தில்லாலங்கடி ஒ.செ.வால் திணறும் நிர்வாகிகள்!
வெயில் இப்போதே வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. குடிநீர்ப் பிரச்சனையும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை எதிர்கொள்ள திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 25 கிராமங்களில் நீர் ஆதாரங்களைப் பராமரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஊராட்சி நிதியில் இருந்து ஒருகோடி ரூபாயை ஒதுக்கி, டெண்டரும் கோரப்பட்டது.
அ.தி.மு.க.-தி.மு.க. இடையே இருக்கும் மறைமுக ஒப்பந்தப்படி டெண்டரில் அ.தி.மு.க. தரப்புக்கு 60 லட்சத்துக்கும், தி.மு.க. தரப்புக்கு 40 லட்சத்துக்குமான பணிகளை ஒதுக்குவது என இறுதியானது.
போளூர் அ.தி.மு.க. ஒ.செ.வாக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசுதா, தனக்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டரைத் தரச்சொல்லி கைகாட்டினார். இதில் அதிருப்தி அடைந்த அ.தி.மு.க.வினர் தெற்கு மா.செ.வான அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் முறையிட்டனர். அவரோ "என்னால் இதில் தலையிடமுடியாது. வடக்கு மா.செ. எம்.எல்.ஏ. தூசி.மோகனிடம் பேசிக்கொள்ளுங்கள்' என அனுப்பிவைத்தார்.
அவர்கள் பேசியதையடுத்து தூசி.மோகனும், ""கட்சிக்காரங்க எல்லோருக்கும் வேலை கிடைக்கணும். வேலை எடுக்கிறவங்ககிட்ட 10 பர்செண்ட் கமிஷன் வாங்கி எனக்கு 5, உங்களுக்கு 2, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகிகளுக்கு 3-ன்னு பிரிச்சுக் கொடுத்திடுங்க''’என ஜெயசுதாவிடம் அறிவுறுத்தி இருக்கிறார். ஆனால், 15 பர்சண்டை கட்டாயப்படுத்தி வாங்கிய ஜெயசுதா, மா.செ.வுக்கு 5, தனக்கு 7, ஊராட்சி செயலாளருக்கு 3 என பிரித்துள்ளார்.
ஜெயசுதாவின் தில்லாலங்கடி வேலையால் கடுப்பான கட்சி நிர்வாகிகள், ""யாருக்கும் கமிஷன் கிடையாது, முடிஞ்சதைப் பாத்துக்கோங்க''’எனக் கூறிவிட்டு, குறைவான தொகையைக் குறிப்பிட்டு டெண்டரில் புதிய பிரச்சனையைக் கிளப்பிவிட்டனர். தேர்தல் நெருங்கிவிட்டதால், பிரச்சனையைத் தீர்த்துவைக்க பஞ்சாயத்து கூட்டியுள்ளனர் மாவட்ட நிர்வாகிகள்.
-து.ராஜா
வீண் வம்பில் மாட்டிக்கொண்ட எடப்பாடி!
ஆஸ்திரேலியாவில் பிறந்து இங்கிலாந்து அரசால் ஈரோட்டை நிர்வகிக்கும் பணிக்கு 1897-ல் வந்தவர் அந்தோனி வாட்சன் பிரப். இவர் காலத்தில்தான் குடிநீர், மருத்துவம், கல்வி, சாலைகள் என அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பெற்றது ஈரோடு. அப்போதே ஈரோட்டில் 96 கல்வி நிறுவனங்களை நிறுவியவர் பிரப். இவருக்குப் பின்னர் ஈரோடு நகர்மன்றத் தலைவராக வந்த பெரியாரே இவரது அர்ப்பணிப்புப் பணிகளைப் பாராட்டிப் பேசியிருக்கிறார்.
இவரது நினைவைப் போற்றும் விதமாக ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா முதல் அரசு மருத்துவமனை வரையுள்ள ஒன்றரை கி.மீ. நீளமுள்ள சாலைக்கு ‘"பிரப்’ சாலை' என்று நூறாண்டுக்கு முன்பே பெயர் சூட்டப்பட்டது. ஈரோடு மாநகராட்சி கட்டடம், எஸ்.பி., கோட்டாட்சியர் அலுவலகங்கள், பெரிய மாரியம்மன் கோவில் என முக்கியமான இடங்களைக் கொண்டது இந்த பிரப் சாலை.
கடந்த பிப்.28-ந்தேதி மேம்பால திறப்புவிழாவுக்காக ஈரோடு வந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தச் சாலையில் பிரப் பெயரை நீக்கிவிட்டு, "மீனாட்சி சுந்தரனார் சாலை' என்று அறிவித்துச் சென்றார். மீனாட்சி சுந்தரனார் மிகச்சிறந்த மனிதர் என்றாலும் பெரியார், பென்னி குயிக் வழியில் வந்தவரான பிரப்பின் பெயரை வரலாற்றுப் புரிதலின்றி நீக்கிவிட்டதாக கிறித்தவ அமைப்புகள் எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனை மிகப்பெரிய போராட்டமாக எடுத்துச் செல்லவும் முடிவு செய்துள்ளன.
"ஓரிரு மாதங்களுக்கு முன்பு ஈரோடு வந்திருந்த பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, பிரப் சாலையின் பெயரை மாற்றவேண்டும் எனக் கூறிவிட்டுச் சென்றார். அதன்பிறகே இப்படியொரு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார் முதல்வர். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. என்ன சொன்னாலும் செய்வதன் மூலம், சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டுவிட்டார்'’’ என தி.க. மண்டல செயலாளர் த.சண்முகம் தெரிவித்திருக்கிறார்.
-ஜீவாதங்கவேல்
சுயேட்சையாக தி.மு.க. ந.செ.!
கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் எம்.பி. தேர்தலும், ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலும் நடக்கவிருக்கின்றன. அ.தி.மு.க., தி.மு.க. நேரடியாக மோத இருப்பதால் வெற்றி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள இரு கட்சிகளும் கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் ஓசூர் நகர தி.மு.க.விற்குள் கோஷ்டிப் பூசல் வெடித்திருக்கிறது.
ஓசூர் தி.மு.க. நகரச் செயலாளராக இருந்தவர் மாதேஸ்வரன். இவர் புதிய உறுப்பினர் அட்டைக்காக நகரத்தில் உள்ள 45 வார்டுகளிலும் தலா 25 பேர் என 550 விண்ணப்பங்களை தலைமைக்கு அனுப்பியிருந்தார். அப்போது நிலத்தகராறு விவகாரத்தில் வழக்கை எதிர்கொண்ட மாதேஸ்வரன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து, மாதேஸ்வரன் பரிந்துரைத்த 550 விண்ணப்பங்களில் இடம்பெற்றிருந்த 15 ஆயிரம் பேருக்கு மா.செ.வும், எம்.எல்.ஏ.வுமான பிரகாஷ் உறுப்பினர் அட்டை வழங்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கட்சி நிர்வாகிகள், ""மாதேஸ்வரன் பரிந்துரைத்ததால் மா.செ. பிரகாஷ் எங்களுக்கு உறுப்பினர் அட்டை தர மறுக்கிறார். ந.செ. சத்யாவும் தனது ஆதரவாளர்களுக்கே உறுப்பினர் அட்டைகளை வழங்குகிறார். அதனால், எங்களை பொறுப்புகளில் இருந்து நீக்கிவிடுங்கள்''’என தலைமைக்குக் கடிதம் எழுதினர்.
அதேபோல், ஓசூரில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்ட பூத் கமிட்டி கூட்டத்தையும் புறக்கணித்தனர். அவர்களுக்கு பதிலாக கட்சித் தொண்டர்களைக் கூட்டத்தில் உட்கார வைத்து சமாளித்திருக்கிறது மா.செ.+ந.செ. தரப்பு.
நடக்கவிக்கும் ஓசூர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மாதேஸ்வரன்.
-மதி