தி.மு.க. நிர்வாகிகளுக்கு 100 பவுன் தங்கம்!

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அதிதீவிரமாக வேலைபார்த்துக் கொண்டிருக்கின்றன. தொகுதிப்பங்கீடு அறிவிப்புகளும் அனல் பறக்கின்றன.

anithradhakrishnan

தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினரும், மகளிரணிச் செயலாளருமான கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், அந்தத் தொகுதிக்கு உட்பட்ட திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம் பகுதிகளைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் தூத்துக்குடி தி.மு.க. தெற்கு மா.செ. அனிதா ராதாகிருஷ்ணன். கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகளுக்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் பறிமாறப்பட்டன. இதற்காக 2,000 கிலோ மட்டன், 2,000 கிலோ சிக்கன் பிரியாணி என விருந்து களைகட்டியது.

Advertisment

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், ""ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி இந்தமுறை ஜெயிக்க வேண்டும். அதற்காக சிறப்பாக தேர்தல் வேலை பாருங்கள். அதிக வாக்குகளை பெற்றுத்தந்து கனிமொழியை அமோகமாக வெற்றிபெற வைக்கும் நிர்வாகிகளுக்கு, 100 பவுன் தங்கக்காசு பரிசாக வழங்குவேன்'' என அதிரடியாக அறிவித்தார்.

இதனைக்கேட்டு உற்சாகமடைந்த நிர்வாகிகள், தங்கப்பரிசினை தட்டிச்செல்லும் பொருட்டு, கனிமொழியை 5 லட்சம் வாக்குகளுக்கு அதிகமான வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம் என உடனே களத்தில் குதித்து வேலைகளையும் தொடங்கிவிட்டனர். அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த அதிரடி அறிவிப்பை தி.மு.க. வட்டாரமே பரபரப்பாக பார்க்கிறது.

-இளையசெல்வன்

Advertisment

இது தனியார் கவர்ன்மெண்ட்!

temparoary-employees

தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை என அரசு அலுவலகங்களில் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றில் நேரடி பணிநியமனம் செய்யாமல், வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தற்காலிகமாக ஆட்களை எடுத்து தினக்கூலிகளாக நியமித்து வருகின்றனர். இதற்கு பின்னணியில் ஒரு தனியார் கவர்ன்மெண்டையே நடத்தி வருகிறார்கள் அரசியல்வாதிகள்.

உதாரணமாக, கடலூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் கணினி இயக்குபவர்கள் உட்பட பலர் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிகின்றனர். இதில் மாற்றுத்திறனாளிகளும் அடக்கம். இவர்களுக்கு ஒருநாள் கூலியாக ரூ.475 வீதம் மாதாமாதம் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களே வழங்கிவந்தன.

இப்போதோ, ‘ஜீவன் மேன்பவர் ரூரல் பவுண்டேஷன்’ என்ற தனியார் கம்பெனிக்கு செக்காக, இந்த ஊழியர்களின் மொத்த சம்பளமும் அனுப்பப்படுகிறது. அங்கு சேவைக்கட்டணமாக 5 ரூபாயை எடுத்துக்கொண்டு, மீதித்தொகையை ஊழியர்களுக்கு வழங்குகின்றனர். இதுவே அரசின் உத்தரவுதானாம். தற்காலிக ஊழியர்கள் காலப்போக்கில் பணிநிரந்தரம் கேட்டு போராடுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கையாம்.

அரசு அலுவலகங்கள் மாதத்தின் முதல் வாரத்தில் சம்பளம் வழங்கிய நிலையில், இந்தத் தனியார் நிறுவனங்கள் பதினைந்து நாட்கள் ஆனாலும் சம்பளம் போடுவதில்லை. தனியார் மேன்பவர் நிறுவனங்களை நடத்துவதே துறை அதிகாரிகளும், அரசியல்வாதிகளின் பினாமிகளும்தான். இதையெல்லாம் வெளியில் சொன்னால் வேலை போய்விடுமே என்று பதறுகின்றனர் தற்காலிக பணியாளர்கள். அரசாங்கத்தை தனியாரிடம் தாரைவார்த்த காலம்போய், அரசாங்கமே தனியாராக மாறியிருப்பதெல்லாம் வேற லெவல்!

-எஸ்.பி.சேகர்

ஊழலுக்கு தடைபோட்டதால் குடைச்சல்!

tirpathi

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் குழுமம், கைரேகை பதிவு எஸ்.ஐ. பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதாக கடந்த ஆக.29-ல் அறிவித்தது. 202 பேருக்கான இந்தத் தேர்வுக்காக கடைசிநாளான செப். 28-வரை 39,200 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் பொதுப்பிரிவில் 36,500 பேரும், காவல்துறையில் பணிபுரிவோர் 2,700 பேரும் அடக்கம்.

இவர்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த டிச.22, 23 என இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில், 2,900 பேர் தேர்ச்சி பெற்றதாக ஜன.05ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இவர்களில் 500 பேர் பொதுப்பிரிவில் உடல்தகுதி தேர்வுக்கு தேர்ச்சிபெற, அவர்களோடு சேர்த்து துறைரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2,400 பேரும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். மேலும், எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓட்டம், கயிறு ஏறுதல் போன்றவை இல்லாமல் மார்பளவு, உயரம் அளத்தல் போன்றவை மட்டுமே நடத்தப்பட்டன.

இறுதிகட்டமாக, நடைபெற்ற நேர்முகத்தேர்வு ஜன.21ஆம் தேதி தொடங்கி பிப்.14ஆம் தேதி மாலையில் முடிவடைந்தது. இதில் 40 பேர் துறைரீதியிலும், 162 பேர் பொதுப்பிரிவிலும் என ஆகமொத்தம் 202 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதோடு நிறுத்தாமல், அன்று இரவே அவசர அவசரமாக தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கான இறுதிப்பட்டியலும் வெளியிடப்பட்டது.

காவல்துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்புவதில் இவ்வளவு வேகம் காட்டுவது இதுவே முதல்முறையாகும். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் கமிஷன் பணத்திற்காக கொடுக்கும் குடைச்சலுக்கு மத்தியில், இதை முறையாக சாத்தியப்படுத்தியது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ஏ.டி.ஜி.பி. திரிபாதிதான்.

2015-ல் நடைபெற்ற லோக்கல் எஸ்.ஐ.க்கான தேர்வின்போது நடந்த ஊழலை ஆதாரத்துடன் 2018-ல் வெளியிட்டது நக்கீரன். மீண்டும் அதுபோன்ற தவறு நடக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் சிறப்பாக செயல்பட்ட திரிபாதிக்கு, இப்போது அரசியல்வாதிகள் மூலமாக பதவிரீதியில் தொல்லை கொடுக்கப்படுகிறதாம்!

-அ.அருண்பாண்டியன்