""ஏய்... டிஸ்டர்ப் பண்ணாதே!''

ஐம்பது படுக்கை வசதிகளைக் கொண்டது, தஞ்சை மாவட்டம் திருவையாறு அரசு மருத்துவமனை.

Advertisment

signalசுற்றிலும் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் இம்மருத்துவமனையை நம்பியே உள்ளன. 24 மணி நேரமும் மருத்துவரும் செவிலியர்களும் பணியில் இருப்பார்கள்.

போன புதனன்று மகபூப் பாட்ஷா டியூட்டிக்கு வந்தார். வரும்போதே மிதந்தபடிதான் வந்தார். நடக்கும்போதே நடுக்கம் அவரை கீழே விழுத்தாட்டிவிடும் என்று செவிலியர்களும் பொதுமக்களும் பயந்தபடி வேடிக்கை பார்த்தார்கள்.

தடுமாறியபடி அறைக்குள் நுழைந்தார், லுங்கிக்கு மாறினார். பொத்தெனப் படுக்கையில் சரிந்தார்.

Advertisment

அதே நேரத்தில், ""விஷத்தை குடித்துவிட்டார்... காப்பாற்றுங்கள்'' என்ற அபயக்குரல் எழுப்பியபடி ஒருவரை தூக்கிக்கொண்டு உறவினர்கள் ஓடிவந்தனர். டூவீலரிலிருந்து விழுந்து ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு இளைஞரை தூக்கிக்கொண்டு வேறுசிலர் ஓடிவந்தனர்.

செவிலியர்கள் ஓடிப்போய் டாக்டர் மகபூப் பாட்ஷாவை எழுப்பினார்கள், கெஞ்சினார்கள். எரிச்சலோடு விழித்து முறைத்த போதை மருத்துவர், ""முடிஞ்சா நீங்களே பாருங்க, இல்லைனா தஞ்சாவூருக்கு வெரட்டுங்க... என்னை டிஸ்டர்ப் பண்ணாதே'' எரிந்து விழுந்தார்.

அவசர நோயாளிகளுக்கு முதலுதவி அளித்த செவிலியர்கள் தலைமை மருத்துவர் மோகன்ராஜுவுக்குத் தகவல் கொடுத்து வரவழைத்தனர். வந்து சிகிச்சையளித்த தலைமை மருத்துவர், மாவட்ட மருத்துவப்பணி இணை இயக்குநர் மோகனிடம் தகவலைக் கூறினார்.

Advertisment

பணி நேரத்தை மதுபோதையில் கழித்த டாக்டர் மகபூப் பாட்ஷா, இப்போது திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ""அவர்மீது துறை ரீதியான விசாரணை நடைபெறுகிறது'' என தலைமை மருத்துவர் மோகன்ராஜு கூறினார்.

-க.செல்வகுமார்

""அமைச்சர்களுக்கு அமாவாசை ஆகாதா?''

தேவார மூவரில் சிறப்புப் பெற்றவர் சுந்தரர் என்ற சுந்தரமூர்த்தி நாயனார்.

signalசுந்தரரை தனக்கு அடிமை என ஓலைச்சுவடி ஆதாரத்தைக் காட்டி வென்றார் சிவபெருமான் என்று சேக்கிழார், பெரியபுராணத்தில் புகழ்வார்.

அத்தகைய, சுந்தரர் பிறந்த திருத்தலம் திருநாவலூர். திருநாவலூரில் சுந்தரருக்கு ஒரு திருக்கோயில் உள்ளது. அந்தக் கோயில் பராமரிப்பின்றி பழுதுபட்டுக் கிடந்தது.

கோவையைச் சேர்ந்த "தம்பிரான் தோழர்' என்ற அறக்கட்டளையினர், திருநாவலூர் சுந்தரர் கோயிலையும் மடத்தையும் புதுப்பித்து குடமுழுக்கு நடத்த விரும்பினர். உள்ளூர் அர்ச்சகர்களோ, "கோயில் எங்களுக்கு உரியது' என்று போர்க்குரல் எழுப்பினார்கள்.

ஆனால் அறநிலையத்துறை நீதிமன்ற ஆணைப்படி அறக்கட்டளை சிவனடியார்கள், பெரும் பொருட்செலவில் கோயிலையும் மடத்தையும் புதுப்பித்து, குடமுழுக்குக்கு நாள் குறித்தனர். அழைப்பிதழும் தயாரானது.

07-11-2018 அன்று நடைபெறும் திருநாவலூர் சுந்தரர் கோயில் குடமுழுக்கில் "அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், கருப்பணன், சி.வி.சண்முகம், எம்.எல்.ஏ. குமரகுரு ஆகியோர் கலந்துகொள்வார்கள்' என அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது.

ஆனால், குடமுழுக்கு விழாவில் அமைச்சர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை... ஏன்?

"நிறைந்த அமாவாசை அன்று குடமுழுக்கு நடக்கிறது. இந்த அமாவாசை குடமுழுக்குவில் கலந்துகொண்டால் ஆட்சிக்கு பெருநாசம் ஏற்படும்'' என்று "சாஸ்திரம்' அறிந்த உள்ளூர் அர்ச்சகர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்ததோடு அமைச்சர்களையும் எச்சரித்தார்களாம். அதனால்தான் சுந்தரர் கோயில் திருக்குடமுழுக்குக்கு அறநிலைய அமைச்சர் உட்பட எந்த அமைச்சரும் வரவில்லையாம்.

-எஸ்.பி.சேகர்

""அமைச்சர்களுக்கு அமாவாசை ஆகாதா?''

signal

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் 13-ஆவது துணைவேந்தராக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தால் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்.குமார். "தோட்டக்கலைத் துறையில் முதல்வராக இருந்து, கற்பித்தலில் 30 ஆண்டுகாலம், 22 ஆண்டுகாலம் பேராசிரியர், 8 புத்தகங்களை எழுதி, ஆராய்ச்சி படிப்புகளுக்கு 13 பேருக்கு வழிகாட்டியாகவும், 18 ஆராய்ச்சி கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார் குமார்' என கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.

ஆனால் "புதிய வி.சி.யாக கவர்னரால் நியமிக்கப்பட்டுள்ள என்.குமாரைப் பற்றி இன்னொரு தகவலையும் சொல்லியிருக்கலாம்' என்கிறார்கள் வேளாண்துறையின் பாதுகாப்பு அதிகாரிகள்.

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு மரங்களை வெட்டி 5,000 ரூபாய்க்கு பில் போட்டு சனிக் கிழமையன்று பல்கலைக்கழகத்தில் இருந்து கடத்திய ஒருநபர், வேளாண் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ராஜமாணிக்கம் என்பவரிடம் வசமாய் பிடிபட்டார். பிடிபட்ட அவர் மீது கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. பின்பு அவர் கோவையில் இருந்து டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். பின்பு எப்படியோ கோவைக்கே வந்துவிட்டார். அவர்தான் கவர்னர் அலுவலகம் புகழ்ந்து சொல்லியிருக்கும் இந்த புதிய துணைவேந்தர் என்.குமார்.

"சொந்த ஊர் நாகர்கோவில் என்பதால், மந்திரி தயவில் இந்தப் பதவியை வாங்கியிருக்கிறார் குமார் என்பதையும் கவர்னர் அலுவலகம் கூடுதல் தகவலாய் சொல்லியிருக்கலாம்...' என சிரிக்கிறார்கள் விஷயமறிந்த வேளாண் அதிகாரிகள்.

-அருள்குமார்