தொய்வில்லாத் தமிழ்ப்பணிக்கு விழா!
இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் ‘"புகாரில் ஒரு நாள்'’என்ற கவிதைக்காக வெள்ளிப் பதக்கம் பெற்றவர் கவிக்கோ ஞானச்செல்வன். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். என 3 முதல்வர்களின் ஆட்சியிலும் அவர்களின் கைகளால் விருதும் பாராட்டும் பெற்றவர். தமிழாசிரியர் பணியை சிறப்பாக நிறைவு செய்து, தமிழ்ப்பணியைத் தொய்வின்றித் தொடர்ந்து கொண்டிருக்கும் கவிக்கோ ஞானச்செல்வனின் புதிய நூல்கள், "சொல் விளைந்த கழனி', ‘"கல்லெல்லாம் கலையாகுமா? சொல்லெல்லாம் சுவையாகுமா?'’ஆகியவையாகும்.
இந்தப் புத்தகங்களின் வெளியீட்டு விழாவும் கவிஞரின் 80-ஆவது பிறந்தநாள் விழாவும் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ஓய்வுபெற்ற நீதியரசர் வள்ளிநாயகம் தலைமையில் நடைபெற்ற விழாவில் பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன், இயக்குநர் பேரரசு, ஐ.பி.எஸ். அதிகாரி முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வெளியிடப்பட்ட புத்தகங்களில் ஒன்று, கவிஞர் அளித்த பல பேட்டிகளின் தொகுப்பு. மற்றொன்று, பிற எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு அவர் எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பு. பிறமொழிக் கலப்பில்லாத தூய தமிழில் எழுதவும் பேசவும் இளந்தலைமுறையைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையில் கவிக்கோ ஞானச்செல்வன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுத் தொண்டாற்றுவதை விழாவில் பேசிய பலரும் குறிப்பிட்டுப் பாராட்டினர். தமிழால் மணந்தது அந்த மாலை வேளை.
-கீரன்
இளைய தலைமுறைக்கு உத்வேகம்!
தமிழ்நாட்டில் பெரியார் முன்னெடுத்த அந்தப் போராட்டம் நடந்து 60 ஆண்டுகளாகிவிட்டன. சுதந்திர இந்தியாவில் எந்தவொரு இயக்கத்தின் சார்பிலும் அந்தளவு சிறைத்தண்டனை பெற்றதில்லை. சாதியை ஒழிக்க வலியுறுத்தி இந்திய அரசியல் சட்டத்தை திராவிடர் கழகத்தினர் 10 ஆயிரம் பேர் 1957 நவம்பர் 26-ஆம் நாள் பெரியாரின் ஆணைப்படி எரித்தனர். அதற்காகவே மாநிலத்தில் ஆட்சி செய்த அன்றைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த, தேசிய அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின்படி திராவிடர் கழகத்தினருக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடுங்காவல் சித்ரவதைகளால் சிறையிலேயே இறந்துபோனவர்கள் 5 பேர். குற்றுயிராக வெளியே அனுப்பப்பட்டு ஒரு வாரகாலத்திற்குள் இறந்தவர்கள் 13 பேர். அதன்பின்னரும் சிறைவாசத் தாக்கத்தால் பலியானவர்கள் ஏராளம். ஆனாலும், தண்டனை விதிக்கப்பட்ட 3000 பேரில் ஒருவர்கூட மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்கவோ, பிணை கேட்கவோ இல்லை என்பதுதான் தியாக வரலாறு. இந்த வரலாற்றை திருச்சி செல்வேந்திரன் 2500 பக்கங்களில் நூலாகப் படைத்திருக்கிறார். தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களின் ஒத்துழைப்புடன் தயாரான இந்தப் புத்தகத்தை கோவை இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோயம்புத்தூரில் வெளியிட்டார். 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மூத்த தியாகிகள் சிலர் விழாவில் பங்கேற்றது புதிய தலைமுறையினருக்கு உத்வேகத்தை அளித்தது.
-ஆதிபகவன்
துணிச்சல்மிகு சாதனைக்கு தங்கப்பதக்கம்!
துணிவை ஆயுதமாகக் கொண்டது "நக்கீரன்'. அதிகாரத்தில் இருப்பவர்களின் மிரட்டல்கள், வழக்குகள், சிறைத்தண்டனை, கொடூரத் தாக்குதல்கள், உயிர்த் தியாகங்கள் இவற்றை அஞ்சாமல் எதிர்கொண்டு, சட்டத்தின் துணையுடன் இந்திய பத்திரிகையுலகிற்கே வழிகாட்டும் தீர்ப்புகளைப் பெற்றுத் தந்தது நக்கீரனின் வரலாறு. அதற்கு கிடைத்துள்ள அண்மை கவுரவம்தான் நமது ஆசிரியருக்கு பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் வழங்கியிருக்கும் "கோல்டு மெடல் விருது'.
பிஹைண்ட்வுட்ஸ் இணையதள நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த, சமூக அக்கறை மிகுந்த ஆளுமைகளுக்கு "கோல்டு மெடல்'’விருதுகள் வழங்கப்படுகிறது. "ஆறாவது பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள்’ வழங்கும் விழா', சென்னை வர்த்தக மையத்தில் டிசம்பர் 16-ஆம் தேதி நடைபெற்றது. பிரபலங்கள் நிறைந்திருந்த இந்த விழாவில், நமது நக்கீரன் ஆசிரியருக்கு "ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன்'’(உத்வேகத்தின் உயர்சின்னம்) என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நேர்மைமிகு மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் விருது வழங்க... ""2010-ல் தமிழக அரசு எனக்கு தந்தை பெரியார் விருது வழங்கியது. இன்று, வாழுகின்ற பெரியாரிடமிருந்து இந்த விருதைப் பெறுவதில் நான் பெருமை அடைகிறேன்'' என்று பெருமையுடன் கூறினார் நக்கீரன் ஆசிரியர்.
""முப்பதாண்டு கால அயராத உழைப்புதான் இந்த மேடையைத் தந்திருக்கிறது. இந்தத் தருணத்தில் "நக்கீரன்' குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன். இந்த விருது எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவிற்கு ஒரு மாபெரும் மனிதரிடம் இருந்து இதைப் பெறுகிறேன் என்பதும் முக்கியமானது. நல்லகண்ணு அய்யாவின் ஒப்பற்ற உழைப்புக்காகவே ஒவ்வொருநாளும் அவருக்கு விருது வழங்கலாம். ஒரு செய்தி நிறுவனம் இன்னொரு செய்தி நிறுவனத்தை கவுரவிப்பது மிகப்பெரிய விஷயம். பலவகையான செய்தி நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் நாம் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை பல ஏற்ற இறக்கங்களைத் தந்திருக்கிறது. "நக்கீரன்', தான் சந்தித்த ஒவ்வொரு செய்தியிலும் சவால்களை சாதனையாக்கி வருகிறது''’என்றார் நெகிழ்ச்சியுடன்.
-ச.ப.மதிவாணன்