காவல்நிலைய பாதுகாப்பில்...!

மலைகளின் அரசியான நீலகிரியில் இயற்கையின் எழில் கொலுவிருக்கும் இடம் கோத்தகிரிதான்.

signal

ஆனால், கோத்தகிரி மக்களையும் கோத்தகிரிக்கு சுற்றுலா வரும் பயணிகளையும் மயக்கிக்கொண்டிருப்பது லாட்டரி சீட்டுதான்.

Advertisment

ராம்சந்த், மார்க்கெட், அரவேணு, கட்டபெட்டு என இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள கடைகளில் லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது.

""லாட்டரி டிக்கெட் என்றால் அச்சடிக்கப்பட்ட கலர் சீட்டுகள்னு நினைக்காதீங்க. ஒரு வெள்ளைக் காகிதத்தில் வாங்குபவர் சொல்லும் எண்ணை எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறார் கடைக்காரர். அந்த சீட்டில் உள்ள எண்களில் கடைசி ஒரு எண் சரியாக இருந்தால் 100 ரூபாய் பரிசு. கடைசி இரண்டு எண்கள் சரியாக இருந்தால் 1000 ரூபாய் பரிசு. மூன்று எண்களும் சரியாக இருந்தால் 25 ஆயிரம் பரிசாகக் கொடுக்கிறார்கள்.

கிங், கேரளா, ஸ்கை, ஸ்டார் என்ற நான்கு வகை லாட்டரிகள் கோத்தகிரியில் அதிகம் விற்பனையாகின்றன. கிங் 12 மணிக்கும், கேரளா 3 மணிக்கும், ஸ்கை 4 மணிக்கும், ஸ்டார் 6 மணிக்கும் முடிவுகளை வெளியிடுகின்றன. முடிவுகள் கேரளாவில் இருந்து எஸ்.எம்.எஸ். மூலம் கோத்தகிரியை வந்தடைகின்றன.

Advertisment

""கேரளா லாட்டரிக்காரன் 26-ஆம்தேதி 455-யும், 27-ஆம் தேதி 811-யும் முடிவாக வெளியிட்டான்'' என்றார் கோத்தகிரி காவல்நிலையத்துக்கு எதிரிலுள்ள ஒரு கடைக்காரர்.

கோத்தகிரியில் தினமும் சுமார் ஆறு லட்ச ரூபாய்க்கு லாட்டரி விற்பனை நடக்கிறது. கோத்தகிரி காவல்நிலையத்திற்கு எதிரில் மூன்று கடைகளில்தான் லாட்டரி வியாபாரம் அதிகம் விற்கிறது. லாட்டரி விற்பனையை ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார் கோத்தகிரி காவல்நிலைய ஆய்வாளர் பாலசுந்தரம்.

-அருள்குமார்

பிறந்தநாள் கொண்டாட்டத்தில்...!

திருச்சி தி.மு.க.வில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் குடமுருட்டி சேகர். மாவட்ட துணைச்செயலாளரான இவர், கரூர் பை-பாஸ் சாலையருகே உள்ள குடமுருட்டி பகுதியில் வசிக்கிறார்.

குடமுருட்டி சேகரின் தம்பி ஆறுமுகம், ஒரு டெலிபோன் பிரச்சினையில் ஹோட்டல் ஊழியர் ஒருவரை தாக்கிய வழக்கில் 25-12-18 அன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.

signal

இந்தக் கைது நடவடிக்கை குடமுருட்டி ஆறுமுகத்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்டதால் தி.மு.க.வினர் மத்தியில் பதட்டமும் பரபரப்பும் பற்றிக்கொண்டது.

ஆறுமுகத்தின் பிறந்தநாளுக்காக திருச்சியின் பல இடங்களில் ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ப்ளக்ஸ் பேனர்களுக்கு திருச்சி மாநகராட்சியில் முறைப்படியான அனுமதி எதுவும் பெறவில்லை என்று கோட்டை காவல்நிலைய எஸ்.ஐ. மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் மற்றொரு வழக்கும் ஆறுமுகத்தின் மீது பதியப்பட்டுள்ளது.

இவருடைய அண்ணன் குடமுருட்டி சேகரை, போன அ.தி.மு.க. ஆட்சியில் இரண்டுமுறை குண்டாஸில் சிறையில் அடைத்தனர்.

குடமுருட்டி சேகரின் இன்னொரு தம்பியான குடமுருட்டி கரிகாலன், விஜய் மன்றத்தின் மாவட்ட இளைஞர் அணியில் இருக்கிறார். ஆனாலும் குடமுருட்டி ஆறுமுகத்தின் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன. இது தி.மு.க.வினர் மத்தியில் மட்டுமின்றி அனைத்துக் கட்சியினர் மத்தியிலும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

-ஜெ.டி.ஆர்.

பேஸ்புக் போதையில்...!

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஆஞ்சநேயபுரத்தைச் சேர்ந்தவர் திருமுருகநாதன். இவரது மனைவி பானுமதி, மகள்கள் சாமுண்டீஸ்வரி மற்றும் தேவிப்ரியா. 19 வயதாகும் தேவிப்ரியா பட்டாபிராமில் தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாமாண்டு படித்து வந்தார்.

signal

இவருக்கும் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்கிற 18 வயது இளைஞருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு, பின்னாளில் காதலாக மலர்ந்தது. பானுமதி, மகளைத் திருத்திவிடலாம் என எண்ணி கண்டித்துள்ளார். ஆனால், திருமுருகநாதனின் கவனத்துக்கு இந்த விஷயத்தைத் தெரியப்படுத்தவில்லை.

தங்களது காதலுக்கு தடையாக இருக்கும் பானுமதியை நண்பர் விவேக்கின் நண்பர்களான சதீஷ் மற்றும் விக்னேஷ் உதவியோடு கொன்றுவிட்டு, வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவு செய்திருந்தனர் சுரேஷும், தேவிப்ரியாவும்.

டிசம்பர் 24ஆம் தேதி திருமுருகானந்தம் வேலைக்குச் சென்றுவிட, மதியவேளையில் பானுமதி மற்றும் சாமுண்டீஸ்வரி உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்கு வந்த சதீஷ், விக்னேஷ் இருவரையும் திருடுவதுபோல ஆக்ஷன் செய்யச் சொல்லிவிட்டுக் கூச்சலிட்டிருக்கிறார் தேவிப்ரியா. இதைக்கேட்டு அலறியடித்து ஓடிவந்த பானுமதியின் கை, கால்களை இளைஞர்கள் பிடித்துக்கொள்ள, தேவிப்ரியா கத்தியால் மார்பு, வயிறு என சரமாரியாகக் குத்தி தன் தாயை கொலை செய்தார்.

கூச்சல் சத்தம்கேட்டு சாமுண்டீஸ்வரி எழுந்து வந்ததும் மூவரும் அங்கிருந்து தப்பியோடி இருக்கின்றனர். அதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட சுரேஷை ஆந்திராவில் கைதுசெய்த காவல்துறையினர், நால்வரையும் புழல் சிறையில் அடைத்துள்ளனர். சுரேஷின் நண்பன் விவேக்கைத் தேடி வருகின்றனர்.

-ச.ப.மதிவாணன்