நெடுவாசலில் தொடங்கிய தி.மு.க. பிரச்சாரம்!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதுக்கோட்டை மாவட்டம் முக்கியமானது. இங்குள்ள நெடுவாசல் கிழக்கு, மேற்கு, புள்ளாண்விடுதி உள்ளிட்ட கிராமங்களில் மரங்களைப் பறிகொடுத்து தவிக்கும் விவசாயிகளுக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்ததினத்தை முன்னிட்டு ரூ.20 லட்சம் செலவில் 10 ஆயிரம் தென்னங்கன்றுகள், இரண்டாயிரத்து ஐந்நூறு உயர்ரக ஒட்டு மாங்கன்றுகள் வழங்கும் விழா நெடுவாசலில் நடைபெற்றது.
புதுக்கோட்டை தெற்கு மா.செ.வும், திருமயம் எம்.எல்.ஏ.வுமான ரகுபதி தலைமையில் நடைபெற்ற விழாவில், பசுமை சைதை இயக்கத்தின் தலைவர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஆலங்குடி மெய்யநாதன், புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு முன்னிலை வகித்த இந்த விழாவிற்கு பொதுக்கூட்டத்திற்கு இணையான கூட்டம் கூடியிருந்தது.
கூட்டத்தில் பேசிய மெய்யநாதன், ""புதுக்கோட்டையில் புயல் பாதித்த எந்தப் பகுதிக்கும் செல்லாமல், நெடுவாசலுக்கு பெட்ரோலியத்துறை அதிகாரிகளோடு வந்திருந்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் வந்ததற்கான பலன் என்று இதுவரையில் ஒன்றும் கிடைக்கவில்லை. ஹைட்ரோகார்பன் திட்டத்தை முற்றாக எதிர்த்ததால் இம்மக்களை வஞ்சிக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் இதுபோன்ற திட்டங்களைத் திணிக்கும் மத்திய, மாநில அரசுகளை நாம் ஓடச்செய்ய வேண்டும்''’என வலியுறுத்தினார்.
அவரைத் தொடர்ந்து பேசவந்த மா.சுப்பிரமணியன், ""நெடுவாசல் மக்கள் ஓய்வில்லாத போராட்டத்தால் ஜெம் நிறுவனத்தை ஓடவிட்டவர்கள். அதனால், இந்த மண்ணை வணங்கி மரக்கன்றுகள் வழங்குவதில் பெருமை கொள்கிறோம். மறைந்த தோழர் முத்துக்குமரன் அறக்கட்டளை இளைஞர்களின் வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் ஒத்துக்கொண்டோம். கலைஞரின் பிறந்தநாளையொட்டி 20 ஆயிரம் மாங்கன்றுகளை இந்தப் பகுதிக்கு வழங்க இருக்கிறோம். மத்தியில் தி.மு.க. கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் போன்ற மண்ணை மலடாக்கும் திட்டங்களை ரத்து செய்வோம். காவிரியில் அணை கட்டுவதைத் தடுத்து கடைமடையைப் பாதுகாப் போம்''’என உறுதியளித்ததோடு தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்தார்.
ஏற்கனவே ஊராட்சிசபைக் கூட்டங்கள் மூலம் மக்களைச் சந்தித்திருக்கும் தி.மு.க., நெடுவாசலில் இருந்தே நாடாளுமன்றத் தேர்த லுக்கான பிரச்சார வேலைகளில் இறங்கிவிட்டது.
-இரா.பகத்சிங்
இந்திராணி ராஜ்ஜியம்!
சென்னை மாநகராட்சியில் விஜிலென்ஸ் பிரிவில் இருக்கும் இன்ஸ்பெக்டர் இந்திராணி உள்ளிட்ட அனைவரையும் டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே உயர்நீதி மன்றம் உத்தர விட்டிருந்தது. இதைச் செய் யாத அப்போதைய மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனை நீதி மன்றம் கண்டித்து, தண்டிக்கவும் செய்தது. இன்ஸ்பெக்டர் இந்தி ராணியும் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். இது குறித்து ஏற்கனவே நக்கீரன் எழுதி யிருந்தது. இதற்கிடையே சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த கார்த்திகேயன் மாற்றப் பட்டு அவருக்கு பதில் புதிய ஆணையராக பிரகாஷ் வந்திருக் கிறார்.
இந்த நிலையில் காத் திருப்புப் பட்டியலில் வைக் கப்பட்டிருக்கும் இந்திராணி, எந்த ஆர்டரும் இல்லாமல் மீண்டும் சென்னை மாநக ராட்சி விஜிலென்ஸ் அலுவல கத்திற்கு வந்து போய்க் கொண்டிருக்கிறார்.
இது குறித்துக் கேட்பவர் களிடம், ""அமைச்சர்களான சி.வி.சண்முகம், வேலுமணி ஆகியோரை சந்தித்துப் பேசிவிட்டேன். எனக்கு விரைவில் ஆர்டர் வந்து விடும். அதனால் நீங்கள் போய் உங்கள் வேலையை ஒழுங்காகப் பாருங்கள்''’என்று அதட்டலாகவே சொல்லிக் கொண்டிருக்கிறாராம் இந்திராணி. மிரண்டு போயிருக் கிறார்கள் அதிகாரிகள்.
-இளையர்
தட்டிக் கேட்டால் கொலை செய்வோம்!
சென்னை அருகேயுள்ள குமணன்சாவடியில் உள்ளது இந்திராணி நகர். இந்தப் பகுதியின் மெயின் ரோட்டிற்கும், குயின் விக்டோரியா சாலைக்கும் மத்தியில் உள்ள தெருவை ஆக்கிரமித்து, அ.தி.மு.க. முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் பூவை ஞானம் தன் மகன் பெயரில் திருமண மண்டபம் கட்டிவருகிறார்.
இந்திராணியம்மாள் என்பவர் தனது மருமகள் ராஜேஸ்வரியின் கட்டுப்பாட்டில் 1961-ல் கொடுத்திருந்த நிலம்தான் இது. இதனை 1985-ல் மனைகளாக விற்பனை செய்ய, தனக்கான இடத்தை ஞானத்தின் மகன் முரளிக்கு பட்டா எண் 2532 சர்வே எண் 1 உட்பிரிவு 1ஹ/1க்ஷ தானமாகக் கொடுத்துள்ளார் ராஜேஸ்வரி. அந்த இடத்தில்தான் தற்போது திருமண மண்டப கட்டுமான வேலைகள் நடக்கின்றன.
ஆனால், தனது இடத்தில் மட்டும் கட்டடம் எழுப்பாமல், பாட்டை (எ) தெருவுக் காக ஒதுக்கப்பட்ட 1.47 அடி 20 அங்குலம் உள்ள இடத்தையும் ஆக்கிரமித்துவிட்டார் ஞானம். தங்களது வீடுகளுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் பொதுமக்கள் இது பற்றி முறையிட்ட தற்கு, கொலை மிரட் டல் விடுக்கப்படுகிறதாம்.
அந்தப் பகுதியில் அனுமதிக்கப்பட்ட வரைபடத்தைப் பொருட்படுத்தாமல், பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் எழுப்பியிருப் பது சட்டமீறலாகும். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கைக்குள் வைத்துக்கொண்டு பாதுகாப்பாக இருக்கிறார் ஞானம். இதுபற்றி முனிசிபாலிட்டி டிட்டோவிடம் கேட்டதற்கு, "நாங்கள் சொல்லியும் மீறி கட்டிவருகிறார்' என நிதானமாக பதிலளிக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆதரவும், அதிகார பலமும் வைத் திருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலையை என்ன செய்வது?
-அ.அருண்பாண்டியன்