குமரி மாவட்டம் களியக்காவிளை காவல்நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் ஆய்வாளராகப் பணியாற்றிய சாம்சன், இளைஞர்களின் தோழமையோடு பல ஊர்களிலும் நலிவடைந்திருந்த அரசுப் பள்ளிகளை, தனது சொந்தச் செலவில் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றியுள்ளார். பல ஏழைக் குழந்தைகளின் படிப்புச் செலவையும் ஏற்று, பொதுமக்களிடம் நற்பெயர் எடுத்திருக்கிறார்.

Advertisment

signalஇந்த நிலையில்தான் சட்டம்-ஒழுங்கு பிரிவில் இருந்து குமரி மாவட்ட நக்சல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். ஆனாலும் ஆய்வாளர் சாம்சனின் தொண்டு குறையவில்லை.

பேச்சிப்பாறை அருகே உள்ள தச்சமலைக் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளிக்கு தனது சொந்தச் செலவில் சோலார் மின்விளக்கு ஏற்படுத்தி யிருக்கிறார். அதோடு, ஒகிப் புயலால் பாதிக்கப்பட்ட அந்த மலைக்கிராம மக்களுக்கு இளைஞர்களின் உதவியோடு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

அந்த தச்சமலை மலைக்கிராம மக்களோடு பொங்கல் விழாவைக் கொண்டாடுவதற்காக 13-01-19 அன்று இளைஞர்கள் சிலரை அழைத்துக்கொண்டு ஜீப்பில் சென்ற ஆய்வாளர் சாம்சனை, ஜீரோபாயின்ட் செக்போஸ்ட்டில் தடுத்து நிறுத்தி திரும்பிப்போகச் சொன்னது வனத்துறை.

Advertisment

வனத்துறையினருக்கும் ஆய்வாளர் சாம்சன் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கடைசியில் கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது.

""நீங்கள் மாவோயிஸ்ட்டுகளா?'' என்று கேட்ட வனத்துறையினர், ஆய்வாளரையும் இளைஞர்களையும் அங்கேயே உட்காரவைத்து விட்டார்கள்.

சிறைப்பிடிக்கப்பட்ட அவர்களை காவல்துறை உயரதிகாரிகள் தலையிட்டு மீட்டிருக்கிறார்கள்.

Advertisment

ஆய்வாளர் சாம்சனை தரக்குறைவாக நடத்திய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்போது போர்க்கொடி தூக்கியுள்ளார்கள் போலீசார்.

-மணிகண்டன்

குபேர மேடையில் பிரச்சாரம்!

திருநெல்வேலியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம். அதில் கலந்துகொள்வதற்காக விமானத்தில் தூத்துக் குடி சென்று, அங்கிருந்து நெல்லைக்கு காரில் செல்வ தாகத்தான் பயண ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டிருந்தன.

signal

ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ""கின்னஸ் சாதனைக்காக ஒரே நாளில் 2000 காளைகளைத் தெறிக்கவிடும் மஞ்சுவிரட்டு நடத்தப் போகிறேன், தாங்கள்தான் தொடங்கி வைக்கவேண்டும்'' என்று ஒப்புதல் பெற்று முதலமைச்சர் பயணத்தை சாலைவழி ஆக்கிவிட்டார்.

விராலிமலையில் இருந்து நெல்லைக்கு காரில் செல்கிறார் எடப்பாடி என்பதை அறிந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சாத்தூரில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை துவக்கத் திட்டமிட்டார். எடப்பாடியிடம் ஒப்புதல் பெற்றார். சாத்தூருக்கு வந்த எடப்பாடி, தேவர் சிலைக்கு, காமராஜர் சிலைக்கு, எஸ்.ஆர்.நாயுடு உருவப் படத்துக்கு, அம்பேத்கர் உருவப்படத்துக்கு என்று மாலைகளைப் போட்டு, சாத்தூர் தொகுதியில் மெஜாரிட்டியாக இருக்கிற நான்கு சாதி மக்களையும் "குளிரில்' நனைய வைத்தார். சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்தும், தலைக்கு இருநூறென அழைத்து வரப்பட்ட கூட்டம் குவிக்கப்பட்டிருந்தது.

""அண்ணே! சாத்தூரில் குபேர மூலையில் மேடை போட்டிருக்கிறோம். அதோடு பவுர்ணமி நாள். தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்க மிகச் சிறந்த நாள். வெற்றி மேல் வெற்றிதான்'' என்று ராஜேந்திர பாலாஜி சொல்ல...

""நீங்க விட்டாலும் வாஸ்து உங்களை விடாது போல'' என்று கமெண்ட் அடித்திருக்கிறார் எடப்பாடி.

சாத்தூர் குபேர மேடையில், ஏறி மைக் பிடித்த முதலமைச்சர், ""பாராளுமன்றத் தேர்தலோடு சாத்தூர் சட்டமன்றத்திற்கும் இடைத்தேர் தல் வரவிருக்கிறது'' என்று தேர்தல் பிரச்சாரத்திற்கு பிள்ளையார் சுழி போட்டார்.

-சி.என்.ராமகிருஷ்ணன்

ஐயப்பனை தரிசித்த 51 பெண்கள்!

signal

கேரளாவின் மலப்புரம் பகுதியின் இளம் பெண்களான கனக துர்காவும், பிந்துவும் சபரிமலை தரிசனம் செய்து வெளியேறிய மறுகணம், பரிவார் அமைப்புகளில் அதிர்வலைகள் ஏற்பட்டன. பா.ஜ.க. உள்ளிட்ட பரிவார் அமைப்புகள் உடனடி பந்த்திற்கு அழைப்பு விடுக்க... கேரளாவில் வன்முறை வெடித்தது. நூற்றுக்கணக்கான பேருந்துகள் உடைக்கப்பட்டன. தீ வைப்பு பொதுச்சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட வன்முறையின் உச்சம், உயிர்ப்பலி வரை சென்று கேரளாவே எரிமலைக் கொதிப்பானது.

ஆனாலும் பரிவார் அமைப்புகளின் செயல்பாட்டுக்கு அசராத பினராய் விஜயன் அடுத்த அதிரடியாக, "இந்த இரண்டு பெண்கள் மட்டுமல்ல இதுவரை 51 இளம் பெண்கள் சபரிமலை தரிசனம் செய்துள்ளனர்' என்கிற பட்டியலை உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பித்து அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். தரிசனம் செய்தவர்களில் 24 பேர் தமிழர்கள், 21 பேர் ஆந்திரப் பெண் கள், 6 பேர் கோவாவைச் சேர்ந்த பெண் களாம். கனகதுர்கா, பிந்துவின் தரிசன விவகாரம் வெளியே தெரிந்து விவகார மானதையடுத்தே ஆச்சாரம் மீறப்பட்ட தாக தந்திரிகள் நடையைச் சாத்தி பரிகார பூஜைகள் செய்து, பின்பு நடை திறந்திருக்கிறார்கள். அதன் பின் இளம் பெண்கள் தரிசனத் திற்கு வந்து போன நேரத்தில் தந்திரிகள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையாம்.

தந்திரிகளால் நடைசாத்தப்பட்ட சம்பவத்திற்குப்பின், "ஆலய தந்திரிகள் கேரள அரசின் தேவசம்போர்டால் நியமிக்கப்பட்டவர்கள். சட்டதிட்டத்திற்கும், மீறினால் நடவடிக்கைக்கும் உட்பட்டவர்கள்' என்று எச்சரிக்கை செய்திருந்தார் கேரள தேவசம் போர்டு அமைச்சரான கடகம் பள்ளி சுரேந்திரன். எனவே அரசு நடவடிக்கை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயலாம் என்ற பீதியில், இளம் பெண்கள் ஆலயம் வந்த போது தந்திரிகள் எதிர்ப்புத் தெரிவிக்காமல் அமைதியாகி யிருக்கிறார்கள்.

தரிசனம் செய்த இளம் பெண்கள் 51 என்பது வெறும் கணக் கல்ல. அதற்கு அரசு வசம் வீடியோ ஆதாரமும் இருக்கிறதாம்.

-பரமசிவன்