Skip to main content

சிக்னல்!

ஆசிட் கொலைகள்!

திருவண்ணாமலை கிரிவலப் பாதை 14 கி.மீ. சுற்றளவுள்ளது. இதன் இருபுறமும் 1185 மரங்கள் உள்ளன. கிரிவலப் பாதையில் பக்தர்கள் பகலில் நடக்கும் போதும் மரங்களின் நிழலில் நடப்பார்கள்.

signal


இந்த மரங்களில் பல சமீபத்தில் பட்டுப் போயின. ""ஆசிட் ஊற்றி மரங்களைப் பட்டுப் போக வைக்கிறார்கள்'' என்ற சர்ச்சை எழுந்தது. இதனால், அரசு வேளாண்மை ஆராய்ச்சி மையப் பேராசிரியர்களை வரவழைத்து ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, ""எந்த ஒரு மரமும் ஆசிட் ஊற்றி அழிக்கப்படவில்லை. பூச்சிகள் தாக்கியதாலும் மரங்களின் மீது ஆணி அடித்ததாலும்தான் வாடியுள்ளன. வாடியவற்றுள் ஆறு மரங்களைக் காப்பாற்றி விட்டோம். மீதி 56 மரங்களைக் காப்பாற்ற முடியவில்லை'' என்றார்.

இதுபற்றி நம்மிடம் பேசிய ம.தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளரும் வழக்கறிஞருமான பாசறை பாபு, ""கச்சா எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் தாரை, மரங்களின் மீது ஊற்றினால், நீரை உறிஞ்சும் ஆற்றலை மரங்கள் இழந்துவிடும். பட்டுப் போய்விடும். இதைப் பசுமைத் தீர்ப்பாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்றார்.

விவரமான கோவில் ஊழியர் ஒருவர் நம்மிடம், ""கிரிவலப் பாதையை நூறு அடிச் சாலையாக மாற்றும் பணிகள் நடக்கின்றன. இதற்கு இடைஞ்சலாக இருக்கின்றன மரங்கள். மரங்களை அப்புறப்படுத்தினால் போராட்டங்கள் வெடிக்கும். அதனால்தான் கிரிவலப் பாதையில் மரங்கள் மீது கொதிக்கும் தாரை ஊற்றிச் சாகடிக்கின்றனர். மரங்களை சாகடிப்பவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யாரென எல்லாருக்கும் தெரியும்'' என்றார்.

-து.ராஜாடாஸ்மாக் இல்லை, பார் உண்டு!

ஒரு டாஸ்மாக் கடைக்கு இரண்டு "பார்'கள் என்பதும், ஒன்று அரசு அனுமதியோடு, மற்றொன்று மாமூல் அனுமதியோடு என்பதும் கடலூர் மாவட்டத்தில் சர்வ சாதாரணமாகி விட்டிருக்கிறது

signal


கடலூர் மாவட்டம் திட்டக்குடி, தொழுதூர், மங்களம்பேட்டை, வேப்பூர், மங்களூர் பகுதிகளில் "பார்' மாமூலால் காக்கி நிலையங்களில் கனத்த அறுவடை.

பெண்ணாடம் சிலுப்பனூர் சாலை, பொன்னேரி பகுதிகளில் அ.தி.மு.க. து.செ. மதிகோபியும், கட்சியில் எந்தப் பதவி இல்லாவிட்டாலும் செல்வாக்குப் பெற்ற ரவிக்குமாரும் அனுமதியில்லா பார்களை அட்டகாசமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மங்களூரில் டாஸ்மாக் கடையுடன் ஒரு பார் அரசு அனுமதியோடு இயங்குகிறது. சாமிதுரை என்பவர் சட்டமீறல் பார் ஒன்றை ஜெகஜோதியாக நடத்திக் கொண்டிருக்கிறார்.

ராமநத்தத்தில் காவல்நிலையம் அருகிலேயே வி.சி. பிரமுகர் மூக்குத்தி ரமேசும், டாஸ்மாக் ஊழியர் அரிராமனும், பார்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விருத்தாசலம் கலால் காக்கிகளுக்கும் காவல்நிலையத்திற்கும் நல்ல ஒப்படி.

விருத்தாசல வட்டம் மங்களம்பேட்டையிலும் கருவேப்பிலங்குறிச்சியிலும் காலை 8 மணிக்கே புறக்கடை வழியே டாஸ்மாக் விற்பனை தொடங்கிவிடுகிறது. நண்பகல் 12-லிருந்து இரவு 10 வரைக்கும் என்பதெல்லாம் இங்கே கிடையாது. காலை 8-லிருந்து இரவு 12 மணி வரை சரக்கு சப்ளை தாறுமாறாக நடக்கிறது.

திட்டக்குடி, ஆவினங்குடி, சொர்க்கவாடி ஆகிய ஊர்களில் டாஸ்மாக் கடைகள் கிடையாது. ஆனால் பார்களும் உண்டு, சரக்கும் உண்டு. மொத்தத்தில் கடலூர் மாவட்டம் "பார் ஊர்' மாவட்டமாகி மாறிவிட்டிருக்கிறது.

-சுந்தரபாண்டியன்கோடை விழாவா? சி.எம். பிறந்தநாளா?

TN-cm

பண்பாட்டின் வெளிப்பாடாகவும், மலைவாழ் மக்களின் கலைநிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் விழாவாகவும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விழாவாகவும் நடந்து கொண்டிருந்த ""ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி'' 2011இல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு வெறும் சம்பிரதாய விழாவாக மாறிப் போனது.

எப்போதும் மே மாத கடைசி வாரத்தில் தொடங்கும் விழாவை, 12.05.18 அன்று அவசர அவசரமாகத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. எப்போதும் ஐந்து நாட்கள் நடத்தப்படும் ஏற்காடு கோடை விழா இப்போதெல்லாம் இரண்டு நாள் விழாவாகக் குறைந்து போனது.

""முதலமைச்சருக்கோ அல்லது வேறு அமைச்சர்களுக்கோ எப்போது டைம் கிடைக்கிறதோ அந்த நாளில் கோடை விழாவை நடத்துகிறார்கள்'' என்ற குமுறல்கள் அதிகாரிகள் மத்தியில் இருப்பதைக் கேட்க முடிந்தது.

""மே 12 என்பது சர்டிபிகேட்படி முதலமைச்சரின் பிறந்தநாள். அந்தப் பிறந்தநாளில் கோடை விழாவை தொடங்கி வைக்க ஆசைப்பட்டார். அதை எவ்வளவு பரவசத்தோடு தன் பேச்சில் குறிப்பிட்டார் பார்த்தீர்களா?'' அ.தி.மு.க. நிர்வாகிகள் தொடக்க விழாவில் கமெண்ட் அடித்தார்கள்.

""ஏனிந்த மாற்றங்கள்?'' சேலம் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி அண்ணாதுரையிடம் கேட்டோம். ""இதுதான் சரியான சீஸன். பள்ளி மாணவர்களுக்கு இதுதானே விடுமுறை நாட்கள். மற்றபடி வேறு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை'' என்றார் அவர்.

-இளையராஜா
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்