அருவிகளின் நகரமான குற்றாலத்தில், குற்றாலநாதர் கோயிலில், பௌர்ணமி நள்ளிரவில், கோயில் கதவுகளை உள்புறம் தாழிட்டுக்கொண்டு ரகசிய யாகம் நடத்தியிருக்கிறார் கோயிலின் உதவி ஆணையர் செல்வகுமாரி.
குற்றாலநாதர் கோயிலுக்கு இரண்டாண்டுக்கு முன்பு உதவி ஆணையராக வந்தார் செல்வகுமாரி. இவர் வந்த பிறகு, கால பூஜைகள் சரியாக நடக்கவில்லை. நைவேத்தியங்கள் முறையாகப் படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கேரளாவில் இருந்து தந்திரி ஒருவரை அழைத்து பிரசன்னம் பார்த்தார் உதவி ஆணையர். அவர் சில பரிகாரங்களைச் சொல்லிவிட்டுப் போனார். அடுத்த சில நாட்களில், கோயில் வடக்கு வாசல் அருகே ஒரு பிணம் கிடந்தது. அது தற்கொலை என்றார்கள். இரண்டு மாதத்திற்குப் பிறகு, கோயில் குப்பைத் தொட்டி அருகே, தென்காசியைச் சேர்ந்த ஒருவருடைய சடலம் கிடந்தது. அடுத்த இரண்டாவது வாரம் ஆலயத்தின் குறிஞ்சிக் கோயில் அருகில் ஒரு பிச்சைக்காரரின் சடலம் கிடந்தது.
உதவி ஆணையர் செல்வகுமாரி வளர்க்கும் பசுமாடுகளில் ஒன்று மாட்டுப் பொங்கல் அன்று இறந்துவிட்டது. பயந்து போன கோயில் உதவி ஆணையர் செல்வகுமாரி, கேரளாவில் இருந்து ஸ்ரீகுமார் உட்பட நான்கு நம்பூதிரிகளை வரவழைத்தார். பௌர்ணமி செவ்வாய் இரவு 8 மணிக்கு, ஆலயக் கதவுகளை பூட்டிக் கொண்டு யாகத்தைத் தொடங்கினார்கள். இரவு 11.30-க்கு யாகம் முடிந்தது.
12 மணிக்கு வெளியே வந்த நம்பூதிரி ஸ்ரீகுமாரிடம் ""எதற்கிந்த ரகசிய யாகம்?'' என்றோம். ""கோயிலுக்குள் துர்தேவதைகள் புகுந்துவிட்டன. அவற்றை விரட்டவே இந்த யாகம்'' பதட்டத்தோடு கூறிவிட்டு விறுவிறுவென நடையைக் கட்டினார்.
-பரமசிவன்
திட்டமிட்ட விழாவை ரத்து செய்த அதிகாரி!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/signal1_48.jpg)
ஏழைமக்கள் கல்வியறிவு பெற்றால் மட்டுமே முன்னேற முடியும் என்ற உயரிய நோக்கத்தில் நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் பெயரில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி நிறுவனங்களை நிறுவினார் சுவாமி சகஜானந்தா. இவர் சட்டமன்ற உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர் என 40 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். சகஜானந்தாவுக்கு சிதம்பரத்தில் அவர் வாழ்ந்த இடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி ரவிக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாலகிருஷ்ணன், இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன் உள்ளிட்டவர்கள் எம்.எல்.ஏ.வாக இருந்த காலகட்டத்தில் சட்டமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு கடந்த 2013-ல் ஜெயலலிதா அனுமதி அளித்து அவர் வாழ்ந்த இடத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
27-ந் தேதி சகஜானந்தாவின் பிறந்தநாள். சகஜானந்தா மணிமண்டபத்தில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று மாவட்ட மக்கள் தொடர்புத்துறை மூலம் மணிமண்டப நிர்வாகிகளிடம் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
பிறந்தநாள் விழாவுக்கு இரு நாட்களே இருந்த நிலையில் "அரசு விழாவாக கொண்டாட முடியாது. அரசிடமிருந்து சரியான தகவல் இல்லை' என்று பி.ஆர்.ஓ. ரவிச்சந்திரன் விழாவுக்காக பந்தல், சேர், மாலை உள்ளிட்டவற்றை அமைக்க கொடுத்த அட்வான்ஸை திருப்பி வாங்கிச் சென்றுவிட்டார்.
இதனால் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சகஜானந்தா பிறந்தநாளை அரசு விழாவாக நடத்தவில்லையென்றால் தொடர் போராட்டம் நடத்த முன்னாள் மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் திட்டமிட்டுள்ளனர்.
-அ.காளிதாஸ்
மீண்டும் நிர்வாண யாகம்!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/signal2_32.jpg)
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த யோகீஸ்வரர் சுவாமி என்கிற நிர்வாண சாமியார், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமணாஸ்ரமம் எதிரே ஆந்திரா ஆஸ்ரமம் அருகில் கடந்த 23-ந் தேதி முதல் நிர்வாணமாக அமர்ந்து யாகம் செய்துவந்தார். நிர்வாண சாமியாரின் யாகம் பற்றிய தகவல் பரவி, கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்த கோட்டாட்சியர், தாசில்தார், நகர காவல் ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான போலீஸ் படை, "நிர்வாணமாக அமர்ந்து யாகம் நடத்தக்கூடாது, உடனே அதனை நிறுத்தாவிட்டால் கைது செய்வோம்' என எச்சரித்தது.
இது குறித்து அந்த நிர்வாண சாமியாரின் தலைமைச்சீடர் ரவி என்பவர், ""சென்னையில் இருந்து ஒரு டெபுடி டைரக்டர் உங்க ஊர் கலெக்டருக்கு தகவல் சொன்னார். அதற்கப்புறம் தான் பூஜை செய்யறோம். கலெக்டரைவிட நீங்க பெரிய ஆளா?, போலீஸ் எப்படி எங்களை கேள்வி கேட்கலாம்?, நாங்க தனியார் இடத்தில் யாகம் நடத்தறோம், நாங்க எப்படி வேணா நடத்துவோம்... நடத்தக்கூடாதுன்னு சொல்றதுக்கு நீங்க யார்'' என கேட்டார்.
""நிர்வாணமா உட்கார்ந்து அவர் யாகம் நடத்துவது பொதுமக்களை முகம் சுளிக்க வச்சிருக்கு, சாதாரண யாகம்னா யார் தடுக்கப்போறாங்க. சாமியார்ங்கறதால மரியாதையா பேசறோம், இல்லைன்னா ஸ்டேஷனுக்கு தூக்கிப் போய்டுவோம்... ஒழுங்கா கிளம்பிப் போங்க'' என எச்சரித்தனர்.
2 மணி நேர வாக்குவாதத்துக்குப் பின் சாமியார் ஒரு காரில் ஏறி கிளம்பிச் சென்றார்.
இதே சாமியார், கடந்த ஆண்டு கிரிவலப்பாதையில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் இதேபோல் நிர்வாணமாக அமர்ந்து யாகம் நடத்தினார். அப்போது பெரும் பிரச்சினையாக... மாவட்ட நீதிபதியாக இருந்த மகிழேந்தி நேரடியாக வந்து பூஜையை நிறுத்தி வெளியேற்றினார். ஓராண்டுக்குப்பின் மீண்டும் வந்து யாகம் நடத்த... மக்களின் எதிர்ப்பால் தற்போது விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.
-து.ராஜா
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-02-05/signal-t.jpg)