முதலுக்கே மோசம்!
லஞ்சம், மாமூல், கமிஷன் என்பதெல்லாம் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு சலித்துவிட்டது. விவசாயிகளுக்கான தொகையை மொத்தமாகவே சுருட்டுகிறார்கள்.
புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில். இதன் தலைமைச் சிவாச்சாரியார் பிச்சைக் குருக்கள். இவருக்கு இளையான்குடி வட்டம், நாகமுகுந்தன்குடி எனும் கிராமத்தில் விவசாய நிலங்கள் உள்ளன.
பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், காப்பீட்டிற்கான பிரிமியம் தொகையைக் கட்டுகின்ற விவசாயிகளுக்கு மட்டுமே சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டால், பயிருக்கே சேதம் ஏற்பட்டால் இழப்பீடு கிடைக்கும்.
பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள், தனது விவசாய நிலத்திற்கு கடந்த ஆண்டு, பிரிமியம் தொகை கட்டவேயில்லை. இவரைப் போலவே நாகமுகுந்தன்குடியில் விவசாய நிலம் உள்ள முத்துவடுகநாதனும் கோவிந்தனும், பெரியண்ணனும் பிரிமியம் தொகை செலுத்தவில்லை.
ஆனால், பிச்சைக் குருக்கள், முத்து வடுகநாதன், கோவிந்தன் பெயர்களில் பிரிமியம் தொகையைக் கட்டி ஐம்பது லட்ச ரூபாயை மொத்தமாக பங்கு போட்டுக்கொண்டிருக்கிறார்கள் இளையான்குடி வட்ட வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள்.
பிள்ளையார்பட்டி கோயில் பிச்சைக் குருக்கள் முக்கியமானவர் என்பதால் விவகாரம் முதலமைச்சரின் கவனத்துக்குச் சென்றிருக்கிறது.
-நாகேந்திரன்
ஆக்கிரமிப்புக்கு உதவி!
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப் பென்னாத்தூர் தொகுதி மங்கலம் நகரில் காவல்நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம், சுகாதார நிலையம், அரசு மேனிலைப்பள்ளியென இருப்பதால், சுற்றுப்புறத்திலுள்ள 50 கிராமங்களிலிருந்து தினமும் சராசரி 25 ஆயிரம் மக்கள் வந்துபோகிறார்கள்.
மங்கலத்தில் பொதுக்கழிப்பறைகளோ, பேருந்து நிழற் குடையோ, நூலகமோ பொது மக்களுக்கான எந்த வசதிகளும் இல்லை. ஏற்படுத்தித் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் 2007-ல் மனு கொடுத்தார் தமிழ்நாடு மாணவர் சங்க மாநில துணைத்தலைவராக இருந்த விஜயகுமார்.
"கழிப்பிடம் கட்ட இடமில்லை என்றார்கள் அதிகாரிகள். முக்கிய சாலையோரம், 15 மீட்டர் அகலத்திற்கு 500 மீட்டர் நீளத்திற்கு நெடுஞ் சாலைத்துறைக்குச் சொந்தமான இடம் உள்ளது. இது ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றினால், அதற்குப் பின்னால் உள்ள வருவாய்த்துறைக்கு உரிய இடம் உள்ளது' என்பதைச் சுட்டிக்காட்டி தனது கோரிக்கையை வலியுறுத்தினார் விஜயகுமார்.
ஆக்கிரமிப்பாளர்கள் ஐம்பது பேரும் அதிகாரிகளை கரன்ஸியால் குளிப்பாட்டியதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை.
2007 முதல் 2015 வரை முதலமைச்சர், அமைச்சர்கள், கலெக் டர் என மனு போராட் டம் நடத்தி ஆக்கிர மிப்புகளை அகற்றவைத்தார் விஜயகுமார். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஓராண்டு கடந்துவிட்டது. ஆனால் இன்று வரை கழிப்பறைகள் கட்டப்படவில்லை. ஆக்கிரமிப் பாளர்கள் மீண்டும் குடியேறத் தயாராகிவிட்டனர்.
""பிரதமர் அலுவலகமும், மனித உரிமை ஆணையமும் தலையிட்டும் கூட, மங்கலத்தில் அடிப்படை வசதிகளை கட்டமைக்கவில்லை அதிகாரிகள். வேறு வழியில்லை... பொதுநல வழக்குத் தொடரப்போகிறேன்'' என்கிறார் விஜயகுமார்.
-து.ராஜா
நேர்மைக்குப் பாராட்டு!
கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணனின் நடவடிக்கைகள், பொதுமக்களிடம் மட்டுமின்றி காக்கிகளிடமும் வரவேற்பை பெறத் துவங்கியுள்ளன.
""ஒவ்வொரு காவல்நிலையத்திலும் அதிகாரிகள் 11:00 மணி முதல் 12:10 வரை கட்டாயம் இருக்கவேண்டும். பொதுமக்களின் புகார்களைப் பெறவேண்டும். உண்மைத் தன்மையறிந்து எஃப்.ஐ.ஆர். போட வேண்டும். மணல் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுத்தாக வேண்டும்'' அடுக்கடுக்காய் உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
எஸ்.பி. சரவணன், சமீபத்தில் விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்றுகொண்டிருந்தபோது, வேப்பூர் பகுதியில் ரோந்து வாகனத்தில் இருந்த காக்கிகள் மினி லாரியை வழிமறித்து லஞ்சம் வாங்கிக்கொண்டிருந்ததைக் கண்டார். கண்ட்ரோல்ரூமை தொடர்புகொண்டார். லஞ்சக் காவலர்களை ஆயுதப் படைக்கு மாற்றியதோடு விசாரணைக்கும் உத்தரவிட்டார்.
மாவட்டத்தில் மணல் திருட்டு வெகுவாக குறைந்திருக்கிறது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மூலம் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிரடி நடவடிக்கைகள் எடுக் கும் எஸ்.பி. காவல்துறையினரின் நலனிலும் அக்கறை காட்டுகிறார்.
ஆயுதப்படை காவலர்கள், எஸ்.பி. அலுவலகப் பணியாளர்கள், காவல்துறையினரின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் ஐயாயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, ஆயுதப் படை வளாகத்தில் அமைத்து டி.ஐ.ஜி. சந்தோஷ்குமாரை அழைத்து திறக்க வைத்திருக்கிறார். காவல் துறையினரின் பாதுகாப்பு மற்றும் பயிற்சி வாகனங்களில் பயன்மிகு நூலகங்களை அமைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, எஸ்.பி. தனது அலுவலக வரவேற்பறையிலும் படிப்பகத்தோடு கூடிய நூல கத்தை அமைத்திருக்கிறார். இப்போதைக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட் டையும் பெற்றுவிட்டார் எஸ்.பி. சரவணன்.
-சுந்தரபாண்டியன்