எடப்பாடியார் பேரவை! ஓ.பி.எஸ். நற்பணி மன்றம்!
ஓ.பி.எஸ்.சின் சொந்த மாவட்டமான தேனியில் ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக, எப்போதும் ஒரு கோஷ்டி சீவிய கொம்புகளோடு சிலிர்த்துக் கொண்டிருப்பது வழக்கம்.
தங்க தமிழ்ச்செல்வனின் இடத்தை இப்போது கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார். ஓ.பி.எஸ். கோஷ்டிக்கு எதிராக, எடப்பாடி கோஷ்டியை உருவாக்கி, அதற்குத் தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருக்கிறார் ஜக்கையன்.
இரண்டு மாதம் முன்பு ஜக்கையன் தளபதிகளில் ஒருவரான கம்பம் கே.எம்.பட்டி பால்பாண்டி ""எடப்பாடியார் பேரவை'' என்ற பெயரில் மெகா சைஸ் போஸ்டர் அடித்து தேனி மாவட்டம் முழுக்க ஒட்டினார். அந்தப் போஸ்டர்களில் ஓ.பி.எஸ். படம் இல்லாததை கண்ட ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எடப்பாடியார் பேரவைப் போஸ்டர்களைத் தேடித் தேடிக் கிழித்தார்கள். ஆனாலும் அசரவில்லை பால்பாண்டி. எடப்பாடியார் பேரவை சார்பில் தீபாவளி வாழ்த்துக் கூறி, பிளக்ஸ் பேனர்களை ஆங்காங்கே பளிச்சிடச் செய்தார்.
எதிர் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியது ஓ.பி.எஸ். கோஷ்டி. ""தாயின் தலைமகனாரின் நற்பணி இயக்கம்'' என்ற பெயரில் தேனி மாவட்டம் முழுதும் புதிய போஸ்டர்களை ஒட்டினார் ராஜ்மோகன் என்பவர்.
இந்த ஓ.பி.எஸ். நற்பணி இயக்கம் போஸ்டர்களில் ஓ.பி.எஸ். படமும் எடப்பாடி படமும் கூடவே ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் படமும் பெரிதாக போட்டிருந்தார்கள்.
இந்த ""தாயின் தலைமகனாரின் நற்பணி இயக்கம்'' கஜா புயலால் பாதிக்கப்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடிக்கு அருகிலுள்ள கல்லாயங்குடி கிராமத்தை தத்தெடுத்து வீடு வீடாக நிவாரண உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறது.
-சக்தி
எழுதி முடித்த தேர்வு! மீண்டும் எழுதும் மாணவர்கள்!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 538 உறுப்புக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றின் தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்காக 21 மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. தற்போது மாணவர்களுக்கு ஏழாவது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்வில் வினாத்தாள் தயாரிப்பில் காட்டிய மெத்தனத்தின் விளைவாக நவ.2ஆம் தேதி மின்னணுவியல் தேர்வுக்கு, சென்ற வருட தேர்வில் கொடுக்கப்பட்ட அதே வினாத்தாளையே கொடுத்து விட்டார்கள். இந்த செய்தி வெளியில் கசிந்ததால் தேர்வு 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்தப் பிரச்சனை முடிவதற்குள் புதியதொரு பிரச்சனையும் கிளம்பியது. அதாவது விதிகளுக்கு புறம்பாக தேர்வு முடியாமலேயே விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கிவிட்டன. அதேபோல், திருத்தப்படும் பாடத்திற்கு சற்றும் தொடர்பில்லாத பேராசிரியர்களிடம் இந்தப் பணிகள் ஒப்படைக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் மீண்டும் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு செல்லவேண்டிய நிலை.
இதுகுறித்து பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசியபோது, “""புயல் காரணத்தால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கியமான கடினமாக தேர்வுகள் வரும் சமயத்தில் எழுதிமுடித்த தேர்வுகளை திரும்பவும் எழுதச் சொன்னால் எப்படி முடியும். பல்கலைக்கழகம் செய்த தவறுக்கு மாணவர்கள் என்ன செய்ய முடியும்? மேலும், நவ.27ஆம் தேதி கம்ப்யூட்டர் நெட்வொர்க் தேர்வு, 28ஆம் தேதி மின்னணுவியல் தேர்வு என விடுமுறை இல்லாமல் தேர்வுக்கு எப்படி தயாராக முடியும்?'' என கேள்வியெழுப்புகின்றனர்.
இந்தத் தொடர் பிரச்சனைகள் குறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியான வெங்கடேசனைத் தொடர்புகொண்டபோது, ""சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்வோம்'' என்றார்.
-அ.அருண்பாண்டியன்
குமுறும் டாஸ்மாக் ஊழியர்கள்! புலம்பும் அ.தி.முக. தொண்டர்கள்!
""ஆளுங்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான "நமது அம்மா'வை டாஸ்மாக் ஊழியர்களான நாங்கள் அனைவரும் கட்டாயம் வாங்க வேண்டும்...'' என உத்தரவிடுகிறார் நீலகிரியின் குன்னூர் தொகுதி எம்.எல்.ஏ சாந்தி ராமு .
""அது கூட பரவாயில்லைங்க.. மூணு மாசத்துக்கான பணத்தை முன்கூட்டியே கொடுக்க வேண்டும் என்று எங்களை மிரட்டி வாங்குறாரு சார். சரி, இவரு தொகுதியில கேட்டாக் கூட பரவாயில்லை. ஊட்டி, கூடலூர் தொகுதிகளில் உள்ள அனைத்து டாஸ்மாக் ஊழியர்களையும் நமது அம்மா பேப்பரை வாங்கச் சொல்லி மெரட்டுறாருங்க. அவரே நீலகிரி முழுக்க நேராவே வர்றாருங்க. பேப்பரை தேடி வாங்கி படிக்கணுங்க. இப்படி மிரட்டியா படிக்க வைப்பீங்க. யாரும் ஒண்ணும் கேட்க முடியலை சார்..'' என குமுறுகிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள்.
சாந்திராமுவோட அராஜகம் இது மட்டும் இல்லைங்க. உண்மையான கட்சிக்காரங்களை எல்லாம் ஒதுக்கிட்டு கட்சிக்குள் நேற்று வந்தவங்களுக்கு எல்லாம் அவரே அரசு வேலை போட்டு கொடுக்கிறார்.
ஊட்டி, கூடலூர் தொகுதிகளிலும் சாந்தி ராமு தலையீடுதான் அதிகம். கட்சிக்குள்ள தே.மு.தி.க.வில் இருந்து வந்த கே.கே.மாதன்தான் அரசு ஒப்பந்ததாரராக ஆக்கப்பட்டு எல்லா வேலைகளையும் அவர்தான் எடுத்து செய்கிறார். சாந்தி ராமுவே தே.மு.தி.க.வில் இருந்து வந்தவர்தானே...'' என புலம்பித் தீர்க்கிறார்கள் நீலகிரி அ.தி.மு.க.வினர்.
-அ.அருள்குமார்