விழாவை புறக்கணித்த அமைச்சர்!

minister-veramaniவேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரத்தில் உள்ள அ.தி.மு.க.வைச் சேர்ந்த 18 கிளை இஸ்லாமிய பிரமுகர்கள் சேர்ந்து, நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மிலாதுநபி விழாவை, பிப்ரவரி 9-ந் தேதி இரவு 9 மணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.சி.வீரமணியையும் அ.தி.மு.க. ந.செ. மதியழகனையும் அழைத்திருந்தனர்.

Advertisment

விழாவிற்கு வருவதாக ஒப்புக்கொண்ட வீரமணி, விழா நாளன்று ஜோலார்பேட்டையில்தான் இருந்தார். இரவு 9 மணி முதல் விடியற்காலை 3 மணி வரை நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே, அமைச்சரை தொடர்பு கொண்டபோது, "இதோ வருகிறேன், அரைமணி நேரத்தில் வந்துவிடுவேன்' என்றவர், பின்னர் "விழாவை தொடங்கிடுங்க, இடையில் வந்து கலந்துக்கிறேன்' என்றுள்ளார். பின்பும் இதோ, அதோ என சொன்னாரே தவிர... கடைசி வரை விழாவுக்கு வரவில்லை. இதனால் அதிருப்தியாகிவிட்டனர் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த அ.தி.மு.க. இஸ்லாமியர்கள்.

"அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது, நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்க டீலிங் பேசுவது அமைச்சர் எங்கள் விழாவில் கலந்து கொள்ளாதது மூலம் நிரூபணமாகியுள்ளது. இஸ்லாமிய விழாவில் கலந்துகொண்டால், மோடி அரசை எதிர்த்து ஏதாவது பேசவேண்டி வரும், இதனால் தனக்கு பின்னால் சிக்கல் வரும் என்பதால் விழாவில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிட்டார்' என இஸ்லாமியர்கள் மத்தியில் தகவல் பரவியது.

இதனைக்கேட்ட அமைச்சரின் ஆதரவாளர்கள், "அப்படியெல்லாம் இல்லை, அவர் மத நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவர். நிறைய திருமண விழாக்கள் இருந்ததால்தான் அவர் கலந்துகொள்ளவில்லை' என்கிறார்கள்.

-து. ராஜா

அமைச்சருக்காக நடந்த யாகம்!

Advertisment

srinivasanயாகம் வளர்ப்பதில் தற்பொழுது இணைந்திருப்பவர் வனத்துறை அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன்.

நெல்லை மாவட்டம் பணகுடி மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ளது மகேந்திரகிரி மலை. மேற்குத்தொடர்ச்சி மலையில் மிக முக்கியமானது இம்மலைப் பகுதி. இங்கு ஆரம்பமாகும் ஆறு "அனுமன் நதி' எனவும் மலையில் பல ரகசியங்களும், பொக்கிஷங்களும் உள்ளன என கூறப்படுவதும் உண்டு. இதே மகேந்திரகிரி மலையினை உள்ளடக்கி மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட திரவ உந்து நிலையமும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கே களக்காடு -முண்டன்துறை புலிகள் காப்பக முன்னாள் துணைஇயக்குநர் முருகானந்தம் தலைமையிலான 13 நபர்கள் கொண்ட குழு 07-02-19 நள்ளிரவு முதல் 08-02-19 அதிகாலை வரை யாகத்தினை நடத்தியுள்ளது தான் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

""முதல்நாள் காலையில் எங்க ஊரு வழியாகத்தான் இரண்டு ஜீப்பில் ஆட்களை கூட்டிட்டுப் போனார் முன்னாள் இயக்குநர். அந்த வண்டியில் இரண்டு சாமியாரும் இருந்தாங்க. மறுநாள் கீழே வரும்பொழுது மறிச்சுக் கேட்டபொழுது "உங்களுக்குச் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது' என மிரட்டிட்டுப் பறந்து போயிட்டாங்க'' என பணகுடி அருகே ரோஸ்மியாபுரம் மக்கள் கூறியதை குறிப்பு எழுதிய மத்திய உளவுத்துறை, ""இதே மலைப்பகுதியில் தமிழக வனத்துறை அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசனுக்காக யாகம் நடத்தப்பட்டது. அதற்காக அவரது மகன் இங்குதான் இருந்துள்ளார். அனுமதியில்லாமல் இது நடந்துள்ளது'' என கூடுதலாக குறிப்பு எழுதியதோடு மட்டுமில்லாமல், நடவடிக்கை எடுக்கக் கோரி அதனை நெல்லை புறநகர் மாவட்ட எஸ்.பி.க்கும் அனுப்ப... தற்பொழுது அமைச்சருக்கும், களக்காடு -முண்டன்துறை புலிகள் காப்பக முன்னாள் துணை இயக்குநர் முருகானந்தத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

-நாகேந்திரன்

தயாராகிறது இன்னுமொரு சிலை!

Advertisment

nagarasan

கலைஞர் திருவுருவச் சிலையை அமைப்பதற்கு, தனது சொந்த நிலத்தை அளிப்பதாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

அதன்படி, பொங்கலூர் பழனிச்சாமிக்குச் சொந்தமான நிலமுள்ள, சிங்காநல்லூர் உழவர் சந்தைக்கு அருகில் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் நடந்தது. கலைஞரின் சிலையை அமைப்பதற்கான திட்டமிடல் கூட்டமாக அது அமைந்தது.

அப்போது அந்த நிகழ்வில் கலந்துகொண்ட கட்சியினர்... "வெண்கலத்தால் கலைஞரின் சிலை அமையவிருக்கிறது... அதற்கு நிதி திரட்டவேண்டும்' என்று மைக்கில் அறிவிக்கப்பட்டதும் 5,000, 10,000 என பலர் சொல்லிக்கொண்டிருந்த நிலையில்... கோவை புறநகர் தெற்கு மாவட்ட அவைத் தலைவராய் இருக்கும் அக்சயா நாகராசன் திடீரென கூட்டத்திலிருந்து வெளியேறினார் .

"என்ன... பணம் கொடுக்கற நேரத்துல திடீர்னு அவரு கிளம்பி போயிட்டு இருக்காரே'னு சிலர் பேச ஆரம்பிக்க... அக்சயா நாகராசன் கூட இருக்கும் ராஜேந்திரன் மைக் பிடித்து ""கலைஞருக்கு சிலை அமைக்க 5 லட்ச ரூபாயை, தான் கொடுத்துவிடுவதாகச் சொல்லிவிடுங்கள்' என அக்சயா நாகராசன் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் கிளம்பிப்போனார். அவருடைய அம்மாவுக்கு உடல்நலம் குன்றியுள்ளதால் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துள்ளதாக போன் வந்ததையடுத்தே அவர் கிளம்பினார்'' என்றார்.

-அருள்குமார்