ஓசியில் கிடைக்குமா?
திருவண்ணாமலை நகரில் மாவட்ட அ.தி.மு.க. அலு வலகத்துக்கு அருகில் அ.தி.மு.க. பிரமுகர் விஜய் என்பவரது ஹோட்டல் விஜய் பார்க் உள்ளது. "கெட்டுப்போன அசைவத்தை சமைத்து வாடிக்கையாளர்களிடம் தந்து பணமாக்குபவர்கள், கேள்வி கேட்டால் மிரட்டுவார்கள்...' என்று ஹோட்டல் விஜய் பார்க் மீது பல புகார்கள் சென்றும் உணவுத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நகரில் உள்ள மற்றொரு பிரபல ஹோட்டல் நிர்வாகம், விஜய் பார்க் ஹோட்டலில் அனுமதி பெறாமல் சரக்கு விற்பனை செய்வதை எப்படி தடுக்கலாம் என யோசித்தது. "தீபத் திருவிழாவின்போது ஹோட்டல்களும், லாட்ஜ்களும், தங்களிடமுள்ள அறைகளில் பாதியை இலவசமாக காவல்துறை, நகராட்சிக்கு தந்துவிடவேண்டும்' என்பது எழுதப்படாத சட்டம். அதன்படி இந்த ஆண்டு காவல்துறை அதிகாரிகள், அறைகளும், அறையில் தங்குபவர்களுக்கு சாப்பாடும் கேட்க அந்த பிரபல ஹோட்டலுக்குச் சென்றனர். "நாங்கள் லைசென்ஸ் வாங்கி ஹோட்டல்ல சரக்கு விற்கிறோம், பார் நடத்தறோம். ஆனா லைசென்ஸ் வாங்காம சரக்கு விற்கும் ஹோட்டலால் எங்களுக்கு பயங்கர நஷ்டம். அதப்பத்தி சொன்னா போலீஸ்ல கண்டுக்கல. இப்ப ரூம் தாங்கன்னு வந்து கேக்குறீங்க. நீங்க கேட்கறதை நாங்க செய்யறோம், பதிலுக்கு நீங்களும் உதவி செய்ங்க' எனக் கேட்டது அந்த ஹோட்டல் நிர்வாகம். "நீங்க சும்மா ஒரு புகார் தாங்க... மீதிய நாங்க பார்த்துக்கறோம்' என்றனராம் அதிகாரிகள். அதன்பின் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்ட 3 பக்க புகார் கடிதம் கலெக்டருக்கு மொட்டை பெட்டிஷனாக தரப்பட்டுள்ளது.
அந்த புகார் கடிதத்தின் அடிப்படையில் ஹோட்டல் விஜய் பார்க்கில் கடந்த நவம்பர் 15-ந் தேதி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரான மருத்துவர் செந்தில்குமார் தலைமையிலான டீம் சோதனையில் ஈடுபட்டது. கெட்டுப்போன 15 கிலோ மாமிசத்தோடு, தயார்செய்து விற்பனையாகாமல் மீந்துபோன சிக்கன், மட்டன் கிரேவிகளையும் மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
-து. ராஜா
வாரியங்கள் வாய்க்குமா?
புதுச்சேரியில் காங்-தி.மு.க. கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என்.ஆர்.பாலன், ஜெய மூர்த்தி, தீப்பாய்ந்தான், தனவேலு, விஜய வேணி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, கீதா ஆனந்தன் ஆகியோருக்கு வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டு பதவி நீட்டிப்பு விவகாரத்தில் முதலமைச்சர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் முட்டல் மோதல்கள் நிகழ்ந்தன.
இந்நிலையில் மீதமுள்ள 26 வாரியங் களுக்கான பட்டியலை ஆளும் காங்கிரஸ் தயாரித்து அந்தப் பட்டியலை காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பியதோடு, காலியாக உள்ள 26 வாரியங்களுக்கும் தலைவர்கள் நியமிக்கலாமா…என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் அனுமதி கேட்கப் பட்டுள்ளதாம். அனுமதி கிடைத்த பிறகு கிரண்பேடிக்கு பட்டியலை அனுப்பலாம் அல்லது அனுமதி கிடைக்கவில்லையென்றால் கிரண்பேடி மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்ளலாம் எனும் மன நிலையில் காங்கிரஸ் உள்ளதாம்.
"ஏற்கனவே பல அரசு துறைகளில் ஊழியர்களுக்கு மாதக்கணக்கில் ஊதியம் வழங்கப் படவில்லை, பல திட்டங்களை நிறைவேற்று வதற்கு நிதி ஆதாரம் இல்லாமல் அரசு தள்ளாடுகிறது. இந்தச்சூழலில் மேலும் 26 வாரியங்களுக்கும் தலைவர்களை நியமித்தால் அவர்களுக்கு கார் வாங்கும் செலவே ஒன்றரைக் கோடிக்குமேல் ஆகும். அவர்களுக்கான அலுவலக செலவு, காருக்கான டீசல், ஓட்டுநர்கள், உதவியாளர்கள், பணியாளர்கள் ஊதியம், சிற்றுண்டிச் செலவுகள் என மாதத்துக்கு சுமார் 25 லட்சம் என ஆண்டுக்கு 3 கோடிக்கு மேல் செலவாகும். நிதி நெருக்கடியான நிலை யில் இது தேவையா!? தனது கட்சிக்காரர்கள் சிலரை திருப்திப்படுத்துவதற்காக கஜானாவை காலி செய்வது சரியா!?' என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்புகிறார்கள்.
-சுந்தரபாண்டியன்
நொறுக்கலாமா இப்படி?
கள்ளக்காதல் விவகாரத்தில் தாங்கள் நடத்திய கட்டப்பஞ்சாயத்துக்கு உடன்படாத, ஒரே சமூகத் தவர்களின் 17 வீடுகளை அடித்து நொறுக்கி சூறையாடியிருக்கின்றது அமைச்சர் தரப்பு.
சிங்கப்பூரில் பணியாற்றும் பாண்டியின் மனைவி வசந்தி, தன்னுடன் நெருக்கமான தொடர்பிலிருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவருடன் தீபாவளிக்கு மறுநாள் எஸ்கேப்பாகியுள்ளார். சிவகங்கை மாவட்டம் தமறாக்கியில் நடந்த இவ்விவகாரம் காவல்துறைக்கு செல்லாமலே, உள்ளூரில் உள்ள காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய அமைச்சர் பாஸ்கரனிடம் சென்றது. அந்தக் கள்ளக்காதல் பஞ்சாயத்தை தன்னுடைய மைத்துனர் அய்யனார், மகன் விஜய் மற்றும் மருமகனான இன்னொரு விஜய்யிடம் ஒப்படைத்தார்.
வியாழக்கிழமை காலை 11:30 அளவில் எஸ்கேப்பான பெண்ணின் தாயார் தரப்பு ஆட்களுடன் சேர்ந்து, 17 தலித் வீடுகளை அடித்து நொறுக்கியுள்ளது அமைச்சர் தரப்பு.
""அந்தப் பெண்ணைக் கூட்டிச்சென்ற தினேஷ்குமார் குடும்பத்தினருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவன் செய்தது தவறு என்பது உண்மை. எனினும், அவனுடைய சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதாலே நாங்களும் தாக்கப்பட்டிருக்கோம், இது நியாயமா..? என் வீட்டோடு சேர்த்து மொத்தம் 17 வீடுகள் நொறுக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு காவல்துறை வந்து பார்த்துச் சென்றதோடு சரி... நடவடிக்கை இல்லை. இது அத்தனைக்கும் காரணம் அமைச்சர் பாஸ்கரனும், அவருடைய குடும்பத்தார்களுமே'' என்கிறார் நொறுக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்களில் ஒருவரான சரவணன்.
அமைச்சரை தொடர்புகொண்டோம்... பதிலில்லை.
-நாகேந்திரன்