காமச்சேட்டை கான்ஸ்டபிள் சஸ்பெண்ட்!

கடலூர் மாவட்டத்தில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது வேப்பூர் காவல்நிலையம்.

signal

வேப்பூர் காவல்நிலையத்திற்கு, மூன்று கி.மீ. தொலைவில் உள்ள இராமநாதபுரம் கிராமத்தில் இருந்து போன் வந்தது.

Advertisment

""அய்யா! வீட்டுக்குள்ள நுழைஞ்ச திருடனைப் புடுச்சு அடிச்சுக் கம்பத்தில கட்டிப் போட்டிருக்கோம். உடனே வாங்கய்யா'' பதட்டத்தோடு சொன்னார்கள். காவலர்களுடன் அந்தக் கிராமத்துக்கு விரைந்தார் இன்ஸ் டைமண்ட் துரை.

அங்கே கட்டிக் கிடந்த "திருடனை' பார்த்ததும் இன்ஸ்பெக்டரும் மற்ற காவலர்களும் அதிர்ந்தார்கள். கட்டிக் கிடந்தது வேப்பூர் காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் ரமேஷ்.

""யோவ்! இவர் எங்களோட வேலை செய்ற போலீஸ்காரர். இவரா திருட வந்தார்?'' ஆவேசமானார் இன்ஸ்.

Advertisment

""திருட வந்திருந்தாக் கூட விட்டு விடலாம். அதோ அந்த வீட்டு மருமகள் கர்த்தவ்யாவுடன் உல்லாசமா இருக்கணுமாம். அந்தப் பொண்ணு இந்த கான்ஸ்டபிள் ரமேஷை பார்த்தது கூட கிடையாது. அந்த நாலாவது வீட்டுக்கு ஏதோ என்கொயரிக்கு வந்த ரமேஷ், கர்த்தவ்யாவை பார்த்திருக்கான். கர்த்தவ்யா புருஷன் வெளிநாட்ல இருக்கிறதை தெரிஞ்சுகிட்டு, நாலாவது வீட்டுக்காரிகிட்ட கர்த்தவ்யா போன் நம்பரை வாங்கிட்டு போயிருக்கான். ஒரு வாரமா ராப்பகலா போன் போட்டு கர்த்தவ்யாவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்திருக்கிறான். கர்த்தவ்யா ஊரார்களிடம் சொன்னதால, ரமேஷ் பேசுறதை ரிக்கார்டு பண்ணச் சொல்லி பிறகு இங்கே வரவழைச்சு, தர்ம அடி குடுத்து கட்டி வச்சிருக்கோம்'' என்றார்கள் அந்தக் கிராமத்து மக்கள்.

ஏற்கனவே வேலை செய்த ஊர்களிலும், இப்படிப்பட்ட காமச்சேட்டைகளால்தான் டிரான்ஸ்பராகி வேப்பூர் வந்திருக்கிறான் கான்ஸ்டபிள் ரமேஷ்.

விஷயம் டி.எஸ்.பி. தங்கவேலுவுக்கும் எஸ்.பி. சரவணனுக்கும் சென்றது. உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார் காமச்சேட்டை கான்ஸ்டபிள் ரமேஷ்.

-எஸ்.பி.சேகர்

அண்ணாவின் படைப்புக்குத் தடை!

signal

அறிஞர் அண்ணா எழுதிய ""நீதி தேவன் மயக்கம்'' எனும் நாடகம் 2017-2020ஆம் கல்வியாண்டுக்கு உரிய முதுகலை தமிழ் இலக்கியப் பாடத்தில் இடம் பெற்றிருக்கிறது.

""14 காட்சிகளையும் 81 பக்கங்களையும் கொண்ட இந்த "நீதி தேவன் மயக்கம்' நாடகத்தை நீக்கிவிட்டு, இதற்குப் பதிலாக வேறொரு பாடத்தைச் சேர்க்க வேண்டும்'' என்று அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற 45 கல்லூரிகளுக்கும் 9-11-2018 அன்று கடிதம் எழுதியுள்ளார், அழகப்பா பல்கலைக்கழகக் கல்லூரி வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மையர் ராஜ்மோகன்.

இந்த விஷயத்தைக் கையில் எடுத்திருக்கும் தி.மு.க.வின் சிவகங்கை ந.செ. ஆனந்த், ""அன்னை தமிழுக்கு அருந்தொண்டாற்றிய பேரறிஞர் அண்ணாவின் படைப்பை, பல்கலைப் பாடநூலில் இருந்து நீக்குவதற்கு காரணம் யார்? அண்ணாவின் பெயரில் கட்சி நடத்துகின்ற இன்றைய ஆட்சியாளர்களுக்கு இது தெரியாதா? இவையெல்லாம் திராவிடத்தை நசுக்க நினைக்கும் பா.ஜ.க. அரசின் வேலைதான்'' என்கிறார்.

பல்கலைப் பாடத்திலிருந்து நீதிதேவன் மயக்கத்தை நீக்குவதற்கு ஆணையிட்ட பாடத்திட்டக்குழு தலைவர் துரையோ, ""இக்கால அரசியலைக் கேலி செய்வது போல உள்ளது. அதனால்தான் நீக்க முடிவெடுத்தேன்'' என்கிறாராம்.

அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராஜேந்திரனிடம் இதுபற்றிக் கேட்டோம்.

""என்னைக் கேட்காமல் செய்துவிட்டார். விசாரணை நடக்கும். அதன்பிறகு நடவடிக்கையும் இருக்கும். அண்ணாவின் "நீதிதேவன் மயக்கம்' பல்கலைப் பாடத்தில் நீடிக்கும்'' என்றார் அவர்.

""துணைவேந்தர் ஒப்புக்காகச் சொல்கிறார். மற்றபடி விசாரணை, நடவடிக்கை என்பதெல்லாம் வெறும் சமாளிப்பு. பா.ஜ.க.வின் திராவிட அழிப்புக்கு இவர்கள் உதவி செய்கிறார்கள்'' என்றே திராவிட உணர்வுள்ள பேராசிரியர்கள் பலரும் சொல்கிறார்கள்.

-நாகேந்திரன்

மூடியிருந்தது மூலவர் கருவறை!

signal

பாராளுமன்றத் தேர்தல் ஆனாலும், பஞ்சாயத்து தேர்தல் ஆனாலும் பட்டாளம்மனை வணங்கிவிட்டுத் தேர்தல் வேலையைத் தொடங்குவது துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.சின் வழக்கம்.

ஓ.பி.எஸ்.சின் சொந்த ஊரான பெரியகுளம் தொகுதியில் கள்ளுப்பட்டியில் உள்ளது புகழ்பெற்ற இந்தப் பட்டாளம்மன் கோயில். முன்பு ஊரார் மேற்பார்வையில் இருந்த பட்டாளம்மன் இப்போது அறநிலையத்துறையின் மேற்பார்வையில் இருக்கிறது.

ஓ.பி.எஸ். மட்டுமல்ல, டி.டி.வி., பார்த்திபன், ஜெயராமன், பொன்.முத்துராமலிங்கம், ஆரூண், செல்லபாண்டியன், மூக்கையா என பல்வேறு கட்சியினருக்கும் ராசியான அம்மன் பட்டாளம்மன்.

தேனி மாவட்டத்தில், பாராளுமன்றப் பணிகளை முடுக்கி விட்டிருக்கிற ஓ.பி.எஸ்., ""பெரியகுளத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடத்த வேண்டும். அதற்கு முன்னால் பட்டாளம்மனை கும்பிடணும். 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு போகணும். ஏற்பாடு செய்ங்க'' ஒ.செ. அன்னபிரகாசுக்கு தகவல் அனுப்பியிருந்தார். சொல்லிவிட்டபடி மாலை 4 மணிக்கு பட்டாளம்மன் கோயிலுக்குச் சென்றார். கோயில் கதவு சாத்தப்பட்டிருந்தது.

கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் கதவைத் திறந்து ஓ.பி.எஸ்.சை உள்ளே அழைத்துச் சென்றனர். கோயிலுக்குள் பூசாரி இல்லை. அம்மன் கருவறை நடையும் மூடியிருந்தது. ஓ.பி.எஸ். உட்பட நிர்வாகிகள் அத்தனைபேருக்கும் அதிர்ச்சிதான். அரைமணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும் பூசாரி வரவில்லை.

தீபாராதனை செய்யாமல், பட்டாளம்மனின் திருமுகம் தரிசித்து கும்பிடாமல், மனவேதனையோடு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குக் கிளம்பினார் ஓ.பி.எஸ்.

""கல்லுப்பட்டியில் டி.டி.வி.க்கு தான் ஆதரவு அதிகம். அ.தி.மு.க.வுக்குள் கோஷ்டிப்பூசல் இருக்கு. ஓ.பி.எஸ். வர்றதை பூசாரிக்கு யாரும் சொல்லலையாம்'' ஓ.பி.எஸ். ஆதரவாளர் ஒருவர் வருத்தத்தோடு சொன்னார்.

-சக்தி