Skip to main content

சிக்னல்!!!

 

தியேட்டரில்...!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் புதுத்தெருவை சேர்ந்தவன் 20 வயதான அஜித்குமார். அஜித்குமார் என்கிற பெயர் வைத்ததாலோ என்னவோ... தீவிர அஜித்

signal

வெறியனாகவே இருந்து வந்துள்ளான். படம் பார்ப்பதற்காகவும், அஜித்துக்கு கட்அவுட் வைப்பதற்காகவும், பாலாபிஷேகம் செய்வதற்காகவும் தனது தந்தை பாண்டியனிடம் பணம் கேட்டுள்ளான். கூலித்தொழிலாளியான பாண்டியன், ""பணம் இல்லடா... போடா'' எனச் சொல்லியுள்ளார். ""நீ பணம் தரலன்னா அவ்வளவுதான்'' என மிரட்டியுள்ளான். ""டேய்... போடா'' எனச்சொல்லிவிட்டு அவர் இரவு தூங்கச் சென்றுள்ளார். பணம் தரவில்லை என்கிற கோபத்தில் இரவு படத்துக்கு போகமுடியவில்லை என்கிற ஆத்திரம் அதிகமாகி... இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை பிடித்துவந்து, தூங்கிக்கொண்டிருந்த தனது தந்தை முகத்தின் மீது ஊற்றியுள்ளான். தன்மீது பெட்ரோல் வாசனை வருகிறதே என அவர் பதட்டமாகி எழுந்துகொள்ளும் முன் தீக்குச்சியை உரசி, தனது தந்தைக்கு உயிரோடு தீவைத்துள்ளான்  மகன். அவர் அலறியபடி எழுந்து போர்வையால் முகத்தை அழுத்தி தீயை அணைத்தார்.


சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டினர் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சியாகி, மகனைப் பிடித்து தர்மஅடி அடித்துள்ளனர். காயம்பட்ட பாண்டியனை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுபற்றி விருதம்பட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அப்பகுதி மக்களோ, "பாண்டியன் ஒரு குடிகாரன். அக்குடும்பத்தில் தந்தைக்கும்-மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடக்கும். இச்சம்பவம் பணம் தரவில்லை என்தபற்காக நடந்ததா? அல்லது வேறு காரணமா என விசாரிக்க வேண்டும்' என போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்கள்.
-து.ராஜா

 

மார்க்கெட்டில்...!

தூத்துக்குடியின் முகவரியே நகரின் மத்தியில் அமைந்துள்ள வ.உ.சி. மார்க்கெட்தான்.  அ முதல் ஃ வரையிலான அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் ஒரே சந்தை. தற்போது ஆல விருட்சம் போல கிளை பரப்பி விரிந்து காணப்படும் இந்தச் சந்தை, ஆட்சியாளர்களின் கண்களை உறுத்தியிருக்கிறதுபோல. 

 

signal
டிச. 17 அன்று மாநகராட்சி கமிஷனரிடமிருந்து "அரசின் திட்டப்படி வ.உ.சி. சந்தையை இடித்து  புதிய அடுக்குமாடி வணிக வளாகம் கட்டுவது தொடர்பான வியாபாரிகளின் கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு தவறாது ஆஜராக வேண்டும்' என்று வ.உ.சி. மார்க்கெட்டின் ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவர் சிம்சனுக்கு வந்த ஓலையைக் கண்டு அதிர்ந்துவிட்டார்கள் வியாபாரிகள்.
பெரும் திரளாகச் சென்று மாநகராட்சி கமிஷனரான ஆல்வின்ஜான் வர்கீஸை சந்தித்தனர் வியாபாரிகள்.

""நவீனமயமாக்கல் என்ற வகையில் கடைகளை இடித்துவிட்டு 30 கோடி எஸ்டிமேட்டில் மூன்று ஏக்கர் பரப்பளவில் 700 கடைகளைக் கொண்ட நவீன வளாகம் கட்ட அரசுக்கு எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்று யாரால் கணிக்க முடியும். இந்தச் சந்தைக் கடைகளையே எங்களின் அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்டு மூன்று தலைமுறைக்கு மேலாக வியாபாரம் செய்து பிழைப்பை நகர்த்திவரும் எங்களின் 8,000 குடும்பங்கள், நவீன கடைகள் கட்டி முடிக்கும் வரை பிழைப்புக்காக எங்கே போவது. பொசுங்கி விடுவோமே'' என நெஞ்சு வெடிக்க வியாபார மக்கள் சொன்னது கமிஷனரை உலுக்கியிருக்கிறது.


இதன் ஐக்கிய வியாபாரிகள் சங்கச் செயலாளரான ராமர் சொல்வது...
""இது எங்களின் எட்டாயிரம் குடும்பங்களின் வயிற்றுப் பிரச்சினை மட்டுமல்ல. இதை நம்பியுள்ள ஏழாயிரம் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பும் பறிபோகிறது. வாழ்க்கை ஸ்தம்பித்து விடும். அதனால்தான் இத்தனை தீவிரம்'' என்கிறார்.
ஸ்டெர்லைட் நெருக்கடியால் திணறும் தூத்துக்குடிக்கு, அடுத்த இடி... வ.உ.சி. மார்க்கெட் இடிப்பு. 
#பரமசிவன்

காவல்நிலையத்தில்...!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போக்குவரத்து காவல் துறையில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பதி. இவர் சத்தியமங்கலத்தில் ட்யூட்டிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. சைக்கிளை

signal

மட்டும்தான் விட்டு வைப்பாராம். டூவீலர், நான்கு சக்கரம், லாரி, பஸ் என எதையும் விட்டுவைப்பதில்லை. அதுவும் தமிழக#கர்நாடக எல்லைப் பகுதி பண்ணாரி சோதனைச் சாவடியை கடந்துதான் அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டும். முறையான ஆவணங்கள் இருந்தாலும் இவருக்கு மாமூல் கொடுத்தால்தான் வண்டி ரிலீஸôகும். எல்லா வருமானத்தையும் இவரே வைத்துக்கொள்வதால் உடன் பணியாற்றும் வருவாய் இழந்த போக்குவரத்து போலீசாரே பொறி வைக்க திட்டமிட்டனர். 8#ந் தேதி இரவு மணல் ஏற்றிய லாரி ஒன்றில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. ராஜேசும் மற்றும் ஒரு காவலரும் டிரைவர், கிளீனர் போல சென்றனர்.  லாரியை மடக்கிய இன்ஸ்பெக்டர் பதி, "மணல் லாரியா? தமிழ்நாட்டு மணலை கர்நாடகாவுக்கு கடத்துறீங்களா? ஒரு லட்சம் ஃபைன்' என்று கூற... "அவ்வளவு இல்லைங்களே சார்...' என்று கூறிய லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி.  இறுதியில் இருபதாயிரம் பேரம் பேசி கொடுத்துள்ளார். அதன்பிறகு "சரி... லாரிய எடுத்துகிட்டு போங்க' என டிராபிக் இன்ஸ்பெக்டர் பதி சொல்ல... டி.எஸ்.பி. தனது ஐ.டி. கார்டை காட்டி இன்ஸ் பதியை சோதனையிட்டுள்ளார். 


வாங்கிய லஞ்சம் இருபதாயிரத்துடன் மொத்தம் 40 ஆயிரத்தை இன்ஸ் பதியிடம் பறிமுதல் செய்ததோடு "போலீஸ் ஸ்டேசன் போலாம்' என கூறியுள்ளனர். அதற்கு இன்ஸ் பதி, ""நான் எனது காரில் ஸ்டேஷன் வருகிறேன், நீங்கள் உங்கள் வாகனத்தில் வாங்க. அங்கு போய் சட்டப்படி நீங்க என்ன செய்யணுமோ அதைச் செய்யுங்க'' என்று கூற, அதை நம்பிய லஞ்ச ஒழிப்பு போலீசார்... "சரி முன்னால போங்க' என்று கூறியுள்ளனர். அடுத்த நொடியே காரை எடுத்துக் கொண்டு பறந்து விட்டார் இன்ஸ்பெக்டர் பதி. இப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ் பதியை தேடி வருகிறார்கள்.


-ஜீவாதங்கவேல்

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்