விற்பனைக்கு நோட்டரி பப்ளிக்!
தமிழக அரசு சட்டத்துறை அமைச்சர், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அமைச்சரின் பரிந்துரையின் பேரில், அந்தந்த மாவட்டத்தில் உள்ள வழக்கறிஞர்களை தகுதியின் அடிப்படையில் நோட்டரி பப்ளிக் ஆக நியமிப்பதுதான் நடைமுறையாக இருந்தது.
காலப்போக்கில் ஆட்சியைப் பிடிப்பவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களை மட்டுமே நோட்டரி பப்ளிக்காக ஆக்கத் தொடங்கினார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆளும் கட்சியினருக்கு குளிர்விட்டுப் போனது. தி.மு.க. வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவர்களும் விருதுநகர் மாவட்டத்தில் நோட்டரி பப்ளிக்காக இப்போது ஆகமுடிகிறது. இந்த நியமனத்திற்காக தலைக்கு ரூ.2 லட்சத்திலிருந்து, ரூ.3 லட்சம் வீதம் 25 பேரிடம் வசூல் வேட்டை நடந்திருக்கிறதாம். அந்த வகையில்தான், தி.மு.க. வழக்கறிஞர்களும் இங்கு நோட்டரி பப்ளிக் ஆகியிருக்கின்றனர். "ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி ஒரு காரியம் நடந்திருக்காது' என்று அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவர்களே இன்று புலம்புகின்றனர்.
இதுபற்றி, குற்றவியல் அரசு வழக்கறிஞர் முத்துப்பாண்டியிடம் கேட்டபோது, “""எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. கமிட்டி போட்டு வெரிஃபிகேஷன் வந்திருக்கு. அந்தமாதிரி பணமெல்லாம் யாரும் தரமாட்டாங்க. நோட்டரி பப்ளிக்கெல்லாம் இண்டர்வியூ பண்ணி மெரிட் மூலமாதான் ஆகமுடியும்''’என்றார்.
முடிந்தமட்டிலும் சட்டத்தை வளைக்கும் சர்வ வல்லமை பெற்றவர்களாக இருக்கிறார்கள் நம் அரசியல்வாதிகள்.
-சி.என்.இராமகிருஷ்ணன்
இஸ்லாமியர் ஓட்டு! பதறும் அ.தி.மு.க.!
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜல்தி பகுதியில் ஜெ.வின் 71-வது பிறந்தநாள் விழா நடந்தது.
இதில் கலந்துகொண்ட தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில், "கட்சி நிர்வாகிகள், மக்களைச் சந்தித்து அரசின் திட்டங்களைக் கூறி தைரியமாக வாக்குச் சேகரிக்க வேண்டும்'’என்று வலியுறுத்திவிட்டு, ""கூட்டத்திற்கு வருகிற வழியில் வாட்ஸ்அப்பில் வைரலாகிக் கொண்டிருந்த வீடியோ ஒன்றைப் பார்த்தேன். பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா வாணியம்பாடியில் இருக்கும் இஸ்லாமிய இளைஞர்களைத் தீவிரவாதிகள் எனப் பேசியிருக்கிறார். என்ன நடந்தது என்றே தெரியாமல், யோசிக்காமல் அவர் பேசியதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. வாணியம்பாடியில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த இந்து சகோதரர் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு ஆதரவாக, காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய இஸ்லாமிய இளைஞர்களைத் தீவிரவாதிகள் என்று கூறிய எச்.ராஜாவிற்கு கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்''’எனப் பேசிவிட்டுச் சென்றார்.
அ.தி.மு.க.வை கஸ்டடியில் வைத்திருக்கும் பா.ஜ.க.வின் தேசிய செயலாளருக்கே கண்டனம் தெரிவிக்கிறாரே என்று, அமைச்சருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம்.…""பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததை அ.தி.மு.க.வில் இருக்கும் இஸ்லாமியர்கள் விரும்பவில்லை. இந்தக் கூட்டணி அமைந்தவுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த இஸ்லாமியர்கள் நிகழ்ச்சியைப் புறக்கணித்தார் அமைச்சர் வீரமணி. "கட்சிக்காரர்களைவிட பா.ஜ.க. முக்கியமாகிவிட்டதா?' என கொந்தளித்துப் போனவர்கள், மாரப்பட்டு பகுதியில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர் வீரமணி கலந்துகொண்ட ஜெ. பிறந்தநாள் விழா நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர்.
இதனை உளவுத்துறை மூலம் அறிந்துகொண்ட எடப்பாடி, "இஸ்லாமியர்கள் ஓட்டு சிதறாமல் பார்த்துக்கொள்வது உங்க பொறுப்பு. கட்சி நிர்வாகிகளை சமாதானம் செய்யுங்க' என நிலோபர்கபிலை அழைத்துப் பேசியிருக்கிறார். இதன் பிறகுதான் வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு பகுதிகளின் ஜமாத் நிர்வாகிகள், கட்சியின் இஸ்லாமிய நிர்வாகிகளிடம் சமாதானம் பேசுகிறார் அமைச்சர். எச்.ராஜா மீதான கண்டனமும் அந்த ரகம்தான். தேர்தல் நேரமாக இல்லையென்றால் இதைக்கூட பேசியிருக்கமாட்டார்''’என்கின்றனர்.
-து.ராஜா
முத்தரையர் சமூகத்தின் தேர்தல் மூவ்!
திருச்சி மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஐந்து மாவட்டங்களில் பெரும்பான்மை வகிக்கிறது முத்தரையர் சமுதாயம். இதனாலேயே அரசியல் கட்சிகள் இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் தந்து, எம்.எல்.ஏ., எம்.பி.க்களாகவும் ஆக்கியிருக்கின்றன. தற்போது தேர்தல் நேரம் என்பதால், திருச்சி தென்னூர் உழவர் சந்தைத் திடலில் அரசியல் உரிமை மீட்பு மாநாட்டை நடத்தியது வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம்.
மாநாட்டில் பேசிய இந்தச் சங்கத்தின் தலைவர் கே.கே.செல்வகுமார், ""ஆயிரமாண்டு காலம் செரிந்த இந்த சமுதாயம், ஓட்டு மட்டுமே போடவேண்டும்; எதுவுமே பேசக்கூடாது என்று ஆக்கிவிட்டார்கள். தேர்தல் வருகிறது… ஒரு சமுதாயம் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு, அந்தச் சமுதாயத்திற்கு வேண்டியதைச் செய்வதாக மேடையிலேயே உறுதி அளிக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். திராவிடக் கட்சிகள் அரசியலிலும், ஆட்சியிலும் இருப்பதற்குக் காரணமே முத்தரையர் சமுதாயம்தான்.
72 ஆண்டுகால அரசியலில் நம்மால் ஒரு கவுன்சிலராகக் கூட ஆக முடியவில்லை. இனி, நாம் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் எம்.பி., எல்.எல்.ஏ. பதவிகளுக்கு நமக்கே முன்னுரிமை தரவேண்டும். அதன்படி சிவகங்கை உள்ளிட்ட 2 எம்.பி. தொகுதிகளில் வாய்ப்பு தந்தால் தமிழகம் முழுவதும் ஆதரவு தருவோம். அதை மறுக்கும் திராவிடக் கட்சிகளுக்கு இனி ஆதரவு இல்லை''’என பரபரப்பு கிளப்பும்படியாக பேசியிருக்கிறார்.
-ஜெ.டி.ஆர்.