதரவாளராக்கிக் கொண்டார்.
விழா முடிந்து முதலமைச்சர் கிளம்பிய மறுநாள், எடப்பாடிக்கு நன்றி தெரிவித்து நத்தம் கொடுத்த தினத்தாள் விளம்பரங்களில் திண்டுக்கல் சீனிவாசன் படத்தை போட்டிருந்தார்.
ஓ.பி.எஸ். அணி முக்கிய தளபதி ஒருவரை இழந்து விட்டிருக்கிறது.
-சக்தி
திருடனை மடக்கிய நக்கீரன் நிருபர்!
எலெக்ட்ரிக் காண்ட்ராக்டர் சுரேஷின் சொந்த ஊர் கேரளம் என்றாலும் பிறந்தது, படித்தது எல்லாம் சென்னை பழைய பல்லாவரத்தில்தான்.
கோடை விடுமுறைக்காக கேரளா சென்றிருக்கும் சுரேஷ், தனது பள்ளித் தோழனும், நக்கீரன் நிருபருமான அரவிந்த்திற்கு போன் செய்தார்.
""அரவிந்த்! என் ஆபீஸ் உட்பட வரிசையா ஆறு கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருக்கிறதா தகவல் வந்திருக்கு. போய்ப் பாரேன்'' என்றார் சுரேஷ்.
தர்கா சாலையில் உள்ள சுரேஷின் அலுவலகத்திற்கு விரைந்தார் நமது நிருபர் அரவிந்த். ஆறு கடைகளிலும் டி.வி., கம்ப்யூட்டர் போன்ற பொருட்கள் திருடப்பட்டிருந்தன. சுரேஷின் அலுவலகத்திலிருந்து எல்.சி.டி.வி., மானிட்டர், ஏழாயிரம் ரொக்கம் என திருடு போயிருந்தது. காவல்துறைக்கு தகவல் கொடுத்தார் அரவிந்த். வந்து பார்த்து விசாரித்த பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தார்கள்.
மறுநாள் செய்தி சேகரிப்பு பணிகளுடன் அங்கே சென்ற நமது நிருபர் அரவிந்த், அதே தெருவில் ஒரு சேட்டு கடை வாசலில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டிருந்ததைக் கவனித்து உள்ளூர் இளைஞர்கள் ஒத்துழைப்புடன் சி.சி.டி.வி.யை ஆராய்ந்தார்.
பதிவாகியிருந்த காட்சியில் எல்.சி.டி.வி.யைத் தூக்கிக் கொண்டு ஒரு வாலிபன் செல்வதைக் கண்டதும், ""அரவிந்த் சார் தூக்கிட்டுப் போறது நம்ம கார்ப்பரேஷன் பணியாளர் கொண்டாரெட்டி மகன் ரோசய்யாதான். இந்த ஏரியாவுல கஞ்சா விக்கிறவன். எங்களுக்கு வீடு தெரியும்'' என்றார்கள் இளைஞர்கள்.
அங்கிருந்து மூன்றாவது தெருவில்தான் ரோசய்யா வீடு.
""என்னையும் நண்பரையும் பார்த்ததும், வீட்டுக்குள்ள இருந்த ரோசய்யா ஒரு அடி நீளக் கத்தியோடு வந்தான். நாங்க ரெண்டுபேரு... பயப்படாம அவனை மடக்கிவிட்டோம். அப்புறம் போலீசுக்கு இன்ஃபார்ம் செய்தேன். வந்து அவனை அரெஸ்ட் பண்ணாங்க. விசாரணைக்குப் பிறகு அவனுடைய கூட்டாளித் திருடர்கள் மோகனையும் சஞ்சயையும் பிடிச்சாங்க'' சொல்லியபடி புன்னகைத்தார் நமது நிருபர் அரவிந்த்.
தகவல் தென்சென்னை காவல் இணை ஆணையர் மகேஸ்வரிக்குச் சென்றது. நக்கீரன் நிருபர் அரவிந்த்தை போனில் அழைத்துப் பாராட்டினார் இணை ஆணையர். நாமும் பாராட்டினோம்.
-கீரன்
கொடி ரெடி செய்யும் திவாகரன்!
சசிகலா குடும்பத்தில் மோதல்கள் உச்சம் பெற்ற நிலையில், "அம்மா அணி' என தனி அமைப்பொன்றை உருவாக்கினார் மன்னார்குடி திவாகரன். இப்போது மாவட்டம்தோறும் நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் திவாகரனும் மகன் ஜெய்ஆனந்த்தும்.
""அமைப்பைக் கட்சியாக்கி, கட்சிக்கு ஒரு கொடியை உருவாக்கி, ஊர்தோறும் வீதிதோறும் கம்பங்களில் ஏற்ற வேண்டாமா?'' ஆதரவாளர்கள் திவாகரனிடம் கேட்டார்கள்.
ஆதரவாளர்களின் கோரிக்கையைச் சுமந்தபடி சுந்தரக்கோட்டையில் உள்ள தனது கல்லூரி அலுவலகத்துக்குச் சென்றார். கல்லூரிப் பேராசிரியர்களை அழைத்தார். ""எனது கட்சிக்கு கொடியை வடிவமையுங்கள்'' என்றார். இறுதியில்... நடுவில் ஜெ. எம்.ஜி.ஆர். படம் கொண்ட சிவப்பு- கருப்பு- வெள்ளை நிறக் கொடியை செலக்ட் செய்தாராம்.
அடுத்து ""திராவிடத்தை விட்டு விடாமல் கட்சிக்குப் பெயர் செலக்ட் செய்யுங்கள்!'' என்றார். யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வைகாசி 30-ஆம் நாள் (13.06.2018) கட்சியின் பெயரையும் கொடியையும் அறிவிக்கப் போகிறாராம் திவாகரன்.
-இரா.பகத்சிங்