ஏவுதளம் அமையாதோ?

குலசேகரன்பட்டினத்தில் அடுத்த ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் எம்.பி. கனிமொழி.

signal2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று பாராளு மன்றத்திலும் இதை வலியுறுத்தியிருந்தார்.

""ஒரு காலத்தில் துறைமுகம், சர்க்கரை ஆலை, ரயில்வே என்று கொடிகட்டி வாழ்ந்த ஊர். இன்றைக்கு வாழ்க்கைக்கு வருமானமற்ற ஊரா போச்சு. எல்லாரும் பட்டணத்தில சம்பாதிக்கிறாங்க. நல்லது கெட்டதுக்கு மட்டும் வந்துட்டுப் போறாங்க. ராக்கெட் ஏவுதளம் வந்தா ஊர் செழிக்கும்'' என்கிறார் தி.மு.க.வின் வர்த்தக அணி ரவிராஜா.

Advertisment

சமீபத்தில் நாகர்கோவிலில் நடந்த விழாவில் பேசிய இஸ்ரோவின் சீனியர் விஞ்ஞானி சிவசுப்பிரமணியம், ""எதற்காக புதிய ராக்கெட் ஏவுதளத்தை இந்த கடற்கரை ஏரியாவில் அமைக்க வேண்டும் என்றால், இங்கிருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் வெடித்துச் சிதறினாலும் இலங்கையிலோ மலேசியாவிலோ விழாது, பாதிப்பு ஏற்படாது. அதிக எடை ராக்கெட்டுகளை அனுப்புவதற்கு, இதுநாள்வரை பிரென்ச் கயானாவைத் தான் நம்பிக் கொண்டிருக் கிறோம். இங்கே அமைத்தால், கயானாவுக்குப் போகவேண்டியதில்லை. புளோரிடா விண்வெளி மையத்திற்கு அடுத்து நாம் பேசப்படுவோம்'' என்று கூறினார்.

ஆனால், இந்தப் பகுதி மீனவ அமைப்புகளோ, ""சேது சமுத்திரத்தை எதிர்ப்பதுபோல, ராக்கெட் ஏவுதளத்தையும் எதிர்ப்போம். ஏனெனில் மன்னார்வளைகுடா கடற்பகுதி கடல் வளத்தை இவை நாசப்படுத்திவிடும்'' என்கின்றன.

திருச்செந்தூர், அடைக்கலபுரம், மணப்பாடு, உவரி, உடன்குடி, வள்ளியூர் பகுதி மக்களோ, ""பயனளிக்கிற எந்தத் திட்டத்தையும் நாங்கள் வரவேற்போம். அறிவிப்போடு நின்றுவிடாமல் ஏவுதளம் வரவேண்டும்'' என்கிறார்கள்.

Advertisment

-நாகேந்திரன்

பதவியையும் பறிப்பார்களோ?

ashokவருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவித்த வழக்கில், புதுச்சேரி தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த்திற்கும், அவருடைய தந்தை பொறியாளர் ஆனந்த் திற்கும் தலா ஓராண்டு சிறைத்தண்டனை விதித்ததோடு, இருவருக்கும் உரிய ஒரு கோடியே 57 லட்ச ரூபாய் சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டிருக்கிறது, புதுச்சேரியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்.

நமது ராஜ்ஜியம் (என்.ஆர்.) காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக்கின் தந்தை ஆனந்தன், புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் தலைமைப் பொறியாளராக 2008-இல் பணி யாற்றியவர். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை குவித்திருப்பதாக வருமான வரித்துறைக்கும் சி.பி.ஐ.க்கும் புகார்கள் சென்றன. சி.பி.ஐ. வழக்குப் பதிந்தது.

பத்தாண்டுகளாக, புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு 2018 அக்டோபர் 30 அன்று வழங்கப்பட்டது.

வழக்கில் பொறியாளர் ஆனந்த், மனைவி விஜயலட்சுமி, மகன் அசோக் (எம்.எல்.ஏ.) மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. வழக்கு நடந்துகொண்டிருந்தபோது விஜயலட்சுமி காலமாகிவிட்டதால் அவர், விடுவிக்கப்பட்டார். தந்தையும் மகனும் தண்டிக்கப்பட்டனர்.

மேல்முறையீடு செய்வதற்கு ஒருமாத கால அவகாசம் கேட்ட தால், தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

""எங்க எம்.எல்.ஏ. அசோக், எங்களுக்கு எந்தப் பிரச்சினையி னாலும் முதல் ஆளா வந்து முன்னாடி நிப்பாரு. அவருக்குத் தண்டனை என்றதும் எங்களுக்குக் கஷ்டமா இருக்கு'' இது தட்டாஞ்சாவடி மக்களின் கருத்து.

தண்டனை பெற்றதால் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த்தின் பதவி பறிபோய்விடுமோ என்ற பயமும் இம்மக்க ளிடம் இருப்பதை அறிய முடிந்தது.

-சிவரஞ்சனி

இடிவதற்காக கட்டுகிறார்களோ?

signal

சிதம்பரம் நகராட்சியில், 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரண்டு வருடமாக நடந்து கொண்டி ருக்கிறது பாதாளச் சாக்கடை விரிவாக்கப் பணிகள்.

சிதம்பரம் நகரில் சேகரிக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிப்புச் செய்வதற்காக மணலூரில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.

இந்தச் சுத்திகரிப்பு நிலையக் கட்டுமானப்பணி களில் ஊழலும் முறைகேடுகளும் தலைவிரித்தாடுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் பறந்தன. கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மணலூர் சுத்திகரிப்பு நிலையக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்வதற்காக வந்தார்.

ஆட்சியரை அழைத்துச் சென்ற பகுதி மக்கள் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தும் சவுட்டு மண லையும், சவுட்டு மணல் எடுக்கப்படுகிற இடத்தையும் அவருக்குக் காட்டினர். கொதித்துப் போனார் ஆட்சியர். சிதம்பரம் நகராட்சி ஆணையரையும் பாதாளச் சாக்கடைத் திட்ட அதிகாரிகளையும் கடிந்து கொண்ட ஆட்சியர் அன்புச் செல்வன் ""நிச்சயமாக தக்க நடவடிக் கைகளை எடுப்பேன்'' என மக்களிடம் உறுதியளித்தார்.

மணலூர் சுத்திகரிப்பு நிலையக் கட்டுமானப் பணிகள் பற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புவன கிரி ஒன்றியப் பொறுப்பாளர் ஜாகீர் உசேன் நம்மிடம், ""வேலை தொடங்கியபோது, நல்ல ஆற்று மணலைத் தான் பயன்படுத்தினார்கள். அதன்பிறகுதான், பக்கத்தி லேயே கிடைக்கிறது என்பதற்காக, களிமண் கலந்த இந்த சவுடு மணலை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதே தரத்தில் கட்டினால், சுத்திகரிப்பு நிலையம் ஆறே மாதத்தில் இடிந்து விழுந்துவிடும்'' என்றார். ஆட்சியர் அன்புச்செல்வன் என்ன நடவடிக்கையை எப்போது எடுப்பார்?

-காளிதாஸ்