அமைச்சரை எதிர்த்த ஆட்சியர்!

signalசிவகங்கை மாவட்ட மகளிர் மேம்பாட்டு திட்ட இயக்குநர் அருண்மணியை மாவட்டத்திலுள்ள அமைச்சர் பாஸ்கரனுக்குப் பிடிக்கவில்லை. சிவகங்கைக்கு வந்து ஆறு மாதங்கள் கூட ஆகாத அருண்மணியை, உடனே மாற்ற வேண்டுமென கடிதம் கொடுத்திருக்கிறார் அமைச்சர் பாஸ்கரன்.

உடனே அருண்மணியை வேலைவாய்ப்பு மாநிலத் திட்ட மேலாளராக சென்னைக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டு, அந்த இடத்திற்கு தருமபுரியிலிருந்த சரவணன் என்பவரை அனுப்பியது அரசு.

சிவகங்கை மாவட்ட மகளிர் மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் நாற்காலி காலியாக இருக்கிறதென்று நினைத்து வந்த சரவணனுக்கு ஏமாற்றம். ஏனெனில் அருண்மணி இன்னும் சிவகங்கையில் பணியில் இருந்தார். இந்த நிலையில் தருமபுரியிலிருந்து வந்த சரவணனிடம், ""ஏம்ப்பா... இன்னும் டியூட்டியில் ஜாயின்ட் பண்ணாமல் என்ன செய்றே? போய் ஜாயின்ட் பண்ணு'' என்று அமைச்சர் செல்போனில் ஆணையிட்டிருக்கிறார்.

Advertisment

""இல்லீங்க சார்... அருண்மணி சாரை இன்னும் இங்கிருந்து ரிலீஸ் செய்யலை... டிரான்ஸ்பரை கேன்ஸல் பண்ணிட்டு இங்கேயே அவரை கண்டினியூ பண்ணப்போறதா கேள்வி. சிலநாள் வெயிட்பண்றேன்'' என்றாராம் சரவணன்.

உடனே மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனை தொடர்புகொண்டாராம் அமைச்சர். மாவட்ட ஆட்சியரோ, ""உங்களுக்கு வளைஞ்சு கொடுக்கலைங்கிறதுக்காக ஆறு மாதம்கூட ஆகாத அவரை மாத்தணுமா? என் வேலையை எப்படிப் பார்க்கணும்னு எனக்குத் தெரியும்''னு பொரிந்து தள்ளிவிட்டாராம் மாவட்ட ஆட்சியர்.

-நாகேந்திரன்

Advertisment

மிரட்டிய ஒ.செ.!

signalதிருவாரூர் மாவட்டம் வடகரை கிராம மக்கள் அனைவரும் அ.தி.மு.க.வினர்தான். திருவாரூர் அ.தி.மு.க. ஒ.செ. மணிகண்டனை மீறி இதுவரை அவர்கள் ஏதும் செய்ததில்லை. விவசாயக் கூலிகளான அவர்களுக்கு வேலை கொடுப்பவர் மணிகண்டன்தான்.

வடகரை விவசாயக் கூலியான காசிநாதனின் மூத்த மகள் கார்த்திகா +2 படித்தவர். பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சாத்தங்குடி கோகுலை காதலித்தார் கார்த்திகா. கர்ப்பமுமானார். இன்றைக்கு நாளைக்கு என ஆறு மாதத்தை கடத்திய கோகுல், கடைசியாக கார்த்திகாவிடம், ""நம்ம கல்யாணம் நடக்காது. என் அண்ணன் ஆறு மாதம் முன்பு இறந்து விட்டார். விதவையான என் அண்ணியைத் திருமணம் செய்துகொள்ளுமாறு சொந்தங்கள் கட்டாயப்படுத்துகின்றன'' என்று கையை விரித்தார்.

பஞ்சாயத்து ஒ.செ. மணிகண்டனிடம் சென்றது. ""பையன் சொல்வதுதான் சரி. பையன் வீட்டிலிருந்து ஒரு லட்சத்து பத்தாயிரம் வாங்கித் தருகிறேன். கார்த்திகா அபார்ஷன் செய்து கொள்வதுதான் சரி. என் பேச்சைக் கேட்டால் தொடர்ந்து வேலை தருவேன்'' என்று கார்த்திகா குடும்பத்தை மட்டுமின்றி வடகரை கிராமத்தையே மிரட்டினாராம் ஒ.செ.

வடகரை கிராம மக்கள் காவல்துறை ஒத்துழைப்போடு இரவு 10:30 மணிக்கு ஒரு கோயிலில் வைத்து கார்த்திகா-கோகுல் திருமணத்தை நடத்தி வைத்தனர்.

""என்னோட பேச்சைக் கேட்காம போலீசுக்குப் போயிட்டீங்க. இனிமேல நீங்க எப்படி பிழைக்கிறீங்கனு பார்க்கிறேன். வடகரையிலுள்ள 100 குடும்பத்துக்கும் வேலை கிடையாதுனு சொன்னார் ஒ.செ. மணிகண்டன். ஆனால் ஊர்மக்கள் பயப்படாமல் போலீஸ் துணையோடு எங்கள் திருமணத்தை நடத்தினார்கள்'' மகிழ்ச்சிப் பெருக்கோடு சொன்னார் மணமகள் கார்த்திகா.

-க.செல்வகுமார்

திறந்த அன்றே சரிந்த ஊழல்!

signal

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் ஒன்றியம் பேயாடிக்கோட்டை கிராமத்தில் இருந்து சிறுகாம்பூர், வெள்ளையார்புரம் வழியாக திருவாடானை செல்லும் சாலையில் பாம்பாற்றைக் கடப்பதற்காக, 5 கோடியே 70 லட்சம் செலவில் கட்டப்பட்ட பாலத்தை 4.6.18 அன்று முதலமைச்சர் எடப்பாடி திறந்து வைத்தார்.

திறந்த அன்றே, பாலத்தில் வாகனங்கள் செல்லத் தொடங்கியதும் பாலத்தில் அணைப்பட்ட மண் சரியத் தொடங்கியது. கடந்த சில நாட்களாக மழை பெய்யத் தொடங்கியதும், பாலத்தில் ஏறும் மூன்றுபக்க சாலைகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டு, அந்த வெடிப்புப் பள்ளங்களில் டூவீலர்கள் விழுந்து விபத்துகள் ஏற்பட்டன. பாலப் பக்கவாட்டு தடுப்பு கம்பிகளும், தடுப்புச் சுவர்களும் சரியத்தொடங்கின. கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. அவை திருப்பி விடப்பட்டு, இருபது, முப்பது கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு திருவாடானை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

கடந்தவாரம் பொக்லைன் எந்திரங்களுடன் வந்த அதிகாரிகள் சுரண்டிவிட்டு, மராமத்து வேலைகளைச் செய்தார்கள். ""ரோட்டில் விரிசல் வந்திருக்கு... இதை சரி செய்து விடலாம். பாலம் நல்லாதான் இருக்கு'' சிரிக்காமல் சொல்லிவிட்டுப் போனார்கள் பொ.ப.துறை அதிகாரிகள்.

பேயாடிக்கோட்டை பாலத்தின் கதியைத் தெரிந்துகொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பாலம் பற்றிய அறிக்கை கேட்டிருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் பொறுப்பாளர்களான திருமயம் ரகுபதி, கே.கே.செல்லபாண்டியன், அறந்தாங்கி உதயம் சண்முகம் ஆகியோர் ஊழல் பாலத்தை ஆய்வு செய்து அறிக்கையும் தயாரித்து தஞ்சைக்கு வந்த மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

-இரா.பகத்சிங்