பிரமாண்ட உலா!
சங்கரராமன் கொலை வழக்கிற்குப் பிறகு சங்கராச்சாரியார்களின் வெளியூர் பயணங்கள் அரிதாகவே அமைந்தன. தீர்ப்புக்குப் பிறகு வெளியூர் பயணங்களில் அக்கறை காட்டினாலும், ஜெயேந்திரரின் உடல்நலக்குறைவால் பயணங்கள் சாத்தியமாகவில்லை.
ஜெயேந்திரருக்கு முன்புவரை சங்கராச்சாரியார்களின் வெளியூர் பயணங்கள் எளிமையாகவே அமைக்கப்பட்டன. ஜெயேந்திரர் விசிட்டில் ஆடம்பரம் தலைகாட்ட ஆரம்பித்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் நித்யானந்தா, சத்குரு போன்றோர் சுவரொட்டிகள், வண்ண வண்ண ப்ளக்ஸ் பேனர்களால் கலக்கினர்.
ஆடம்பரச் சாமியார்கள் வரிசையில் இப்போது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரருக்கு பிரமாண்ட ப்ளக்ஸ் பேனர்கள் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
திருச்சி திருவானைக்காவல் கோயில் குடமுழுக்குக்காக திருச்சி மாம்பழச் சாலை, காவிரியாற்று மேம்பாலம் முழுக்க இருபுறமும் விஜயேந்திரரை வரவேற்று ஆளுயர ப்ளக்ஸ் போர்டுகள் அணிவகுக்கின்றன.
இந்த பிரமாண்ட வரவேற்புத் தடபுடல்கள் பற்றி நம்மிடம், ""ஜெயேந்திரருக்குப் பிறகு விஜயேந்திரருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்தவேண்டும் என்பதற்காகவே இவ்வளவு ஆடம்பரம் செய்கிறார்கள். காஞ்சி மகா பெரியவர் பாணியில் எளிமையாகத் தொண்டாற்ற வேண்டியவர், எதற்காக ஆடம்பர சாமியார்கள் வரிசையில் "உலா' வரவேண்டும்? இதை நான் காழ்ப்புணர்ச்சியால் சொல்லவில்லை. காஞ்சி மடத்தின்பால் கொண்ட, இந்துமதத்தின் மீது கொண்ட மரியாதையால் சொல்கிறேன்'' என்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி வழக்கறிஞர் பிரிவு கிஷோர்குமார்.
-ஜெ.டி.ஆர்.
அமைச்சர் கிழிப்பு!
ப்ளக்ஸ் பேனர் கிழிப்பு என்பது சாதாரணமாகப் போய்விட்ட விஷயம்தான் என்றாலும் தானும் இடம்பெற்ற அமைச்சரவையின் சகாக்கள் படம் போட்ட ப்ளக்ஸ் பேனர்களையே கிழித்தெறிந்து, ""இந்த மாவட்டத்தில் நான் சொல்வதும் செய்வதும்தான் கட்சியிலும் அரசிலும் நடக்கவேண்டும்'' என மிரட்டியுள்ளார் இராமநாதபுரம் மாவட்ட அமைச்சரான மணிகண்டன்.
எம்.பி. அன்வர்ராஜாவின் இல்லத் திருமண விழா, ஞாயிறன்று ராமநாதபுரத்தில் நடந்தது. இதற்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர், மற்ற அமைச்சர்களை வரவேற்று, அவர்கள் படம் போட்ட ப்ளக்ஸ் பேனர்களை வைத்திருந்தார்கள்.
அவற்றில் எந்தெந்த ப்ளக்ஸ் பேனர்களில் அமைச்சர் உதயகுமாரின் படம் இடம் பெற்றிருந்ததோ, அவற்றைக் கிழித்தெறிந்திருக்கிறது அமைச்சர் மணிகண்டன் தரப்பு. இதற்காக, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தன் கோபத்தைக் காட்டியிருக்கிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
""அமைச்சர் மணிகண்டன்தான் முதலில் மா.செ.யாக இருந்தார். அதைப் பறித்து ஆர்.பி.உதயகுமாரின் உறவினரான முனியசாமியிடம் கொடுத்துவிட்டார்கள். அதோடு, மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் 384 பேருக்கும், சத்துணவுப் பணியாளர்கள் 220 பேருக்குமான நியமனத்தில் முன்னாள் மா.செ.யும் இந்நாள் மா.செ.யும் லிஸ்ட்டை கொடுத்து நெருக்கடியும் கொடுத்திருக்கிறார்கள். அதனால் அந்த நியமனத்தையே நிறுத்த வைத்துவிட்டாராம் அமைச்சர் உதயகுமார். "இன்னொரு மாவட்ட அமைச்சர் இங்கே எதுக்கு மூக்கை நுழைக்கிறார்' என்ற கோபத்தில்தான், அமைச்சர் உதயகுமார் படங்கள் உள்ள போஸ்டர்களை தேடித்தேடி கிழித்திருக்கிறார்கள்'' என்கிறார்கள் அ.தி.மு.க.வினரே!
-நாகேந்திரன்
போதை விவசாயம்!
"மலைகளின் இளவரசி' என்று போற்றப்படும் கொடைக்கானல் இன்றைக்கு போதை உற்பத்தியாளர்களின், போதை விற்பனையாளர்களின் புகலிடமாக மாற்றப்பட்டுவிட்டது.
கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலோர் இயற்கை எழிலை ரசிப்பதைக் காட்டிலும், "போதைக்காளான் எங்கே கிடைக்கும்? கஞ்சா எங்கே கிடைக்கும்' என்று தேடித்தேடி வாங்கி சாப்பிட்டு, மிதப்பதைக் காணமுடிகிறது.
"கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் பல இடங்களில் கஞ்சா பயிர் செழிப்பாக வளர்ந்துகொண்டிருக்கிறது' என்ற ரகசியத் தகவல்கள் கொடைக்கானல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராஜசேகருக்கு வந்தது.
தனது குழுவோடு பள்ளங்கிக் கோம்பையில் உள்ள விவசாயி மூர்த்தியின் தோட்டத்திற்குள் புகுந்தார் இன்ஸ் ராஜசேகர். அந்தத் தோட்டத்தில் ஐந்து அடி உயரத்தில் கஞ்சா செடிகள் வளர்ந்து நின்றன.
அத்தனை செடிகளையும் பிடுங்கியதோடு, கஞ்சா விவசாயியையும் கைது செய்தார் இன்ஸ்பெக்டர்.
இதேபோல கீழ்மலைப் பகுதியில் உள்ள கிழான வயல், கோம்பைக்காடு, மஞ்சம்பட்டி, மூங்கில்பள்ளம் உள்ளிட்ட இடங்களில் ஊடுபயிராக கஞ்சா செடிகள் விளைந்து அறுவடையாகி பக்குவப்படுத்தி விற்பனைக்கு அனுப்பப்படுவதாக மக்கள் கூறுகிறார்கள். காவல்துறைக்கு புகார்களும் போகின்றன.
அவற்றைத் தடுக்க எந்த முயற்சியையும் காவல்துறையினர். காரணம்? மாமூல் என்கிறார்கள்.
-சக்தி