எம்.பி. வேட்பாளர்!

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் பாராளுமன்றத்திற்கான வேட்பாளர்களை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டன.

signal"புதுச்சேரி காங்கிரஸின் கோட்டை. பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதி. எனவே நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தல் பணிகளை உடனே துவக்கலாம்'' என்று பச்சைக்கொடி அசைத்துள்ளார் முதலமைச்சர் நாராயணசாமி. புதுச்சேரிக்கான மேலிடப் பார்வையாளர் சஞ்சய்தத் அடிக்கடி வருகிறார், ஆலோசனைகள் நடத்துகிறார். புதுச்சேரியில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். டில்லி அரசியலில் ஆர்வமுள்ள சபாநாயகர் வைத்தியலிங்கம், எம்.பி. வேட்பாளர் என்ற பேச்சு "கை' வட்டாரத்தில் கலகலப்பாகப் பேசப்படுகிறது.

தி.மு.க.வும், எம்.பி. எலெக்ஷனில் தீவிரம் காட்டுகிறது. காரைக்கால் மாவட்ட தி.மு.க. சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதைத்தொடர்ந்து புதுச்சேரி வடக்கு மாநில ஆலோசனைக் கூட்டம் எம்.பி. சிவகுமார் தலைமையில் நடந்தது. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு என பலரும் சிறப்புரை வழங்கினர்.

Advertisment

""மத்திய முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு புதுவையில் மருத்துவக் கல்லூரி இருக்கிறது, ஸ்டார் ஹோட்டல் இருக்கிறது. இந்த வழியைக் கடக்கும்போது தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட கழகத்தின் வி.ஐ.பி.கள் இந்த ஹோட்டலில்தான் ரிலாக்ஸ் ஆகிறார்கள். ஜெகத்துக்கு இங்கே செல்வாக்கும் இருக்கிறது'' என்கிறார் புதுவை பிரமுகர் ஒருவர்.

"எம்.பி. பதவியைக் கைப்பற்றினால்தான் அடுத்த தேர்தல்வரை கட்சியைக் கரையேற்ற முடியும் என கருதுகிறார் முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி. என்.ஆர்.காங்கிரஸின் வேட்பாளராக மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியின் நிர்வாகி நாராயணசாமியை களமிறக்கப் போகிறார் ரங்கசாமி' என்கிறது என்.ஆர். காங்கிரஸ் வட்டாரம்.

இரண்டு மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகிகள் மோதினால்...? புதுவை களை கட்டும்!

Advertisment

-சுந்தரபாண்டியன்

ஹைடெக் திருடர்!

signalநெல்லை மாவட்டம் சங்கரன்கோயிலைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனும் சங்கரும் தங்கள் குடும்பத்தினரோடு குருவாயூருக்குச் சென்றார்கள்.

தரிசனம் முடிந்து குருவாயூர் எக்ஸ்பிரஸில் நெல்லைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். கோட்டயம்-திருவனந்தபுரத்திற்கு இடையில் ராதாகிருஷ்ணனின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனை திருடிவிட்டார்கள்.

டி.டி.ஆரிடம் புகார் செய்தார் ராதாகிருஷ்ணன். அவரோ ஒரு நம்பரைக் கொடுத்து அதில் புகார் செய்யச் சொன்னார். அந்த எண்ணில் வந்த குரலோ, ""நீங்க திருநெல்வேலி போனதும் அங்கே உள்ள ரயில்வே போலீஸார்கிட்ட புகார் செய்யுங்கள்'' என்றது. நெல்லை, பிறகு அங்கிருந்து திருவனந்தபுரம் என புகார் பயணம் செய்தது.

ஊர் திரும்பிய ராதாகிருஷ்ணன், சும்மா போட்டுப் பார்ப்போமே என்று தொலைந்த போனுக்கு தொடர்புகொண்டார். எதிர்முனையில் ஓரளவு தமிழறிந்த மலையாளி பேசினார். ""ஆமாடா நின்டே செல்போன் என்ட்டேதான் இருக்கு... திரும்ப வேணுமோ... என்ட்ட பேங்க் அக்கவுண்ட் நம்பரை அனுப்புறேன்... அதில் ஏழாயிரம் ரூவா போடு.... நம்புடா, பணம் கிடைச்சதும் நின்ட செல்போனை அனுப்புறேன்'' என்றார்.

சொன்னபடியே இடுக்கி மாவட்டம் தொடுபுழா நகரிலுள்ள ஃபெடரல் வங்கிக் கணக்கு எண்ணையும், ஐ.எப்.எஸ்.சி. எண்ணையும் அனுப்பிவைத்தார் அந்த மலையாளி ஆசாமி.

""என்ன செய்ய முடியும்! திருட்டுப்பயல் செல்போனை திருடிவிட்டு அதற்கு என்னிடமே அபராதமும் வாங்கியிருக்கிறான் ஜிஜியோ ஜோசப் என்ற அந்த மலையாளி. நான் ஒரு வியாபாரி... முக்கியமான டாகுமெண்ட் விவரமெல்லாம் அந்தப் போனில் உள்ளதே... அனுப்பித் தொலைத்தேன்'' பரிதாபமாகச் சொன்னார் ராதாகிருஷ்ணன்.

கொல்லம், திருவனந்தபுரம் ரயில் திருடர்களுக்கு இப்போது இது ஒரு சிறந்த தொழிலாகிவிட்டதாம்.

-பரமசிவன்signal

நிர்மலா ரசிகர்!

மனிதர்கள் தினுசு தினுசாக உள்ளனர். அன்பழகனின் டிசைனும் ஒரு தினுசானதே. உசிலம்பட்டியில் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் அன்பழகன், மதுரை சிறையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு நிர்மலாதேவியை அழைத்து வரும்போதெல்லாம், அவரும் தவறாமல் வந்துவிடுவார். நீதிமன்ற வளாகத்தில் நிர்மலாதேவியைப் பார்ப்பதும், வழக்கறிஞர்களிடமும் செய்தியாளர்களிடமும் பேசுவதுமாக இருக்கும் அன்பழகனின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடமளிப்பதாக இருந்தது. உளவாளியாக இருப்பாரோ என்ற சந்தேகத்துடன் மீடியாக்கள் அவரை கேள்வி கேட்டபோது... முதலில் தயங்கிய அன்பழகன், பிறகு தன்னைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

""டி.வி.யிலும் செய்தித்தாளிலும் நிர்மலாதேவியைப் பார்த்தே அவருடைய ரசிகன் ஆகிவிட்டேன். நியூஸில் நிர்மலாதேவியைக் கெட்டவராகக் காட்டும் போதெல்லாம் என்னையும் அறியாமல் கண் கலங்குவேன். இந்த உலகத்தில் நான் ஒருவன் மட்டுமே நிர்மலாதேவியின் ரசிகன் என்று நினைத்துவிடாதீர்கள். தமிழகம் முழுவதும் அவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். சிலரால்தான் அவர் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கிலிருந்து அவர் விடுதலை ஆகவேண்டும் என்று நான் பிரார்த்திக்காத நாள் இல்லை''’என்றவர், நீதிமன்றத்திலிருந்து நிர்மலாதேவி போலீஸ் வேனில் கிளம்பியபோது நம்மிடம், ""நான் ஒரு கட்சியின் உசிலம்பட்டி நகரச்செயலாளராகவும் இருக்கிறேன்''’என்றார் பெருமிதத்துடன். ஆனால் அக்கட்சியோ, ""அன்பழகன் ஒரு விளம்பரப்பிரியன்'' என்கிறது.

-சி.என்.இராமகிருஷ்ணன்