தாகம் என்றால் தண்டனையா?
திருவாரூர் திரு.வி.க. அரசுக் கல்லூரியில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக பல ஆண்டுகளாக மாணவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இரண்டாயிரம் மாணவர்கள் பயிலும் இக் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் அமைப்பின் நிர்வாகி மாரிமுத்து, "சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வேண்டும்' என்று மாணவர்களைத் திரட்டி, போராட்டம் நடத்தினார். எரிச்சலான நிர்வாகம், மாரிமுத்துவை கல்லூரியிலிருந்து நீக்கியது.
இத்தகவல் பரவியதும், மாணவர்கள் திரண்டனர். "மாரிமுத்துவை மீண்டும் கல்லூரியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்' என்று கல்லூரி முதல்வர் கீதாவிடம் முறையிட்டனர். அவரோ, மாணவர்களுக்கு எச்சரிக்கை விட்டார். அதன்பிறகே, இருநூறு மாணவிகள் உட்பட முன் னூறுக்கும் அதிகமான மாணவர்கள், நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அத்தனை மாணவர்கள் மீதும் திருவாரூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
இத்தனைக்குப் பிறகும் மாணவர் அமைப்பின் நிர்வாகி மாரிமுத்துவை கல்லூரியில் சேர்க்கவில்லை. ""இன்னும் ஒருசில நாட்களில் அவர் சேர்க்கப்படாவிட்டால் எங்கள் போராட்டம் இன்னும் தீவிரமாகும்'' என்கிறார்கள் திருவாரூர் திரு.வி.க. அரசுக் கல்லூரியின் மாணவர்கள்.
-க.செல்வகுமார்
தீர்ப்பு நாளில் தாக்குதல்!
"பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும்' என்று உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த சில நிமிடங்களில் குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயந்தி பத்மநாதன் வீட்டை முற்றுகையிடத் தொடங்கினார்கள் அ.தி.மு.க. பெண்கள்.
குடியாத்தம் தொகுதியில் நம்மியம்பட்டு அருகிலுள்ள பள்ளிக்குட்டை, இங்குதான் உள்ளது ஜெயந்தி பத்மநாதன் வீடு. சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, இப்போது உயர்நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் உறுதி செய்யப்பட்ட 18 பேரில் ஜெயந்தி பத்மநாதனும் ஒருவர்.
ஜெயந்தி பத்மநாதன் வீட்டை முற்றுகையிட்ட பெண்களும் சில ஆண்களும் கற்களால் தாக்கியதோடு, ஆபாச அர்ச்சனைகளை கொட்டியிருக்கிறார்கள். ஜெயந்தி உறவினர்களுக்கும் முற்றுகையிட்டோருக்கும் இடையில் தகராறு ஏற்பட்ட நிலையில்... உமராபாத் போலீசார் வந்தனர். போலீசார் சமாதானப்படுத்தியும் கூட யாரும் கலைந்து செல்லவில்லை. ஸ்பாட்டுக்கு வந்த ஆம்பூர் டி.எஸ்.பி. சச்சிதானந்தம், ஜெயந்தியின் ஓட்டுநர் மற்றும் தாய்மாமா உட்பட நான்கு பேரை கைது செய்து இழுத்துச்சென்றார்.
""பேரணாம்பட்டு பாசறை ஒ.செ. தீனா என்கிற ரஞ்சித்தோட மனைவி நரியாம்பட்டு கிராமத்தில் கிளர்க்கா இருக்கு. அந்தப் பொண்ணு மூலமா 100 நாள் வேலை செய்த பெண்களை அழைத்துவந்து தகராறு செய்ய வைத்தார்கள். அங்கு வந்த ஆம்பூர் டி.எஸ்.பி. முதல்ல தகராறு செய்தவங்களைத்தான் அழைத்துக்கொண்டு போனார். பிறகு வந்து, "மேலிடத்து உத்தரவு'ன்னு சொல்லி எங்க சைடுல இருந்து 4 பேரை கைது பண்ணிட்டாங்க'' வேதனைப்பட்டார் ஜெயந்தி பத்மநாதன்.
-து.ராஜா
கோர்ட்டை ஏமாற்றிய அர்ச்சகர்!
சென்னை கே.கே. நகர் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் ராம்ஜியை பண மோசடி புகாரில் கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்தது ராயபுரம் காவல்துறை. அர்ச்சகர் ராம்ஜி கைது செய்யப்பட்டது பா.ஜ.க. நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்த நிலையில், அவரை ஜாமீனில் வெளிக்கொண்டு வர பகீரத முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இதனை கடந்த ஜூலை மாதம் நக்கீரனில் விரிவாக எழுதியிருந்தோம்.
இந்தநிலையில், சென்னை ஜி.டி.கோர்ட்டில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார் ராம்ஜி. ஜாமீன் மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், "8 லட்ச ரூபாயை கோர்ட்டில் கட்டிவிட்டு ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம்' என உத்தரவிட்டிருந்தது கோர்ட்! ஆனால், அதனை ராம்ஜி கட்டவில்லை. இந்த நிலையில், கைது செய்யப்பட்டு 60 நாள் முடிந்த நிலையை காரணம் காட்டி ஜி.டி.கோர்ட்டில் ஜாமீன் பெற்றுள்ளார் ராம்ஜி. ஆனால், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கீழ்க்கோர்ட்டில் காட்டாமல் மறைத்து ஜாமீன் பெற்றிருப்பதாக அர்ச்சகர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கீழ்க்கோர்ட்டை ஏமாற்றியிருக்கும் இந்த விவகாரம், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் நிலையில், ஏமாற்றி ஜாமீன் பெற்றிருப்பதை அறிந்து ராம்ஜியின் ஜாமீனை ரத்து செய்யுமாறு கீழ்க்கோர்ட்டை அணுகியிருக்கிறார் ராம்ஜி மீது பண மோசடி புகார் தந்த அப்துல்.
-இளையர்