Skip to main content

சிக்னல்!

விழாவில் அமைச்சர்! வீட்டுக்காவலில் எம்.எல்.ஏ.!

signal

கள்ளக்குறிச்சி தொகுதி, தியாகதுருவம் ஒன்றியம், குடியநல்லூர் ஊராட்சியில் சேவை மையம் மற்றும் சுகாதார நிலையத் திறப்பு விழா 28-04-18 அன்று நடந்தது.

இதில் மா.செ. குமரகுரு, அமைச்சர் சண்முகம், ஆட்சியர் சுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டனர். ஆனால், இந்தச் சேவை மைய, சுகாதார நிலைய கட்டடங்களைக் கட்டிய, கட்டக் காரணமான எம்.எல்.ஏ. (தினகரன் அணி) பிரபுவை விழாவிற்கு அழைக்கவில்லை. அழைப்பிதழில் எம்.எல்.ஏ. பெயரைப் போடவுமில்லை.

மாலை 4 மணிக்குத் தொடங்கிய விழா 5 மணிக்கு முன்பே முடிந்துவிட்டது. என்ன வேகம், மின்னல் வேகம்... இவ்வளவு அவசரகதியில் நூற்றுக்கணக்கான போலீசாரை குவித்து நடத்தவேண்டிய அவசியமென்ன?

"நான் இல்லாமல் என் தொகுதியில் அரசு விழாவா? பார்த்துவிடுகிறேன் ஒரு கை என்று சவால் விட்டிருந்தாரே எம்.எல்.ஏ. பிரபு, ஏன் வரவில்லை?' ஒன்றிய அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.

""எம்.எல்.ஏ. பிரபு இங்கே வந்தால் நிச்சயம் கலவரம் ஆகிவிடும். சில நாட்கள் முன்னால் இங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை போட வந்தார் எம்.எல்.ஏ. பிரபு. அப்போது அமைச்சர் மோகனின் ஆட்கள், "நீ தினகரன் ஆள். மாலை போடக்கூடாது' என்று தடுத்தார்கள். பெரிய அடிதடி ஆகிவிட்டது. அதைப்போல இன்றும் நடந்துவிடக்கூடாது என்றுதான் பிரபு எம்.எல்.ஏ. வீட்டைச் சுற்றி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் முந்நூறு, நானூறு போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். அதையும் மீறி எம்.எல்.ஏ., தனது ஆட்களோடு புறப்பட்டிருக்கிறார். சேலம் சாலையில் தடுத்து நிறுத்திவிட்டது போலீஸ். எம்.எல்.ஏ. தரப்பு சாலை மறியலில் ஈடுபட்டது. அனைவரையும் கைதுசெய்து கல்யாண மண்டபத்தில் வைத்திருந்தார்களாம். அதனால்தான் அவசர அவசரமாக விழாவை முடித்துக்கொண்டார்கள்'' பெருமூச்சுவிட்டபடி சொன்னார் அந்த அதிகாரி!

-எஸ்.பி.சேகர்

நில சர்ச்சையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.!

karunanidhiஅமைச்சராகியிருக்கவேண்டிய அ.தி.மு.க. சி.ஆர்.சரஸ்வதியை தோற்கடித்தவர் பல்லாவரம் எம்.எல்.ஏ. தி.மு.க. கருணாநிதி.

இவர்மீது நில அபகரிப்பு குற்றச்சாட்டைக் கூறி தீக்குளிக்க முயன்றிருக்கிறது முன்னாள் ராணுவ வீரரும், காங்கிரஸ் தியாகியும், சமூக சேவகருமான ஸ்டீபன் நல்லானின் குடும்பம்.

ஸ்டீபன் நல்லானுக்கு 1952-இல் ஜமீன்பல்லாவரம் மலகாநந்தபுரத்தில் 52 செண்ட் இடத்தை தானமாகக் கொடுத்தது அன்றைய காங்கிரஸ் அரசு.

இப்போது ஸ்டீபன் நல்லானுமில்லை, அவர் மனைவி கேத்ரினும் இல்லை. இவர்களின் மக்கள்தான் வறுமைப்பாட்டோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அரசு கொடுத்த 52 சென்ட் நிலத்தில் 37 சென்ட் நிலத்தை எவர் எவரோ பங்கு போட்டுக்கொண்டுவிட்டார்கள். இப்போது இருப்பது 15 சென்ட் நிலம்தான். அந்த இடத்திற்குள் நுழைந்த எம்.எல்.ஏ., ""இந்த இடத்தில்தான் நல்ல தண்ணீர் இருக்கிறது. ஏரியா மக்களுக்கு குடிதண்ணீர் சப்ளை செய்யப்போகிறேன். இந்த இடத்தில் "வாட்டர் பிளாண்ட்' அமைக்கப் போகிறேன்'' என்றார் எம்.எல்.ஏ. அதிர்ச்சியடைந்த ஸ்டீபனின் மக்களாகிய ரோசியும், ஆரோக்கியநாதனும், திரைசியும், ""உங்களைப் போன்றவர்களை எதிர்த்து நிற்க எங்களுக்குத் திராணியில்லை. எங்கள் பிணத்தின் மீது உங்கள் வாட்டர் பிளாண்ட்டை கட்டி எழுப்புங்கள்'' என்று தங்கள் தலையில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டார்கள். பயந்துபோன எம்.எல்.ஏ. கருணாநிதி, ""இப்ப போகிறேன்...'' என்று பின்வாங்கிச் சென்றிருக்கிறார்.

signal

ஸ்டீபன் நல்லானின் மகனும் மகள்களும் நம்மிடம், ""போர்வெல் லாரியைக் கொண்டுவந்து நிறுத்தி எங்க நிலத்தை ஆக்கிரமிக்கப் பார்த்தார் எம்.எல்.ஏ. தற்கொலைக்கு முயன்றதும் தற்காலிகமாக போனாரு. கட்டாயம் மறுபடியும் வருவாரு. பல்லாவரம் இன்ஸ்பெக்டர் கூட வந்து எங்க டாகுமெண்ட்டுகளைப் பார்த்தாரு. ஆனாலும் அவராலும் எம்.எல்.ஏ.வை எதிர்க்க முடியலை. எம்.எல்.ஏ.வை எதிர்த்ததால்... மெட்ரோ வாட்டர், பாதாள சாக்கடை கனெக்ஷன்லாம் தரமாட்டேன் என்கிறார்கள்'' கண்கலங்கினார்கள்.

எம்.எல்.ஏ.வை தொடர்புகொண்டோம். அவருடைய அண்ணன் ஜோசப், ""தொகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வேண்டும்... அதற்காகத்தான்'' என்றார்.

-அரவிந்த்

உப்பளத்தில் வாழை விவசாயம்?

signal

தூத்துக்குடி கடற்கரை சாலையோரமுள்ள வெப்பலோடைக் கிராமத்தில் 95 விழுக்காடு நிலங்கள் உப்பளங்கள்தான். எஞ்சிய 5 விழுக்காடு நிலத்தில் ஒருசில இடங்களில் தென்னைகள் வைத்திருக்கின்றனர். இங்கே வாழை, நெல் போன்றவை எப்போதும் பயிரிடுவதில்லை... விளையாது.

இங்குள்ள மக்களின் தேவைக்காக, வெப்பலோடை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. இந்தக் கூட்டுறவு வங்கியின் தலைவராக இருப்பவர் பி.டி.ஆர்.ராஜகோபால். இவர்தான் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராகவும் இருக்கிறார்.

இந்த வெப்பலோடை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில், வாழை விவசாயம் செய்வதாகக் கூறி, தலைவர் உட்பட 39 பேர் 36 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். மற்ற விவசாயம் என்று 31 பேர் 9 லட்ச ரூபாய் கடன் பெற்றிருந்தனர். 2016-இல் வாங்கிய இந்த 70 பேரின் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

""வெப்பலோடையில் உப்பளங்கள்தான் உள்ளன. ஆனால் 39 பேர் வாழை விவசாயம் செய்திருப்பதாக சான்றிதழ் கொடுத்து 36 லட்சத்து 28 ஆயிரத்து 692 ரூபாய் கடன் கொடுக்க வைத்திருக்கிறார் வி.ஏ.ஓ. இது எப்படி?

5 ஏக்கரில் வாழை பயிரிட்டதாக 2 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய தலைவர் பி.டி.ஆர். ராஜகோபாலும் இதில் அடக்கம். சாதாரண மக்கள் உண்மையான விவசாய நில ஆவணங்களை வைத்துக்கொண்டு கிராமநல அலுவலரிடம் சென்றால்... அவர் சான்றிதழ் தருவதில்லை. ஆனால் ஆளும்கட்சிக்காரர்கள் அப்பட்டமான முறைகேடுகளைச் செய்து கொள்ளையடிக்கிறார்கள். இந்த முறைகேட்டை நியாயமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் வெப்பலோடை மக்கள்.

-நாகேந்திரன்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்