"ஆர்' குரூப் ரத்தங்கள்!
ரஜினி பிறந்தநாள் விழா மற்றும் நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸாக உள்ள "2.ஓ' படத்திற்கான டிக்கெட் விற்பனை தொடர்பான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் வியாழக்கிழமை (நவ. 22) நடந்தது.
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் செந்தில்குமார் பேசுகையில், ""நமக்குள் ஓடும் ரத்தம் வேண்டுமானால் வேறு வேறு குரூப் ஆக இருக்கலாம். ஆனால் நாமெல்லாம் என்றைக்குமே "ஆர்' (ரஜினிகாந்த் என்பதை மறைமுகமாக "ஆர்' என்று குறிப்பிட்டார்) குரூப் மட்டும்தான். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாகச் சொன்ன பிறகு வரக்கூடிய அவருடைய முதல் பிறந்தநாள் இது. எல்லோரும் கருத்து வேறுபாடுகளை மறந்து டிசம்பர் 12-ஆம் தேதியன்று, அவருடைய பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். விரைவில் வெளியாக உள்ள "2.ஓ' படம் வெற்றிபெற பாடுபடுவோம்'' என்றார்.
மன்றத்தின் சேலம் மாவட்ட இணைச்செயலாளர் பழனிவேலு பேசுகையில், ""பத்து ரூபாய் நாணயம் செல்லும் என அரசு சொல்கிறது. ஆனால், மக்கள் அதை ஏற்கவில்லை. புழக்கத்தில் இல்லாமல் செய்துவிட்டனர். அதேபோல், இப்போதுள்ள அரசாங்கமும் அடுத்த முறையும் ஆட்சி அமைப்போம் என்று சொல்லி வரலாம். ஆனால், மக்கள் அடுத்த முதல்வர் ரஜினிதான் என்று மனதளவில் முடிவெடுத்து மவுனப்புரட்சிக்கு தயாராகி விட்டனர்'' என்றார்.
நிகழ்ச்சி நடந்த கல்யாண மண்டபம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. "தமிழகத்தில் ரஜினிதான் அடுத்த முதல்வர்' என்று சொல்லும்போது வழக்கம்போல் ரசிகர்கள் கரவொலி எழுப்பினர்.
-இளையராஜா
மேடையின்றி ஒரு பொதுக்கூட்டம்!
தி.மு.க.வின் செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னாவை அழைத்து பொள்ளாச்சியிலும் இருகூரிலும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு, பொள்ளாச்சி துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்தார்கள் கோவை தெற்கு புறநகர் மாவட்ட தி.மு.க. இளைஞரணியினர்.
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் அனுமதி கொடுத்தது.
எப்படி?
"பொதுக்கூட்டம் நடத்தலாம், ஆனால் மேடை அமைக்கக்கூடாது' என்ற கண்டிஷனோடு அனுமதி கொடுத்தார்கள்.
""பொதுக்கூட்டத்தை மேடையமைக்காமல் எப்படி நடத்துவது? அதிகாரிகளுக்கு இது தெரியாதா? தெரியும். தமிழன் பிரசன்னாவை பேசவிடக்கூடாது என்பது ஆளும்கட்சியினர் திட்டம். அவர்களுடைய வற்புறுத்தலால் இப்படியெல்லாம் கோமாளித்தனமான கண்டிஷன்களையெல்லாம் போட்டார்கள்'' என்கிறார் கோவை தெற்கு புறநகர் மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளர் பொள்ளாச்சி நவநீதிகிருஷ்ணன்.
இரண்டு கூட்டங்களுக்கும் உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்றார்கள் தி.மு.க.வினர். ஆனால் மழை காரணமாக பொள்ளாச்சிக் கூட்டம் ரத்தாகிவிட்டது. இருகூர் பொதுக்கூட்டத்திற்காக கோவை வந்த தமிழன் பிரசன்னாவை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது போலீஸ். ஆனாலும் சாதுர்யமாக செயல்பட்டு, கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிவிட்டார் அவர்.
-அருள்குமார்
இலவசத்தோடு ஒரு ஆலோசனைக் கூட்டம்!
பாராளுமன்றத் தேர்தலுக்காக போளூர் சட்டமன்றத் தொகுதியில் பூத் கமிட்டிகள் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தை 17-11-18 அன்று திருவண்ணாமலையில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடத்தினார்கள் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வினர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும், மாவட்டச் செயலாளர் தூசிமோகனும் கலந்துகொண்டார்கள்.
பலரும் பல யோசனைகளை வாரி வழங்கிக்கொண்டிருந்த வேளையில், கூட்டத்தின் ஒரு பகுதியில் லேசான சலசலப்பு ஏற்பட்டது. ""இருங்கப்பா... ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன். சித்திரம் எழுதுவது முக்கியம்தான்... ஆனால் சுவர் இருந்தால்தானே எழுத முடியும்?'' என்றபடி எழுந்த மாவட்ட விவசாயப் பிரிவு து.செ. சூளை கண்ணன், கனத்த வேதனையோடு பேசினார்.
""தீபாவளிக்காக பணம், வேட்டி-சட்டை, இனிப்பு, பட்டாசுப் பாக்கெட்டுகள் என்று கி.செ., ஊ.செ., ப.செ., ந.செ., ஒ.செ., வ.செ.க்களுக்கு தாராளமா கொடுத்திருக்கீங்க. நாங்களும் கட்சிக்காரங்கதானே எங்களுக்கு ஏன் தரலை? நாங்க மட்டும் இளக்காரமா? வீட்ல பொண்டாட்டி புள்ளைங்க... "ஏன் உங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் தரலை'னு எளக்காரமா கேட்டு காறித் துப்புறாங்க''...
விவசாயப் பிரிவு து.செ.யின் இந்தப் பேச்சுக்கு ஏகப்பட்ட கரவொலி.
திகைத்துப்போன அமைச்சரும், மா.செ.யும் ""மனசுல ஒண்ணும் வச்சுக்கிறாதீங்க. பொங்கலுக்கு கட்டாயம் தருவோம்'' என்று உறுதிமொழி அளித்தார்கள்.
அதன்பிறகே, ஆலோசனைக் கூட்டம் உற்சாகமாகச் சென்றது.
-து.ராஜா