அமைச்சரா? எம்.எல்.ஏ.வா?
சொந்த ஊருக்கு வந்துவிட்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று வழியனுப்பிய பெருந்துறை அ.தி.மு.க.வினர் ஐவர் மீது தீண்டாமை வழக்குப் பாய்ந்திருக்கிறது.
12.12.18 அன்று சென்னையிலிருந்து சேலத்துக்கு வந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ஐந்து நாட்கள் குடும்ப நிகழ்வுகளிலும், பொதுநிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற அவர் 16.12.18 அன்று சென்னை செல்வதற்காக, சேலத்திலிருந்து கோவை விமான நிலையத்திற்குப் புறப்பட்டார்.
எடப்பாடியை வரவேற்று வழியனுப்புவதற்காக, பெருந்துறை விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே அமைச்சர் கருப்பணன் ஆதரவாளரான இளைஞரணி மா.செ. ஜெயக்குமாரும், அ.தி.மு.க.வினரும் காத்திருந்தனர். சற்று தொலைவில் தனியே நின்ற தோப்பு வெங்கடாசலத்தின் கோஷ்டியைச் சேர்ந்த ஈமுகோழி சங்கர் என்பவர், அமைச்சர் கோஷ்டியினரிடம் சென்று, ""உங்க ஆட்களில் பாதிப்பேரை எங்கள் பக்கம் அனுப்புங்கள்'' என்று கெஞ்சினார். அனுப்ப மறுத்துவிட்டார் இளைஞரணி மா.செ.
இது தோப்பு வெங்கடாசலத்திற்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டென்ஷனாகிவிட்டாராம் அவர். மறுநாள், பெருந்துறை போலீசார், ஈமு கோழி சங்கரை சாதிப்பெயரைச் சொல்லி கேவலமாகத் திட்டியதாகவும், கொலைமிரட்டல் விட்டதாகவும் தீண்டாமை, வன்கொடுமை உள்ளிட்ட 7 பிரிவுகளில் அமைச்சரின் ஆதரவாளரும், இளைஞரணி மா.செ.யுமான ஜெயக்குமார் மற்றும் அவருடைய நெருக்கமான கட்சியினரான திங்களூர் கந்தசாமி, பழனிச்சாமி, பாலு, செந்தில் ஆகிய ஐவர் மீதும் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
""தோப்பு வெங்கடாசலத்தின் பிரஷரால்தான் வழக்கு பதிந்துள்ளார்கள்'' எனக் கொதித்த ஐவரும் சென்று, எடப்பாடியிடம் முறையிட்டிருக்கிறார்கள்.
-ஜீவாதங்கவேல்
சட்டப்படியா? திருட்டுத்தனமாகவா?
தஞ்சை ரயிலடியில், 1994-ஆம் ஆண்டு உலகத்தமிழ் மாநாடு நடந்தபோது எம்.ஜி.ஆருக்கு சிலை திறந்தார் ஜெ. கடந்த சில நாட்களாக அந்த சிலையின் அருகில் சிலர் வேலைகள் செய்து கொண்டிருந்தனர். எம்.ஜி.ஆர். சிலையில் மராமத்து செய்வதாக மக்கள் நினைத்தார்கள். ஆனால் கஜா புயல் அதிகாலையில் வந்து தாக்கியது போல 18-ஆம் தேதி காலை அந்தப்பக்கம் போனவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் அதே உயரத்தில் ஜெ. சிலையும் வைக்கப்பட்டு மாலையும் அணிவிக்கப்பட்டிருந்தது.
ஜெ. சிலையில் இரவில் மாலை அணிவிக்கும் படம் வெளியானது. அந்தப் படத்தில், அடுத்த மேயர் பதவிக்காக காத்திருக்கும் அறிவுடைநம்பி, ச.ம.உ. வேட்பாளராக காத்திருக்கும் சரவணன் மற்றும் சில வட்டச்செயலாளர்கள் மட்டும் நிற்கிறார்கள்.
தஞ்சை ர.ர.க்கள் நம்மிடம்... ""தஞ்சையில் ஜெ.வுக்கு சிலை திறக்கவேண்டும் என்பது அனைத்து அ.தி.மு.க.வினரின் ஆசை. அதனால்தான் இந்த சிலை, பெங்களூரில் செய்யப்பட்டு வல்லம் பகுதியில் ஒரு வீட்டில் ரகசியமாக வைக்கப்பட்டது. வழக்கில் முதல்ஆளாக இருப்பதால் பொதுஇடங்களில் சிலை வைக்க யாராவது தடை கோருவார்கள் என்ற நிலை இருந்தது உண்மை. அதனால் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று மாநகராட்சி அனுமதியுடன் மாவட்டம் முழுவதும் உள்ள ர.ர.க்களை வரவைத்து கட்சி தலைவர்களை வைத்து சிலையை திறக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தோம். ஆனால் இப்படி ஒரு தலைவி சிலையை இரவில் திருட்டுத்தனமாக திறந்துவைத்து கேவலப்படுத்திவிட்டார்கள்'' என்று குமுறினார்கள்.
ஜெ. சிலைக்கு இரவில் மாலை அணிவித்த அறிவுடைநம்பியிடம் பேசினோம்... ""எம்.ஜி.ஆர். சிலை மாநகராட்சி அனுமதியுடன் திறக்கப்பட்டது. அப்பவே 1994-ல் அந்த இடத்தை அ.தி.மு.க. வுக்கு கொடுத்துட்டாங்க. அதனால் அம்மாவுக்கு சிலை திறந்தாச்சு. மாவட்ட கழகம் ஏற்பாட்டில் அ.தி.மு.க.வினர்தான் திறந்தது. வரும் நாட்களில் எல்லாரும் வந்து மாலை போடுவாங்க'' என்றார்.
-இரா.பகத்சிங்
வடகலையா? தென்கலையா?
ஆண்டாள் கோவில் சாமிகளின் அலப்பரை இது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழிமாத உற்சவர் புறப்பாட்டின்போது தென்கலை, வடகலை பிரிவினரிடையே வாக்குவாதம் எழுந்தது. அது வாக்குவாதமாக முடியாமல் வசை வாதமாக வளர்ந்தது.
""போடான்னா சொல்ற… பல்லைக் கழற்றி கையில் கொடுத்துடுவேன்''’’
""தைரியம் இருந்தா தொடுடா… நீ ஆம்பளையா இருந்தா தொடுடா''…’’
""ரெண்டு பேரா இருந்தாலும் வெட்டுவேன்''’’
""நீதான் மொதல்ல அன்னைக்கு வார்த்தைய விட்ட''’’
""என் வயசென்ன… உன் வயசென்ன''’’
-இப்படி தடித்த வார்த்தைகளில் பேசியவர்கள், ஒருவருக்கொருவர் அடிக்கப் பாய... விவகாரம் வீடியோவில் சிக்கி நமது கைவரைக்கும் வந்துவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தென்கலை சம்பிரதாயத்துக்கு உட்பட்ட கோவில். மார்கழி மாசம் வந்துட்டாலே வடகலையார்- தென்கலையாருக்குள்ள வில்லங்கம் வந்துடும். தை இரண்டாம் தேதி ஆனா சண்டையை அவாளே விட்ருவா. திருமாலைப் போற்றும் நாலாயிர திவ்யபிரபந்தப் பாசுரங்களை உற்சவர்முன் எந்தப் பிரிவினர் பாடுவது என்பதில்தான் மோதல். ""எல்லா வைஷ்ணவ ஆலயங்களிலயும் இதுமாதிரியான பிரச்சினை இருக்கு. இதுக்கெல்லாம் சட்டம் கிடையாது. ஆதியிலிருந்து என்ன பழக்கம் நடைமுறையில இருக்கோ அதைப் பின்பற்றுவதுதான் தீர்வு. இப்ப கோத்திரம் பார்க்காம ஒருத்தருக்கொருத்தர் சம்பந்தம் பண்ணிக்கிறா,…ஆனா இந்த ஒருமாசம் மட்டும் சாமி வந்தமாதிரி ஆடித் தொலைக்கிறா. இதை உள்ளூர்க்காரவா யாரும் சீரியஸா பார்க்கிறதில்லை''’என்றார் உள்ளூர் தென்கலை பிராமணர் ஒருவர் சாதாரணமாக. ஆனா சமூக ஊடகப் புண்ணியத்தில் இன்றைக்கு உலகமே பார்த்து சிரித்துத் தொலைக்கிறதே… கொஞ்சம் கௌரவமா நடந்துக்கப்பிடாதோ.
-சி.என்.இராமகிருஷ்ணன்