முதல்வர் விசிட்டில் மக்களின் மனுக்கள் கிழிப்பு!

கரூர், திருச்சி, புதுக்கோட்டை என சுற்றுப்பயணத் திட்டத்துடன் புறப்பட்டிருந்தார் முதலமைச்சர் எடப்பாடி.

signalகரூரில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தம்பி மகன் திருமணம், மகள் பூப்புநீராடல் விழா என முடித்துக்கொண்டு குளித்தலை வழியே திருச்சிக்கு வந்துகொண்டிருந்தார் முதலமைச்சர்.

பெட்டவாய்த்தலையில் வரவேற்பு. அந்நிகழ்வில் அந்த ஊர் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், கரும்பாச்சலம் பாஸ்கர், செல்வராஜ் மற்றும் பலர் சில கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் எடப்பாடியிடம் கொடுத்தனர்.

Advertisment

"பார்க்கலாம்... செய்துவிடலாம்...' வெண்பற்கள் பளிச்சிடச் சிரித்தவாறே அந்த மனுக்களை வாங்கி வாங்கி தனது செயலாளர்களிடம் கொடுத்தார் எடப்பாடி.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து முதலமைச்சரும் பிரதானிகளும் கிளம்பினார்கள். கூட்டம் கலைந்தது. கீழே சாலையெங்கும் கிழித்தெறியப்பட்ட மனுக்களின் குப்பை. அதைப் பார்த்து எப்படி அதிர்ச்சியடையாமல் இருக்க முடியும்?

""எல்லாமே நாங்க கொடுத்த மனுக்கள்தான். பத்து வருஷமா கரூர்-திருச்சி அரைவட்டச் சாலை கிடப்பில் கிடக்கிறது. திருச்சி குடமுருட்டிப் பாலத்துக்கு நிதி ஒதுக்கியாச்சு. ஆனால் இன்னமும் புதுப்பிக்கப்படலை. முக்கொம்புவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒரு தற்காலிக பாலம் வேண்டும். இவைகளுக்காகத்தான் மனுக்கள் கொடுத்தோம். வாங்கிய இடத்திலேயே கிழித்தெறிந்துவிட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுக்கு முதலமைச்சரும் அவரது ஆட்களும் கொடுக்கிற மரியாதையைப் பாருங்கள்'' அதிக மனுக்களை கொடுத்த காவிரி மீட்புக் குழுவினர்.

Advertisment

-ஜெ.டி.ஆர்.

சொந்த தொகுதியை தவிக்கவிடும் மந்திரி!

வண்டல் ஊராட்சிக்கு உட்பட்ட ஓரடியான் பள்ளம்தான் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் சொந்த ஊர்.

ssmanianநாகை மாவட்டம் வேதாரண்யத்தை ஒட்டியுள்ள வண்டலிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் இரண்டாயிரம் மீனவக் குடும்பத்தினர் வாழ்கிறார்கள்.

இவர்களுக்கான பள்ளிக்கூடங்களும் கடைவீதிகளும் மூன்று கி.மீ. தொலைவிலுள்ள அவரிக்காட்டில் உள்ளன. வறட்சியான மாதங்களில் நல்லாற்றையும் அடப்பாற்றையும் நடந்தே கடந்து சென்றுவிடலாம். ஆறுகளில் தண்ணீர் வந்தால், சாலை வழியாக 13 கி.மீ. பயணித்தாக வேண்டும்.

""வண்டலைக்கும் அவரிக்காட்டிற்கும் நடுவில் இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. இந்த ஆறுகளைக் கடப்பதற்காக 2010-ஆம் ஆண்டில் பத்து கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி தொடங்கியது. எட்டு ஆண்டுகள் கடந்தும் இன்னும் பணிகள் முடியவில்லை. "நிதி பத்தலை. டெண்டரில் எங்களை ஏமாத்திட்டாங்க' என்று காண்ட்ராக்டர்கள் சொல்றாங்க. சொந்த ஊர் பிரச்சினை... இருந்தாலும் தி.மு.க. காலத்தில் கொண்டுவரப்பட்ட பாலம் என்பதால் நமக்கென்ன என்று போகிறார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்'' என்கிறார் ஏரியாக்காரரும் வழக்கறிஞருமான பாரிபாலன்.

அதே பகுதியைச் சேர்ந்தவரும் முக்குலத்துப் புலிகள் அமைப்பின் தலைவருமான ஆறு.சரவணன் நம்மிடம், ""தினமும் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவிகள் மாற்றுத்துணி எடுத்துக்கொண்டுதான் ஆற்றைக் கடக்கிறார்கள். மாணவிகள் திரும்பி வீடு வந்து சேரும்வரை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு காத்திருக்கிறார்கள். அமைச்சர் மணியன் இறால் பண்ணைகளின் சொந்தக்காரர். பாலம் முழுமைபெற்றால் அமைச்சரின் இறால் குட்டைகளுக்கு ஆபத்து என்பதால் பாலப்பணியை முடுக்கிவிடாமல் இருக்கிறார்போல'' என்றார்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியனை தொடர்புகொண்டோம். ""மீட்டிங்கில் இருக்கிறேன், பிறகு பேசுகிறேன்'' என்று லைனை துண்டித்தார்.

-க.செல்வகுமார்

பஸ் ஸ்டாண்ட் பாலிடிக்ஸ்!

புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு திருத்தணியில் இடமா இல்லை? முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியின் விளையாட்டுத் திடலை எதற்காக கையகப்படுத்தியுள்ளார்கள்?

signal

திருத்தணியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை. தமிழக அரசும் நகராட்சியும் ஒப்புதல் அளித்தன. பதினெட்டு கோடி மதிப்பீட்டில் திட்டமும் தயாரானது.

"டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியின் விளையாட்டுத் திடலில்தான் திருத்தணி பஸ் ஸ்டாண்ட்டை அமைக்க வேண்டும்' என்று தீர்மானம் போட்டார் அன்றைய திருத்தணியின் நகராட்சி சேர்மனும் அ.தி.மு.க. ந.செ.வுமான சௌந்தரராஜன்.

""அ.தி.மு.க. ந.செ. சௌந்தரராஜன் வீடு ஒரு குட்டைப் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருக்கு. அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஸ்கூல் விளையாட்டுத்திடல். டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்ததே இந்த ஊர்லதான். அதனாலதான் பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். அந்த இடத்தை பஸ் ஸ்டாண்ட்டுக்கு சேர்மன் ஏன் ஒதுக்கினார்னா அந்தப் பகுதியில் உள்ள தன்னோட நிலங்களின் விலை உயரும் என்பதற்காகத்தான். இதுமட்டுமல்ல, பக்கத்திலுள்ள மலையை வெடிவைத்துத் தகர்த்து விற்பனை செய்து பணம் பார்த்துக்கொண்டிருக்கிறார் அ.தி.மு.க. ந.செ. இவர் மீது புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை'' என்கிறார் திருத்தணி தி.மு.க. ந.செ. பூபதி.

தி.மு.க. ந.செ.யின் குற்றச்சாட்டு குறித்து அ.தி.மு.க. ந.செ. சௌந்தரராஜனிடம் கேட்டோம்.

""அதெல்லாம் பொய்ப் புகார். எது நடக்கிறதோ அது சட்டப்படிதான் நடக்கிறது'' அவசரமாக தொடர்பைத் துண்டித்தார் அ.தி.மு.க. ந.செ.

-அரவிந்த்