தீபாவளி சீர்!
திருநாவலூர் காவல்நிலையத்தில், காலையில் ரோல்கால் கடந்தபோது இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் காவலர்களிடம் சொன்னார். ""இன்னிக்கு நம்ம ஸ்டேஷனுக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரெய்டு செய்ய வர்றாங்களாம்... ஜாக்கிரதையாக இருங்கள்'' என்று எச்சரித்தார்.
விழுப்புரம் மாவட்டத் திலுள்ள இந்தக் காவல் நிலையத்துக்கு அன்று மாலையே லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. தேவநாதன், இன்ஸ் எழிலரசி தலைமையிலான டீம் வந்தது. விடிய விடிய ரெய்டு.
இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ் அறையிலிருந்து, இரண்டு லட்சத்து முப்பதாயிரம் ரூபாயை கைப்பற்றினார்கள். சிவகாசியிலிருந்து டெம்போவில் வரவழைக்கப்பட்ட நூறு பண்டல் பட்டாசு, எண்பது ஜோடி பேண்ட்-சர்ட் பாக்கெட்டுகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள்.
இதோடு நின்றுவிடாமல் இன்ஸ் ஆதிலிங்க போஸுக்கு தீபாவளி மொய் அளிப்பதற்காக நின்ற "கஸ்டமர்'களையும் விசாரித்தது ல.ஒ. டீம்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்திலிருந்து பனிஷ்மெண்ட் வாயிலாக இங்கே அனுப்பப்பட்டவர் ஆதிலிங்க போஸ்.
""மணல் கடத்தல் கும்பல், பாண்டிச்சேரி சரக்கு கடத்தல் கும்பல்தான் இவருடைய மாமூல் வட்டாரம். கட்டப்பஞ்சாயத்துக்கு தனியே டீம் வைத்திருக்கிறார். காணிக்கை இல்லாமல் யாரும் புகார் கொடுக்க முடியாது. இவைகளுக்காகவே இந்த ஸ்டேஷன் முன்னால் "லஞ்ச சீர்' கொடுக்கும் போராட்டம் நடத்தினோம்'' என்றார் சி.பி.எம்.எல். கட்சி மா.செ. வெங்கடேசன்.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் லிஸ்ட்டில் கையெழுத்துப் போட மறுத்தார் இன்ஸ் ஆதி. ""போடவில்லையென்றால் ரிமாண்ட்தான்'' என்றார் ல.ஒ.டி.எஸ்.பி. தேவநாதன். அதன்பிறகே கையெழுத்துப் போட்டார்.
ஆதிலிங்க போஸை கைது செய்யவில்லை. ஆயுதப் படைக்கு மாறுதல் செய்திருக்கிறார் எஸ்.பி. ஜெயக்குமார்.
-எஸ்.பி.சேகர்
தீபாவளி சம்திங்!
பெங்களூருவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் உறவினர்கள் 30 பேர் தஞ்சை, வேளாங்கண்ணி, நாகூர் சுற்றுலா வந்தனர்.
ரயிலில் வந்த அவர்கள் தஞ்சைப் பெருவுடையார் கோயிலைப் பார்த்தார்கள். அங்கிருந்து மினிபஸ்ஸை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வேளாங்கண்ணிக்கும் நாகூருக்கும் போய்விட்டு திரும்பி திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர் என்ற இடத்தில் வந்தபோது லுங்கி கட்டிய இரண்டு ஆசாமிகள் மினிபஸ்ஸை நிறுத்தச் சொல்லி சைகை காட்டினர்.
ஓட்டுநர் நிறுத்தவில்லை. இரண்டு ஆசாமிகளும் மினிபஸ்ஸை துரத்தி, வழிமறித்து நிறுத்த வைத்தனர். ஓட்டுநர் மீது பாய்ந்தார்கள். பஸ்ஸுக்குள் புகுந்து, ""நாங்க மதுவிலக்கு போலீசார்... எல்லா பேக்கையும் திற'' கட்டளையிட்டார்கள். ""அடையாள அட்டையைக் காட்டு'' பெண்கள் ரூல்ஸ் பேசினார்கள். பெண்களின் ஹேண்ட் பேக்குகளைப் பறித்து திறந்து பார்த்த இருவரையும் சுற்றிநின்று தாக்கினார்கள் அந்தப் பெண்கள்.
ஏற்கனவே டாஸ்மாக் போதையால் நிதானமில்லாமல் உளறிய இருவரும் உண்மையிலேயே மதுவிலக்கு கான்ஸ்டபிள்கள்தான். தீபாவளி வரும்படிக்காக ஏதோ செய்யப்போய் அடிபட்டு, வைப்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்கள்.
போலீசாரை விட்டுத்தர முடியுமா? மினிபஸ்ஸிலிருந்த 20 பேரையும் வைப்பூர் காவல்நிலையத்துக்கு கூட்டிச் சென்று விசாரணை என்ற பெயரில் உட்கார வைத்தார்கள். ""7:00 மணிக்கு ரயில்'' என்று அவர்கள் கூறியதை காதுகளில் ஏற்றிக்கொள்ளவில்லை அந்தக் காவல்நிலைய காக்கிகள்.
விஷயம் பத்திரிகையாளர்களுக்குத் தெரிந்ததும், பசும்பொன்னில் இருந்த எஸ்.பி. விக்கிரமனுக்கு தெரிவித்தார்கள். அவருடைய உத்தரவுக்குப் பிறகே சுற்றுலாப் பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.
அலம்பல் செய்த இரண்டு காக்கிகளுக்கும் மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிட்ட தோடு, அவர்களை ஏ.ஆர். போலீஸ் பிரிவுக்கு மாற்றவும் செய்தார் எஸ்.பி.
-க.செல்வகுமார்
தீபாவளி பரிசு!
இது தீபாவளிக்கு முன்பாக நடந்த நெகிழ்வான நிகழ்வு. கடலூர் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த சந்திரிகா என்ற இளம்தாய் காய்ச்சல் கண்ட தன் குழந்தையோடு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். குழந்தைக்கு மருந்து, மாத்திரை வாங்கிக்கொண்டு சிதம்பரம் பேருந்து நிலையம் வந்தார். டாய்லெட் போனார். பின்னால் வந்த ஒரு பெண்மணி, ""ஏம்மா... குழந்தையோடு கக்கூஸ் போகலாமா? குழந்தைக்கு இன்பெக்ஷன் ஆகும்ல? குழந்தையை என்கிட்ட தந்துட்டுப் போ... சீக்கிரம் வா'' தன்மை யோடு பேசினார்.
குழந்தையைக் கொடுத்துவிட்டு கழிவறைக்குள் சென்று வெளியே வந்து பார்த்தால், குழந்தையோடு அந்தப் பெண்மணி மாயமாகிப் போயிருந்தார். பயணிகளும் சேர்ந்து தேடினர். கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தையை தவறவிட்ட சந்திரிகாவை அழைத்துப் போய், சிதம்பரம் காவல்நிலைய எஸ்.ஐ. நாகராஜ் முன்னால் நிறுத்தினர்.
எஸ்.ஐ. நாகராஜின் வலைத்தளத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள், செய்தியாளர்கள், காவல்துறையினர், சமூக செயல்பாட்டாளர்கள் என பத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் நண்பர்களாக உள்ளன.
சந்திரிகாவின் குழந்தை கடத்தப்பட்ட செய்தியை தனது வலைத்தளத்தில் பதிவிட்டார் எஸ்.ஐ. நாகராஜ். குழந்தையைக் கடத்திய பெண்மணி, குழந்தையுடன் ஆட்டோ ஸ்டாண்டுக்குச் சென்றார். ""ஏம்மா இது உங்க குழந்தையா? பஸ் ஸ்டாண்ட்ல ஒரு குழந்தையை யாரோ கடத்திட்டாங்களாம்'' அந்தப் பெண்மணி யிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் சொன்னார்கள்.
சமாளித்த அந்தப் பெண்மணி வேகமாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கே அறிமுகமில்லாத ஒரு மூதாட்டியிடம் ""பாத்ரூம் போயிட்டு வர்றேன்... அதுவரை...'' குழந்தையை ஒப்படைத்து விட்டு மாயமானார்.
ஒருமணி நேரத்திற்குப் பிறகு அந்த மூதாட்டி மூலம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தகவல் தெரிந்து, எஸ்.ஐ. நாகராஜிடம் ஒப்ப டைக்கப்பட்டு, தாய் சந்திரிகாவிடம் சேர்க் கப்பட்டது குழந்தை.
-அ.காளிதாஸ்