சிறைச்சாலைக் கொண்டாட்டம்!
சென்னை புழல் சிறைக்கைதிகள், அதிகாரிகளைக் "குளிப்பாட்டி' சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் என்று சமீபத்தில் புகைப்படங்களோடு செய்திகள் வெளியாகி மக்களின் புருவங்களை உயரவைத்தன.
சில வருடங்களுக்கு முன்பு திருச்சி மத்திய சிறையில் பட்டறை சுரேஷ் என்ற ரவுடி, தனது பிறந்தநாளை வெகு ஆடம்பரமாகக் கொண்டாடினான். சிறைக்குள் நடந்த ரவுடியின் பிறந்தநாள் விழாவினை வாழ்த்தி திருச்சி மாநகரம் முழுக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இப்போது அதனிலும் ஆடம்பரமாக பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்று திருச்சி மத்திய சிறைக்குள் நடந்திருக்கிறது.
20-10-18 அன்று திருச்சி ஏவிஎம் ஃபைனான்ஸ் ஊழியர்களைத் தாக்கி, ஒரு கோடி ரூபாயைக் கொள்ளையடித்துக்கொண்டு போனது ஒரு கும்பல். இந்தக் கொள்ளையை நடத்திய அப்துல் இஸ்மாயில், முகமதுரபீக், ஜாகிர் உசேன், முகமது சமீர், சாகுல் அமீது ஆகிய ஐந்துபேரையும் 5-11-18 அன்று கைது செய்து, தனிப்படை போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த ஐந்து வழிப்பறிக் கொள்ளையர்களில் ஒருவனுடைய மகனது பிறந்தநாளைத்தான் திருச்சி சிறையில் உள்ள அத்தனை கைதிகளுக்கும் வடை, தேநீர், பீடிக்கட்டுகள் வழங்கி... கேக் வெட்டி, ஐந்து கொள்ளையரும் கொண்டாடியுள்ளனர். இந்தப் பிறந்தநாள் விழாவில் அதிகாரிகளுக்கு, வேறு மாதிரியான உபசரிப்புகளும் அன்பளிப்புகளும் நடந்தேறியுள்ளன.
-ஜெ.டி.ஆர்.
காப்பகக் களியாட்டம்!
திருவண்ணாமலை நகரில் திண்டிவனம் சாலையில் மெர்ஸி காப்பகம் உள்ளது. அனாதைக் குழந்தைகளுக்கு உணவும் உறைவிடமும் கொடுத்து, படிக்க வைத்துப் பராமரிக்கும் சேவையை செய்யும் மெர்ஸி காப்பகத்தை தற்போது லூபன்குமாரும் அவர் மனைவி மெர்ஸியும் நடத்துகிறார்கள். இதில் இப்போது 47 சிறுமிகள் உள்ளனர். அனைவரும் வயதுக்குவரும் வயதினர்.
இந்தச் சிறுமிகளிடம், காப்பக நிர்வாகி லூபன்குமார் தவறாக நடந்துகொள்கிறார். மனைவி மெர்ஸி அவருக்குத் துணையாக செயல்படுகிறார் என்று அதிகாரிகளுக்கு புகார் வந்தது. புகாரை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் கவனத்துக்கு கொண்டுசென்றனர்.
காப்பகத்திற்கு ஆய்வுக்குச் சென்ற ஆட்சியர், காப்பகத்தின் நிலையைப் பார்த்ததும் உடனே மாணவிகள் அனைவரையும் வேறு காப்பகத்திற்கு மாற்றினார். அந்த மாணவிகளிடம் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
""வேண்டாம்... வேண்டாம்னு சொன்னாலும் லூபன் சார் கட்டாயப்படுத்தி, சோப்புப் போட்டு எங்களைக் குளிப்பாட்டுவார். அசிங்கமா நடந்துகொள்வார். அந்த மேடமும், "சார் இஷ்டத்துக்கு எல்லாரும் நடக்கணும்'னு சொல்லுவார்'' போட்டு உடைத்தார்கள் மாணவச் சிறுமிகள்.
அந்தச் சிறுமிகளிடம் லூபன்குமார் அத்துமீறி, ஆபாசமாக நடந்துகொண்டிருப்பது மருத்துவ சோதனையிலும் வெளிப்பட்டிருக்கிறது.
விளைவு...?
நன்னடத்தை அலுவலர் சித்ரபிரியாவின் புகாரை ஏற்று மெர்ஸி காப்பக லூபன்குமார், மனைவி மெர்ஸி, உதவியாளர் மணவாளன் மூவரையும் போலீஸ் கைது செய்திருக்கிறது.
""உளவுத்துறை காக்கி ஒருவருக்கு இது தெரியும். தெரிஞ்சதாலதான் மாதா மாதம் மொய் வாங்கியிருக்கிறார்'' என்கிறது தி.மலை போலீஸ் வட்டாரம்.
-து.ராஜா
ஏழைகளின் திண்டாட்டம்!
மேடை போட்டு, விழா எடுத்து, பெருமுளைக் கிராமத்தில் 260 ஏழை-எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டாட்சியர் இருதயமேரி.
அந்தப் பட்டாக்களில் தமிழக அரசின் இலச்சினையான கோபுர சீல் போடப்பட்டிருந்தது. தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் என சகலரும் கையெழுத்திட்டிருந்தனர். இது நடந்தது 2013-ஆம் ஆண்டு.
""அதிகாரிகள் காட்டின, சொன்ன சர்வே இடத்துக்குப் போனால் அந்த 5 ஏக்கர் இடத்தை ஏற்கனவே சிலர் வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செஞ்சிருந்தாங்க. அந்த பட்டாக்களுக்காக எங்க ஒவ்வொருத்தருகிட்டயும் 20 ஆயிரம், 25 ஆயிரம்னு லஞ்சம் வாங்கிட்டுத்தான் கொடுத்தாங்க. ஆக்கிரமிப்பை இதோ அகற்றுவோம், நாளைக்கு அகற்றுவோம்னு ரெண்டு வருஷமா இழுத்தடிச்சாங்க. அப்புறம் அந்தத் தாசில்தாரம்மா உள்பட சிலர் ரிடையர்டு ஆயிட்டாங்க, டிரான்ஸ்பர் ஆயிட்டாங்க. புதுசா வந்த தாசில்தாருகிட்ட கேட்டால், "உங்களுக்கு கொடுத்தது எல்லாம் போலி பட்டா'னு சொல்லி எங்க தலையில குண்டைத் தூக்கிப் போட்டுட்டாரு'' நம்மிடம் புலம்பினார்கள் இலஞ்சியும், லட்சுமியும், சரோவும்.
இந்த மக்களின் பட்டாக்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒ.செ.யான சுரேந்தர் நம்மிடம், ""வட்டாட்சியர் அலுவலகமே போலி பட்டா கொடுக்கலாமா? இதற்காக பல போராட்டங்களை நடத்தினோம். வட்டாட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தியபோது திட்டக்குடி தாசில்தார், சார்-ஆய்வாளர் அமுதா, நில அளவையாளர்கள் தமிழ்வாணன், நபிஷாபேகம் எல்லாரும் எங்களைச் சமாதானப்படுத்தினர். சீக்கிரம் ஒரிஜினல் பட்டா கிடைக்குமென்றார்கள். பத்து மாதமாகி விட்டது கிடைக்கவில்லை'' வேதனையைக் கொட்டினார் த.வா.க. சுரேந்தர்.
-எஸ்.பி.சேகர்